Saturday, April 8, 2017

தெய்வத்திருமணங்கள்

தெய்வத்திருமணங்கள்

ஆண் சக்தியும் பெண் சக்தியும் இணைந்து உண்டாகும் உயிர் சக்தியின் பலனை கூறுவதே தெய்வத்திருமணங்களாகும்.
சக்தியின் உந்துதல் முடிவும் தொடக்கமுமாய் மீண்டும்மீண்டும் இயக்கமாய் மாறும் அதுவே இரு சக்திகளின் இணைவு என்பதை கூறும் இரு மீன்களின் உருவகத்தை காட்டும் மீனராசியான பங்குனி மாதத்தில் நடக்கும் விழாவாகும். பன்னிரண்டாவது மாதமான பங்குனியில், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று போற்றப்படுகிறது. இந்நாளில் தெய்வத் திருமணங்கள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.



இத்திருநாளில் மேற்கொள்ளப்படும் விரதம் கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறப்படுகிறது. இந்த விரதத்தினை முதன்முதலில் பார்வதி தேவி மேற்கொண்டாள் என்பது புராணத்தகவல் ஆகும்.

ஒருசமயம் பார்வதி தேவி, கயிலையை விட்டு தன் பதியைப் பிரிந்து காஞ்சி தலத்திற்கு வந்து தவம்புரிய நேர்ந்தது. அத்தவத்தின் பயனாக இறைவன் ஸ்ரீஏகாம்பரநாதராகத் தோன்றி தேவியை  மணந்தார். 

அந்நாள் பங்குனி உத்திரத் திருநாள். இந்நாளில் சுமங்கலிகள் விரதம் மேற் கொண்டு இறைவனையும் அம்பாளையும் வழிபட, தம்பதி கள் அன்புடனும் சுகமுடனும் வாழ்வார்கள். மேலும், சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய நாளும் இதுவே. அன்னை மீனாட்சியை திருமணம் செய்துகொண்ட இறைவன், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி அருளிய நாள் இதுவென்றும் புராணம் கூறுகிறது.

தெய்வ முகூர்த்த நாளாகக் கருதப்படும் இந்நாளில்தான் ஸ்ரீராமபிரான் சீதாதேவியையும்; லட்சுமணன் ஊர்மிளாவையும்; பரதன் மாண்டவி தேவியையும்; சத்ருக்னன் சுருத கீர்த்தியையும் மணம் புரிந்தனர். மேலும், தேவேந்திரன்- இந்திராணி, அகத்தியர்- லோபமுத்திரை திருமணங்களும் இந்நாளில் நடந்தன.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் துளசி வனத்தில் அவதரித்த ஆண்டாள், ஸ்ரீரங்கநாதரை கணவனாக அடைந்து அவருடன் ஐக்கியமான நாள் பங்குனி உத்திரம்.

திருமாலைப் பிரிந்து பூலோகம் வந்த திருமகள், வஞ்சுளவல்லி நாச்சியாராய் அவதரித்த திருநாளும் இதுவே என்று நாச்சியார் கோவில் புராணம் கூறுகிறது.

தெய்வத்திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில்தான் முருகன்- தெய்வானை திருமணம் நடந்தேறியது. இச்சா சக்தி என்று போற்றப்படும் வள்ளிக்குறத்தி அவதரித்த திருநாள்பங்குனி உத்திரம் என்கிறது கந்தபுராணம்.

மகாலட்சுமியானவள் பங்குனி உத்திர விரதத்தை மேற்கொண்டதால் தான் மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. பிரம்மா- கலைவாணி யின் திருமணமும் இந்நாளில் நடந்தது.

சபரிமலையில் எழுந்தருளியிருக்கும் தர்மசாஸ்தா என்று போற்றப்படும் ஸ்ரீஐயப்பனின் அவதாரத் திருநாள், பங்குனி உத்திரம்.

பாண்டவர்களுள் மிகச்சிறந்த வீரனான அர்ச்சுனன் பிறந்ததும் இந்த நாளில்தான்.

இத்திருநாளில்தான் பூரணா- புஷ்கலா ஆகியோர் ஸ்ரீஐயப்பனையும், ரதிதேவி- மன்மதனையும் மணந்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

அர்ஜுனன் தவம் மேற்கொண்டு, சிவபெருமானிடம் பாசுபாதாஸ்திரத்தைப் பெற்றதும்; மார்க்கண்டேயன் உயிரைக்கவர வந்த எமனை சிவபெருமான் இடதுகாலால் எட்டி உதைத்து விரட்டியதும்; காரைக்கால் அம்மையார் இறைவனுடன் இரண்டறக் கலந்ததும்; இடும்பனானவன் சிவகிரி, சக்திகிரி மலைகளை காவடியாகத் தூக்கிவந்து காவடித் திருநாளைத் துவக்கியதும் இந்நாளில்தான்.

வைணவ சம்பிரதாயத்தை நிலைநாட்டிய புரட்சித்துறவி ராமானுஜர், ஒருமுறை ஸ்ரீரங்கம் பங்குனி உத்திர மண்டபத்தில் பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும்போதுதான் "கத்யத்ரயம்' (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடி சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தை சமர்ப்பித்தபோது, அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக்கொண்டு திருவாய் மலர்ந்தருளினார் என்றும், தாயார் அவரை உபய விபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்பதும் ஐதீகம். அன்றிலிருந்து ராமானுஜர், உடையவர் என்கிற நாமத்திலும் அழைக்கப்படுகிறார்.

கோதை பிறந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது, பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரங்கமன்னார்- ஆண்டாள் திருக்கரங்களைப் பற்றும் கல்யாண மகோற்சவமே. கன்னிப்பெண்கள் இந்த வைபவத்தை தரிசித்தால் அவர்கள் விரும்பிய நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

கயிலாயத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவத்தினைக் கலைக்க மன்மதன் மலர் அம்பினை எய்தான். அவனை இறைவன் கோபத்துடன் நோக்கியபொழுது அவரது நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியால் சாம்பலானான் மன்மதன். இதனையறிந்த மன்மதனின் மனைவி ரதிதேவி, இறைவனை நோக்கித் தவமிருந்தாள். அவள் கண்களுக்கு மட்டும் மன்மதன் காட்சி தருவான் என்ற நிபந்தனையுடன் மீண்டும் மன்மதனை உயிர்ப்பித்தார் சிவபெருமான். அந்த நாள் பங்குனி உத்திரம். இந்த நிகழ்வு நடந்த இடம் அட்டவீரட்டானங்களுள் ஒன்றான திருக்குறுக்கை ஆகும்.

மாயூரத்திற்கு அருகி லுள்ள திருக்குறுக்கைத் தலத்தில் உள்ள காமன் கோவிலில் நடைபெறும் விழாவில் மன்மதன் உயிர்பெற்று ரதியுடன் இணைந்திருக்கும் காட்சி தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

பொதுவாக தியாகராஜர் அருள்புரியும் திருத்தலங்களில் ஸ்ரீதியாகராஜருக்கும்அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுவதில்லை. ஆனால், சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர்- திரிபுரசுந்தரி கோவிலில் பங்குனி உத்திரத்தன்று, அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தம்பதிகள் கலந்துகொண்டு தரிசனம் கண்டால் என்றும் சுகமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.


இதேபோல் சற்று வித்தியாசமான விழா மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. இங்கு பெருமாள் பெண் வடிவம் எடுத்த தலம் என்பதால், அவருக்கு மரியாதை தரும் விதமாக தாயார் மோகனவல்லி படிதாண்டா பத்தினியாக சந்நிதியைவிட்டு வெளிவருவதில்லை. இவருக்கென்று விழாவும் நடைபெறுவதில்லை. இவரது சந்நிதியில் சடாரி சேவையும், பிரசாதமும் கிடையாது. ஆனால், பங்குனி உத்திரத்தன்று பெருமாள், தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும். இங்கு விழாக் காலங்களில் பெருமாளுடன் ஸ்ரீஆண்டாள் மட்டும் பிரதானமாகப் புறப்பாடாகிறாள். இதனை "சேர்த்தித் திருவிழா' என்பர். இந்த "சேர்த்தித் திருவிழா'வில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்வது, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா ஆகும். இந்த விழாவில் தம்பதிகள் கலந்துகொண்டு தரிசிக்க, வாழ்வில் என்றும் வசந்தம் வீசும் என்பர்.

 print this in PDF Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms