Wednesday, November 29, 2017

திருவான்மியூர் மருந்தீஸ்வரர்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர்

நதிகளை அழித்துவிட்டு, நாவறட்சியால் தவிக்கிறோம். மரங்களை அழித்துவிட்டு மழைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறோம். கடவுள் அளித்த கொடைகளை எல்லாம் தொலைத்துவிட்டு, கடவுளிடம் இன்னமும் வேண்டிக்கொண்டிருக்கிறோம். ஆண்டவன் குடிகொண்ட ஆலயமான இந்த உடம்பை வீணே கெடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தை நாடி அலைந்துகொண்டிருக்கிறோம். கண்ணுக்கு ஒரு மருத்துவர், காதுக்கு இன்னொரு மருத்துவர்... எனத் தேடித் தேடி அலைகிறோம். கண்ணுக்கு எதிரே, ஒரு வைத்தியரை மருந்தீஸ்வரனாக, தொண்டை மண்டலத்து வைத்தீஸ்வரனாக  இருப்பதை அறிந்துகொள்வதே இல்லை. காலம் அறிய முடியாத காலத்திலேயே, அகத்தியருக்கு வந்த வயிற்றுவலியை நீக்க சித்த மருத்துவ முறைகளை, சித்துக்களின் நாயகராம் சிவனாரே வந்து போதித்த இடம்தான் திருவான்மியூர். அங்கு இருப்பவரே மருந்தீஸ்வரர். 

அகிலத்தின் நாயகன், ஓர் ஆவின் பாலை உண்டு செழித்து நின்ற இடம்தான் திருவான்மியூர். ஆம், வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காமதேனு, சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் செல்ல சபிக்கப்பட்டது. சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு. ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டுகொண்டது. பாவம் நீங்க, பாலைச் சொரிந்து வழிபட்டது. ஈசனின் மீது கொண்ட பக்தியின் அவசர மேலீட்டால், லிங்கத் திருமேனி மீது தவறி கால்பட, அதை இன்றும் திருத்தழும்பாக ஏற்றுக்கொண்டு பால்வண்ண நாதராக, அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலமே திருவான்மியூர்.

`வான்மீகம்என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்என்றானது என வரலாறு கூறுகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.தொண்டை மண்டலத்தின் வெகு சிறப்பான பதினெட்டு கிராமங்களில் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது. இங்குதான் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... என பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருந்து வருகிறது. சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றது எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு `சொக்கநாயகிஎனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோரிடம் பேசும் சக்திகொண்டவள் இந்த அன்னை. பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.
 
 கோயில் உள்ளே உள்ள  குளம்

வெளியில் உள்ள குளம் (தெப்பக் குளம்)
அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியதும், சித்த வைத்திய முறைகளைக் கேட்டு அறிந்ததும் இந்த ஆலயத்தின் வன்னி மரத்தின் அடியில்தான். இதனால், இந்த வன்னி மரத்தடியில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்ஸவத்தில் ஒன்பதாம் நாள் ஈசன் அகத்தியருக்குக் காட்சிதருகிறார். அதுமட்டுமா? முக்கியத் திருவிழாவான நடனக்காட்சியையும் ஆண்டுதோறும் வால்மீகி முனிவருக்கு அளித்து வருகிறார். குற்றாலத்துக்குப் பிறகு திருவான்மியூரில் நடக்கும் இந்த நடனத் திருவிழாவே இங்கு சிறப்பானது. சோழர்கால கல்வெட்டுகள் பதினாறைக் கொண்டுள்ள இந்தப் பழைமையான திருத்தலம் திருநாவுக்கரசர் பெருமான், திருஞானசம்பந்த பெருமான் என இருவராலும் பாடப்பெற்றது. இங்கிருக்கும் மருந்தீஸ்வர பெருமான் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கியே இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தரிசிக்க வந்த அப்பையதீக்ஷிதர் என்னும் பக்தரின் வேண்டுகோளுக்காக மனமிரங்கியே மேற்குப்புறமாகத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. இன்று திருவான்மியூர் மார்க்கெட்டாக இருக்கும் பகுதி, அப்போது மங்கள ஏரியாக பெரும் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பையதீக்ஷிதர் தரிசிக்க இயலாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.
 
அருள்மிகு மருந்தீஸ்வரர் - அன்னை திரிபுரசுந்தரி
வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ பெருமான்என்ற பெயரில் உற்ஸவராகவும் கொண்டாடப்படுகிறார். நக்கீரர் உள்ளிட்ட பல புலவர்களாலும் கொண்டாடப்பட்டவர் இந்தப் பெருமான்.  அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள். இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும் இந்த திருத்தலத்து ஈசனும் இறைவியும், காணும்போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். இதை எழுத்தால் மட்டும் உணர முடியாது. ஒருமுறை வந்து தரிசித்துப் பாருங்கள், அதன் பிறகு மருந்தீஸ்வரரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறிவிடும் அதிசயத்தை உணர்வீர்கள். வந்த நோய்க்கு மட்டுமல்ல, நோயே வராமல் காப்பதிலும் இவரே அதிசய வைத்தியர். நம்மிடமிருந்தே பிறக்கும் எல்லா தீமையும், பாவங்களும் நீங்கவும் நீங்கள் இங்குதான் வரவேண்டும் என்கிறது தலபுராணம்.

-வான்மீகீயூர் L.L.சங்கர் (ஆனந்தவிகடனிலிருந்து)

2012-ல் எழுதிய கோயிலை பற்றிய பதிவை காண http://arrowsankar.blogspot.in/2012/07/blog-post_5470.html

 Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms