மாலை நேரத்தில் கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு
படித்துறையில் தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் யோகேசன்.
தனது மேலாடையை ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம் செய்ய ஆயுத்தமானான் யோகேசன்.
தனது மேல் அங்கியின் உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத்துவங்கினான். கங்கையின் ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.
சில மணித்துளிகள் கடந்தது....
“இறைவனே!, என்னை ஆளும் ஈசனே! உன்னருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்...” என கர்ண கொடூரமான குரல்வளத்தில் ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் யோகேசன்.
தன்னைவிட முற்றிலும் எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில் கத்திக்கொண்டிருந்தார்.
குளித்த தேகம், உடலில் ஆங்காங்கே வீபூதி பட்டை, தூய வெண்மையான ஆடை, உட்காரஆசனம், ஜபமாலை என்ற நிலையில் யோகேசன்.
தண்ணீரே பார்க்காத தேகம், உடல் முழுவதும் அழுக்கு, சில மணி மாலைகள் கழுத்தில், தலை முழுவதும் சடையுடன் எங்கோ பார்த்து பெருங்குரலில் கத்தும் அந்த நபர். யோகேசனுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவரை கோபமாக முறைத்தான்.
அவரோ இவனை மதிப்பதாக தெரியவில்லை. ஏதேஏதோ உளறிக்கொண்டே கைகளை மேலும் கீழும் அசைத்து காற்றில் ஏதோ வரைத்து கொண்டிருந்தார்.
இத்தனை வருடங்களாக தினமும் இங்கே மந்திரம் ஜபம் செய்கிறோம் ஒருவரும் இப்படி இம்சை செய்தது இல்லை. அவரை தவிர்த்துவிட்டு கண்களை மூடினால் அவரின் குரல் அதிக சப்தத்துடன் ஏற்றம் அடைவதை உணர்ந்தான்.
பைத்தியக்காரன் என்று பேசாமல் ஜபம் செய்யலாம் என்றால், வேண்டும் என்றே அவன் குரல் எழுப்புவதை போல யோகேசன் உணர்ந்தான்.
தனது ஜபமாலைகளை கீழே வைத்துவிட்டு அவரின் அருகே சென்றான் யோகேசன்.
“ஐயா... தயவு செய்து அமைதியாக இருக்கிறீர்களா... என்னால் ஜபம் செய்ய முடியவில்லை.”
அதுவரை எங்கோ பார்த்து உளறிக் கொண்டிருந்தவர் யோகேசனை நோக்கி தலையை சாய்வாக திருப்பி “ ஜபமா.....அப்படினா?”
“மந்திரத்தை தொடர்ந்து கூறுவது”
“மந்திரமா? அப்படினா?”
யோகேசனுக்கு அவர் விளையாடுவதாகவே பட்டது இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கியவாறு பதில் கூறினான்.
“இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம்”
“ஓஹோ...” என்றவாறே எழுந்து திரும்பி படித்துறையின் படிக்கட்டுகளில் ஏறத் துவங்கினார் அவர்...
அவர் நடந்து செல்லுவதை நிம்மதிப்பெருமூச்சுடன் பார்த்தவாறு நின்றான் யோகேசன்.
இரண்டு படிகள் ஏறியவுடன் திரும்பி....
“மந்திரத்தில் மட்டும்தான் இறைவனின் சக்தி உண்டா? நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே? உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?” என்றார் அவர்.
டக்கென்று ஒரு கணம் அவர் நின்ற திசையை நோக்கி யோகேசனின் உதடுகள் மெல்ல அசைந்தது “ குருவே சரணம்”
கங்கை அமைதியுடன் ஓடிக்கொண்டே .இருந்தது
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்
பிரிண்ட் எடுக்க
Friday, July 31, 2015
Unknown






4 கருத்துரைகள்:
''...நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே?
உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?' ...''
ஆச்சரியமான பதிவு.
முடிவு இதுவென ஊகித்தேன்.
மிக்க நன்றி ஐயா
இரு மாறுபட்ட, ஆனால் ஒரே இலக்கிற்கான நிகழ்வு. அழகான நடையில் அருமையான பதிவு.
Very nice event . it shows how we should be always
Anand
Post a Comment