ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு,
மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.
இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லை நில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இந்த ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும். பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர்.
அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.
பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்;
வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
எனவே தமிழர்கள் பல உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.
ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப் படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது.
ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப் பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளது.
மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து
காதல்
பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது தமிழரின் பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.
காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், தமிழக மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை.

3 கருத்துரைகள்:
I can't download your Ebooks could you please give a right link so i can download your Ebooks .
J.Senthilkumar
London
ஏறு தழுவுதல் பற்றிய பதிவு இலக்கியச்சான்றுகளுடன் அருமையாக இருந்தது.
@Senthilkumar Jayaraman Please go to http://arrowinbooks.blogspot.in/ site for books
Post a Comment