Tuesday, April 4, 2017

ஸ்ரீ ராமநவமி

ஸ்ரீ ராமநவமி
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ஏழாவது அவதாரமான ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது.


தெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு. உரிய நேரம் வந்தபோது ராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார்.
அதர்மம் அழித்து, தருமத்தை நிலை நாட்டினார். ராமாவதாரம் என்ற ஒரு அவதாரத்திலேயே ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர்களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக என்று பல அவதாரங்களை எடுத்து அதில் தன்னை நிலைநிறுத்தியவர். எனவே ராமரின் வாழ்க்கை முறையே தனிமனித ஒழுக்க வாழ்க்கை முறை ஆகும். எப்படி வாழ வேண்டும் என்பதை  ஸ்ரீராமரின் வாழ்க்கை முறை நமக்கு கற்று தரும் பாடமாகும்.
ராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில் பிறந்தவர் ராமர். அந்த நாளையே நாம் ராம நவமியாக கொண்டாடுகிறோம்.
ராம நவமி விரதம் இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்ல பட்சம் வரும் பிரதமைத் திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் முதல் வகை கொண்டாட்டமாகும். இதற்கு கர்ப்போஸ்தவம்என்று பெயர். நவமி திதியில் தொடங்கி அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது ஜன்மோதீஸவம்எனப்படும்.
இது இரண்டாவது வகையாகும். எந்த காரியத்தையும் அஷ்டமி, நவமி திதிகளில் செய்வதை மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன. நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்?. எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர்?’ என்று கேட்டனர்.
அதற்கு மகாவிஷ்ணு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும்என்று உறுதி அளித்தார். அதன் படியே ராமர், நவமி திதியில் தசரதர்கோசலை தம்பதியருக்கு மகனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணர், வாசு தேவர்தேவகி தம்பதியருக்கு மகனாகவும் பிறந்து சிறப்பு செய்தனர்.
ராமநவமி விரதத்துக்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தொடக்க நாளில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்பது நாளும் சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைப்பதோடு, ராமருக்குத் துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வழிபடலாம்.
அது முடியாதவர்கள், ராமநவமி தினத்திலாவது இதனைச் செய்வது நல்லது. நவமி திதிக்கு மறுநாள் ராம பாராயணம் செய்ய வேண்டும். இந்த விரத நாட்களில் மட்டுமல்லாது, எப்பொழுதும் ராம ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்புத் தகட்டில் செய்து வைத்தோ வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
காரணம், ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்மேஷத்திலும், செவ்வாய்மகரத்திலும், குருகடகத்திலும், சுக்ரன்மீனத்திலும், சனிதுலாமிலும் ஆக ஐந்து முக்கிய கிரகங்களும் உச்ச ஸ்தானத்தில் இருக்கின்ற ராமபிரானுடைய ஜாதகத்தைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது எத்தகைய சிறப்பைத் தரும் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன!.
ஸ்ரீராமபிரான். காலடி தடங்கள் பதிந்த சில இடங்களைப் பார்ப்போம்.

அயோத்தி: இது ராமர் பிறந்த புண்ணிய பூமி. துளசிதாஸர், கம்பர், தியாகராஜர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ராம நாம ஊற்றின் முக்கிய தலம். வாரணாசி - லக்னோ மார்க்கத்தில் அயோத்தியா ரெயில் நிலையம் உள்ளது.
பக்ஸர்: சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று பல பெயர்கள் கொண்ட பக்ஸர்என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம். பாட்னா - மொகல்சராய் ரெயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.
அகல்யாசிரமம்: கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி - தர்பங்கா ரெயில் மார்க்கத்தில் கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 15 மைல் தொலைவில் அஹியாரி என்ற ஊர் உள்ளது. அங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால், அஹல்யா குண்ட் எனப்படும் அகல்யாசிரமத்தை அடையலாம்.
ஜனக்பூர்: மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இது சீதாமடியில் இருந்து ஜனக்பூர் சாலையை அடைந்து, அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரம் சென்றால் ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ராம்டேக்: இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனராம். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் - சிவனிஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக்.

சபரி ஆசிரமம்: சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி’. இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை மதங்க பர்வதம்என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும், சென்னையி லிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, ராமன் சிவலிங்க பூஜை செய்த இடம் இது. 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிண்டெழுத்தினால்

ஸ்ரீ ராமநவமி வாழ்த்துக்கள்

 print this in PDF Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms