Thursday, March 9, 2017

ஹோலி திருநாள் 12–3–2017

ஹோலி திருநாள் 12–3–2017

இரண்யகசிபு என்ற அசுரனின்   மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை.

தான் பெற்ற வரங்களால், உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார்? என்ற அகம்பாவம் இரண்ய     கசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும்என்று தன் மகனிடம் கூறினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் மீது இரண்யகசிபுவுக்கு கோபம் ஏற்பட்டது. மகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்திரவதை செய்ய தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை விஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர்; தொடர்ந்து மதம் கொண்ட யானையால் மிதிக்கச் செய்தனர். மலையில் இருந்து உருட்டி விட்டனர்.

ஆனால் இந்த துன்பங்கள் எதுவும் பிரகலாதனை பாதிக்கவில்லை. அவன் நாவில் இருந்து எப்போதும் வெளிப்படும் நாராயணரின் நாமம், அவனை காத்துக் கொண்டே இருந்தது. இரண்யகசிபு தன் மகனை, துன்புறுத்துவதற்கு மற்றொரு முயற்சியை கையில் எடுத்தான். இரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான்.

மீண்டும் ஒரு முறை பிரகலாதனிடம், தன்னுடைய நாமத்தையே உச்சரிக்க வேண்டும் என்று கூறினான் இரண்யகசிபு. ஆனால் நாராயணரே முதல் கடவுள். அவரது நாமத்தையே உச்சரிப்பேன்என்று பிடிவாதமாக இருந்தான் பிரகலாதன். அதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.

அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் எரிந்து ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் அக்னியில் இருந்து வெளிப்பட்டான். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ்   கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.

ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலிஎன்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

 print this in PDF Print Friendly and PDF

3 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹோலி பண்டிகை ஏதற்கு கொண்டாடுகிறார்கள் என்று இப்போது புரிந்து கொண்டேன் மிக்க நன்றி
Mageshwaran

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Informative. nice

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹோலி திருநாள் கொண்டாடும் தகவல் அறிந்தேன் முதல் தடவையாக .
மிக நன்றி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms