Friday, March 31, 2017

முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம்ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. தோ,....

முட்டாள்கள் தினம் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக மறைத்து விடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர். ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், “பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி ஏப்ரல் முட்டாள்கள்” (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

னவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில் “April Fool’s Day”யை, “April Gawk” என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்,” இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

ஏப்ரல் மீன்பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் ஏப்ரல் மீன்என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் “April Fool’s Day” அல்லது “All Fool’s Day” என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, “ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை….. எப்ரல் பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்.

print this in PDF Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அறியாத செய்திகளை அறிந்து கொண்டேன்
நன்றி நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முட்டாள்கள் தினப் பின்னணியை அறிந்தேன். நன்றி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms