Saturday, July 7, 2012

வான்மீகி ஷேத்ரம் எனும் திருவான்மியூர்


திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்  சென்னை - புதுச்சேரிகிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தல வரலாறு: கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி ருனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது புறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகை, முருகன் சந்நிதிகளுன் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இவற்றையடுத்து உள்ள சிறிய வாயில் வழியாக இறைவன் மருந்தீஸ்வரர் கருவறையை அடையலாம். மருந்தீஸ்வரர் கருவறைக்குள் செல்வதற்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தியாகராஜர் மண்டபத்தின் வழியாக உள்ள தெற்கு வாயில் வழியாகவும் வர வசதி உள்ளது. கருவறையில் மூலவர் மருந்தீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.

பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.
மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகளைக் காணலாம். தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன.
கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக அழகுடன் காட்சி தருகின்றனர்.
 திருவான்மியூர் பெயர் காரணம் 
இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர்.
வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிடும்.
அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சமர்த்தன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.
சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.
ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும்நாராயண, நாராயணஎன்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்துயாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்என்றான்.
முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன். ‘தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவு எல்லோரும் இன்று நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப் போக உம்மை தயார் செய்து கொள்ளும்என்று கடூரமாகச் சொன்னான்.
இதற்குள் முனிவருக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. இவன் நின்று பேசுகிறான். பேசிப் பேசி இவன் மனதை நல்வழிக்கு திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.
அப்பாநான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம்
சீக்கிரம் கேட்டுத் தொலையும்
நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? ‘
வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.’
உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத்தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? சொல்.’
என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. முற்றும் துறந்தவரான உமக்கு அதெல்லாம் புரியாது‘.
அது இருக்கட்டும் அப்பா. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார்‘.
அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்‘.
அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?’
இல்லை. அதற்குத் தேவையும் இல்லை‘.
அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா?’
ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது‘.
இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.’
கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்துசுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.
என்னப்பா நடந்தது‘.
சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய்எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லைஎன்று கூறிவிட்டார்கள்
அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை‘.
ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும்
நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே
சுவாமி. என்ன நாமம் அது?’
ராம நாமம்
என் வாயில் நுழையவில்லையே சுவாமி
கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?’
இதுவா சுவாமி. இது மரா மரம்‘.
நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்‘.
ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே
என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்‘.
நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்என்று வணங்கி நின்றான்.
நாரதரும் தன் வழியே சென்றார்.
அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்துமரா மரா மராஎன்று ஜபிக்க ஆரம்பித்தான். அதுராம ராம ராமஎன்று ஒலித்தது.
நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.
அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால்வால்மீகிஎன்று அழைக்கப் பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் அந்த கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்ட வால்மீகி முனிவர்.
வால்மீகி முனிவரின் பெயரினாலே திருவால்மீகியூர்  என்று  அழைத்து திருவான்மியூர் என்று  அழைக்கப்படுகிறது .

நன்றி : திருவான்மியூர் கோவில் வரலாறு -திரு. ராஜகோபால் & வலைப்பதிவுகள் 

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms