வீட்டின் ஓரமாய் கட்டுண்டு கிடந்த நாய் தன்னை
விடுவித்துக் கொள்ள ஏக ரகளை செய்து கொண்டிருந்தது.
“அமைதி அமைதி!” என்றது எதிர்த்தாற் போல் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த
கிளி.
“அமைதியாவது மண்ணாவது! இந்த அடிமை வாழ்விலிருந்து
விடுதலை பெறும் வரை இனி எனக்கு அமைதி என்பதே
கிடையாது!” என்றது நாய்.
“அந்த நாளைக்குத்தான் நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால்.....”
“என்ன ஆனால்?”கேள்வி கேட்டது நாய்.
“மூன்றாவது ஆள் துணையாலே மட்டுமே முடியும்!” என்றது கிளி.
“யார் இருக்கிறார்கள் நமக்கு உதவ?” என முகாரியிட்டது நாய்.
“நான் உதவலாமா?”அருகே வந்து முகத்தை காட்டியது குரங்கு.
“நன்றி! நன்றி!” என ஒருமித்தக் குரலில் நாயும் கிளியும் வரவேற்றன.
அவ்வளவுதான் குரங்கு கூண்டை திறந்தது.
கிளி “விடுதலை! விடுதலை!” என கூவி வானில் பறந்தது.
கட்டை அவிழ்த்தது குரங்கு,”சுதந்திரம்! சுதந்திரம்!” என
கூத்தாடிக் கொண்டே நாய் தெரு நோக்கி ஓடியது.
சிலநாட்களுக்கு பிறகு, தன்னால் விடுதலை பெற்ற
கிளியிடம் கேட்டது குரங்கு “எப்படி இருக்கிறது சுதந்திரம்?”
“ஆனந்தம் ,பரமானந்தம்” என ஆனந்தமுடன் உரைத்தது கிளி.
நாயை நோக்கி, குரங்கு கேட்டது. “எப்படி இருக்கிறது சுதந்திரம்?.”
காலையில் பால்,மத்தியானம் இறைச்சி,மாலையில் ரொட்டி,இரவு
மீண்டும் பால் எனது காலடியில். இது என் பழைய வாழ்க்கை.
ஒரு கவள எச்சில் சோற்றுக்கு, ஓராயிரம் நாய்களோடு ஒவ்வொரு
நாளும் போராட்டம். இது இன்றைய வாழ்க்கை. சுதந்திர வாழ்க்கை.மோசம் போனேன்!.நொந்துப் போய் முனகியது நாய்.
“சுதந்திரத்தில் கூட, சிலருக்கு சுகம் கிடைக்காது போலிருக்கு?”
என்று முணுமுணுத்த குரங்கு மரத்திற்கு தாவியது.
நன்றி : விந்தன் "குட்டிக் கதைகள்"

3 கருத்துரைகள்:
சுதந்திரம் மனதில் இருக்கிறது! என்று உணரவைக்கும் சிறப்பான கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி!
அருமை நண்பரே
குட்டிக்கதை,இருந்தாலும் பெரிய சிந்தனை.
Post a Comment