Sunday, January 11, 2015

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


"பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.

போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.

பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை' என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
"காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. இன்றைய "சீரியல்' உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!





Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தெரிந்த தகவல்களானாலும் நல்ல தகவல்கள்.
மிக்க நன்றி.
இனிய தைப் பொங்கல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms