
ஒரு ஊரிலே ஒருவன் பல பாவங்கள் செய்து கொண்டு
வந்தான். அவனுடைய குரு " இப்படி பாவங்களைச் செய்து ஏன் கெட்டுப் போகிறாய்? இனி
அப்படிச் செய்யாதே..." என்று பல புத்திகளை அடிக்கடி அவனுக்குச் சொல்லி வந்தார்.
அவன் "எல்லாப் பாவங்களையும் என்னால்
விட முடியாது.உம்முடைய சொல்லுக்காக நீங்கள் விடச் சொல்லும் பாவம் ஒன்றை மட்டும் விட்டு
விடுகிறேன் என்றான்.
குருவும் " இனி பொய் சொல்லும் ஒரு
பாவத்தையாவது விட்டு விடு. உண்மை மட்டும் பேசு " என்று கட்டளையிட்டார்.
அதற்கு உடன்பட்ட சீடன் ஒருநாள் இரவு அந்த
ஊரில் அரசனுடைய அரண்மனையில் திருடுவதற்காகப் போய் பதுங்கியிருந்தான்.
அப்போது நகர சோதனைக்காக மாறுவேடம் போட்டுப்
புறப்பட்ட அரசன் அவனைப் பார்த்து விட்டான்.
அவனைப் பார்த்து " இந்த அரண்மனைக்கு
ஏன் வந்தாய்? உண்மையைச் சொல் " என்று கேட்டான்.
திருட வந்த அவனும் அவனுடைய குருவுக்கு அளித்த
வாக்குப்படி, "இந்த அரண்மனையிலே திருட வந்திருக்கிறேன்." என்றான்.
அரசனுக்கோ அவனுடைய உண்மைப் பேச்சு கேட்டு
ஆச்சரியம்.
அவனுடைய செய்கை முழுவதையும் பார்க்க நினைத்து,"நானும்
இங்கே திருடத் தான் வந்திருக்கிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி வைத்துக் கொள்வோம்."
என்றான்.
திருட வந்தவவனும் சம்மதித்தான். அரசனையேக்
காவல் வைத்து விட்டு அரண்மனைக்குள் புகுந்தான்.
அங்கிருந்த ஒரு பெட்டியில் விலையுயர்ந்த
வைரக்கற்கள் மூன்று இருப்பதைப் பார்த்தான். மூன்று வைரக் கற்களை எடுத்தால் பாதியாகப்
பங்கு பிரிக்க முடியாது என்பதால் ஒரு வைரக் கல்லை அங்கேயே வைத்து விட்டு இரண்டு வைரக்கற்களை
மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
உள்ளே மூன்று வைரக்கற்கள் இருந்தன. மூன்றை
சமமாகப் பிரிக்க முடியாது என்பதால் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு ஒன்றை அங்கேயே
வைத்துவிட்டு வந்து விட்டதாகத் தெரிவித்தான். இரண்டு வைரக்கற்களில் ஒன்றை அரசனிடம்
கொடுத்து விட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அரசனுக்கு அவனுடைய உண்மையான பேச்சு பிடித்துப்
போய்விட்டது. அவனுடைய முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அரசனும் உள்ளே சென்று பெட்டியைப் பார்த்தான்
பெட்டியில் ஒரு வைரக்கல் மட்டும் இருந்தது.
மறுநாள் காலையில் அரசன் அமைச்சரை அழைத்து,
"முந்தையநாள் இரவில் அரண்மனைப் பெட்டியிலிருந்த வைரக்கற்கள் திருடு போய்விட்டதாகத்
தெரிகிறது. சென்று சரிபார்த்து வாருங்கள் " என்றான்.
அமைச்சர் பெட்டியைப் பார்த்தான். உள்ளே
ஒரு வைரக்கல் மட்டும் இருந்தது. அந்த ஒரு வைரக் கல்லை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.
"அரசே விலையுயர்ந்த மூன்று வைரக்கற்களும்
காணாமல் போய்விட்டன." என்றான்.
உடனே அரசர், அந்த அமைச்சரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். உண்மை பேசிய அந்த திருடனை அழைத்து வரச் செய்து அமைச்சராக்கினான்.
உடனே அரசர், அந்த அமைச்சரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். உண்மை பேசிய அந்த திருடனை அழைத்து வரச் செய்து அமைச்சராக்கினான்.
உண்மையின் பலன் திருடனைக் கூட உயர்த்தி
விட்டது பாருங்கள்.

3 கருத்துரைகள்:
நல்லா இருக்குது ,சத்தியத்துக்கு எப்பவுமே பலம் உண்டு
Very Good Story! Truth alone Triumphs...
Post a Comment