ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில்
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத
ஸ்ரீவாலீஸ்வரசாமி கோவில்
தொந்தியில்லா கணபதி
உத்தியோகம், திருமணம், பிள்ளைப்
பேறு இம்மூன்றையும் நல்குபவராய் நத்தம் கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீ காரிய
சித்தி கணபதி. சென்னை செங்குன்றத்திலிருந்து கும்மிடிபூண்டி செல்லும் வழியில்
பஞ்செட்டி என்னும் கிராமத்திலிருந்து மேற்கே பிரியும் சாலையில் மூன்று கிலோ
மீட்டர் தொலைவில் உள்ளது நத்தம் கிராமம்.
இந்த கிராமத்தில் தென்மேற்கு மூலையில், அழகுற எழும்பி நிற்கிறது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் தென்மேற்கில் கம்பீர மாக காட்சி தருகிறார் ஸ்ரீ காரிய சித்தி கணபதி. பொதுவாக விநாயகர் என்றாலே தொந்தி தான் நம் கண் முன்னே வந்து நிற்கும். இவரோ தொந்தியில்லா கணபதி.
மேலிருகரங்களில் கோடரியும் ருத்திராட்சமும், ஏந்தி கீழிறு கரங்களில் லட்டுகமும், தந்தமும் பிடித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து. அடிப்பாகம் குறுகலாகவும், இடையே அகன்றும்,மேலே குறுகியும், ஓங்கார வடிவத்தில் நெற்றிக் கண்ணுடன் காட்சி தருகிறார் காரியசித்தி கணபதி.
பொதுவாக விநாயகர் பாசம், அங்குசத்துடன் காட்சி தருவார். இங்கு பிரம்மனுக்கு, உபதேசம் செய்தமையால் கோடரியும் ருத்தி ராட்சத்துடன் காணப்படுகிறார். இந்த தோற்றம் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும்.
தல வரலாறு:-
சிவ தாண்டவத்தை காண தேவர்கள், அனைவரும்
கைலாயம் சென்றனர். அப்போது பிரம்மாவும் சென்றார். அனைத்து தேவர்களும் வழியில்
விநாயகரையும் முருகரையும் வணங்கி பின்னர் பார்வதி பரமேஸ்வரரை பார்க்க சென்றனர்.
பிரம்மா மட்டும் பிள்ளைகள் தானே என்ற ஆணவத்தில் விநாயகரை தாண்டி சென்றார்.
விநாயகர் மவுனச்சிரிப்புடன் நின்றுவிட முருகர் பிரம்மனை அழைத்து நீ யார்? உனது தொழில் யாது என்று கேட்டார். அதற்கு பிரம்மா, நான் படைக்கும் கடவுள் பிரம்மா என்றார். அதற்கு ஆதாரம் எது என்று முருகன் வினவ, பிரணவமெனும், ஓங்காரம மென்று பிரம்மா கூறினார் உடனே முருகர் பிரணவப் பொருள் அர்த்தம் கேட்டார்.
பிரம்மா ரகசியமமாயிற்றே எவ்வாறு கூறுவது என்று தவிக்க பிரணவம் தெரியாத நீ படைக்க வேண்டாம், நானே படைத்துக் கொள்கிறேன், என்ற முருகர் பிரம்மனை சிறையில் அடைத்தார். அவ்வாறு முருகனால் பிரம்மா சிறைபட்ட இடம் ஆண்டார் குப்பம்.
பின்னர் பிரம்மனை விடுதலை செய்யும்படி சிவன் வேண்ட சுவாமி மலையில் சிவனுக்கு உபதேசம் செய்து பிரம்மனை மன்னித்து முருகர் விடுதலை செய்தார். விடுதலை அடைந்த பிரம்மன் மீண்டும் சிருஷ்டியை துவக்க அது வெற்றி பெறவில்லை. இதனால் பிரம்மா கவலையில் ஆழ்ந்தார்.
அப்போது அங்கு நாரதர் வந்து தந்தையே, தம்பியிடம் தண்டனை பெற்றும், அண்ணனை மறந்து போனீர்களே! முழு முதல் கடவுள் விநாயகரை தொழாத காரியம் வெற்றி பெறுமா? என்று கேட்டார். அவரே உபாயமும் கூறினார். தந்தையே நீர் சிறைபட்ட இடத்திற்கு தென் மேற்கே நெல்லிவனம் என்னும் காட்டில் சிவன் உறைந்துள்ளார்.
அந்த தலம் அம்பிகை தன்னுடைய ராகு தோஷம் நீங்க, இறைவனை பூஜித்த தலமாகும். அந்த ஷேத்திரத்தில் நீங்கள் விநாயகனை குறித்து தவம் புரியுங்கள். உங்கள் காரியம் சித்தி அடையும் என்று கூறினார். நாரதர் சொன்னபடி பிரம்மா நெல்லி வனம் வந்து பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்து விநாயகரை துதித்தார்.
இறுதியில் கணபதி காட்சி தந்தார். பிரம்மாவுக்கு மீண்டும் படைப்பு தொழில் கை கூடியது. பிரம்மாவின் அகந்தையை அழித்து ஞானத்தை புகுத்தியதால் கோடரியும் ருத்திராட்சமும் மேல் கரங்களிலும் தொந்தியின்றி "குரு''த்துவமாக முக்கண் ணோடு விளங்குகிறார் காரிய சித்தி கணபதி.
பிரம்மாவின் வேண்டுகோள் படி, அவருக்கு காரியம் சித்தியானபடி அனைவருக்கும், அவரவர் வேண்டுதல்கள் காரியங்கள் சித்தியளிக்க அருள் புரிந்தார். அத்துடன் சிவ தாண்டவம் பார்க்க சென்று சிறைபட்டதால், அந்த சிவ தாண்டவத்தை இங்கே காண வேண்டுமென்று பிரம்மா விரும்ப அதையும் வரமாக தந்தார் கணபதி. பிரம்மனின் காரியம் சித்தியானதால் கணபதி காரிய சித்தி கணபதி ஆனார்.
இவருக்கு ஷோடசமென்னும் 16 நாமாவளிகளினால் அர்ச்சனை செய்து சிதறு தேங்காய் விட்டு வழிபட நாம் விரும்பிய காரியங்கள் சித்தியாகும். திருமணத்தடை உள்ளவர்கள் விரதமிருந்து கணபதிக்கு ரோஜாமாலை சார்த்தி, பச்சரிசி, வெல்லம்,பருப்பு, படைத்து அர்ச்சனை செய்து சிதறு தேங்காய் செலுத்தி வழிபட்டால் விரைவில் திருமணம் கை கூடுகிறது.
பிள்ளைப்பேறு வேண்டுபவர்களும் இவ்வாறு வேண்டுதல் செய்து வெள்ளெருக்கம் விநாயகர் வாங்கி வந்து விநாயகரிடம் வைத்து வழிபட்டு பிரார்த்தனை செய்து எடுத்துச் சென்று வீட்டில் வைத்து வழிபட புத்திரபாக்கியம் கிடைக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, போன்ற கோரிக்கைகளும் சிதறு தேங்காய் வழிபாடு செய்வதால் நிறைவேறுகிறது. இந்த கோயிலின் பிரதான சுவாமியான வாலீஸ்வரர் ஆனந்த வல்லி அம்பிகையை வழிபட ராகு கேது அங்காரக சர்ப்ப தோஷங்கள் விலகும். இங்கு பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளியில் பிரதோஷ தரிசனத்தின் மும்மடங்கு பலன் கிடைக்கும் என்று மயிலை புராணம் கூறுகிறது.
அர்ச்சகர்கள்:-
அ.சாமிநாதகுருக்கள் (ஸ்தானீகர்)
செல்: 9444497425.
சா.சுரேஷ்பாபு குருக்கள்
செல்: 9444091441.
இந்த விநாயகரை வணங்கி சிறுவாபுரி சென்றால் தான் சொந்த வீடு கட்ட முடியும் .சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்று விரும்புவர்கள் சிறுவாபுரி சென்று மனம் உருகி முருகனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆனால் சிறுவாபுரி செல்லும் முன்பு நத்தம் கிராமத்தில் உள்ள காரிய சித்தி கணபதியை வழிபட்டு சிறுவாபுரி சென்றால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும் என்று பழங்கால குறிப்புகள் உள்ளன.
இந்த விநாயகரை வழிபட்டு இந்த ஆலயத்தின் பின்புறமாக செல்லும் வழி வழியாக சிறுவாபுரி சென்று முருகனை வழிபட்டால் அதிக பலன் கிடைக்குமென்று நந்தி ஆருட பலன்களில் கூறப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வரும் வழி:
சென்னை கோயம்பேடு பேருந்து
நிலையத்திலிருந்து: கும்மிடி பூண்டி வழியாக செல்லும் பேருந்துகள் பஞ்செட்டி
நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பஸ் ரூட்;
58 சி,
112,113, 90,90ஏ,
132,133, 533
![]() |
ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில் செல்ல ரூட் மேப் |
செங்குன்றத்திலிருந்து மாநகர பேருந்துகள் :
547, 533,512,558, 558பி,536 இறங்குமிடம் ; பஞ்செட்டி. பஞ்செட்டியிலிருந்து மூன்றுகி.மீ நடந்து வர வேண்டும். ஆட்டோ வசதி வேண்டும் எனில் ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை, அல்லது தச்சூர் கூட்டுச் சாலையில் கிடைக்கும்.
மிகச்சிறந்த பரிகாரத்தலம் :
நத்தத்தில் உள்ள ஸ்ரீஆனந்த வல்லி சமேத ஸ்ரீவாலீஸ்வரசாமி கோவில் மிகச் சிறந்த புண்யாரண்யம் பரிகாரத்தலமாக திகழ்கிறது. வாலி தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து ஸ்ரீவாலீஸ்வரரை பூஜித்து அருள் பெற்றார்.
ஒரு சமயம் அம்பிகைக்கே ராகு-கேது தோஷம் ஏற்பட்டது. அம்பிகை இத்தலத்தில் அமர்ந்து வாலீஸ்வரரை நோக்கி தவம் இருந்து தம் மீதான தோஷத்தில் இருந்து நிவர்த்திப் பெற்றார். அது போல இரணியனைவதம் செய்ததால் ஸ்ரீ நரசிம்மருக்கு தோஷம் ஏற்பட்டது.
இதையடுத்து நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து பூஜித்து தோஷ நிவர்த்தி பெற்றார். அதன் பிறகே அவர் லட்சுமியுடன் சேர முடிந்தது. ரோமசர், பராசரர்,வால்மீகி,அகத்தியர், புலஸ்தியர் ஆகிய சித்தர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளனர்.
இவர்கள் தவிர ஏராளமான ரிஷிகள் வந்து இங்கு பரிகாரம் பூஜைகள் செய்து பலன் அடைந்துள்ளனர். அந்த வகையில் இத்தலம் மிகுந்த பலன்களைத் தரக்கூடிய அருமையான பரிகாரத்தலமாகும்.
ஆனால் இவ்வளவு பழமையான பரிகாரத்தலம் இருப்பதே சென்னைவாசிகளில் பெரும்பாலானவர்களுக்கு இது வரை தெரியாமல் இருந்தது துரதிர்ஷ்டமாகும். இனியாவது இத்தலத்துக்கு சென்று பூஜித்து தோஷ நிவர்த்திப் பெறுங்கள்.
நன்றி :அ.சாமிநாதகுருக்கள் செல்: 9444497425. சா.சுரேஷ்பாபு குருக்கள் செல்: 9444091441. http://thalirssb.blogspot.com/2015/04/sri-kariya-sidhi-ganapathi-temple.html

3 கருத்துரைகள்:
நன்றி நண்பரே
அறியாத ஒரு கோயிலை அறிமுகப்படுத்தியும் வழியும் காட்டிவிட்டீர்கள். நன்றி.
எங்கள் ஊர் ஆலயத்தை பற்றி மிக அருமையாக அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!
Post a Comment