தமிழர்கள் பண்டைய காலங்களில் இருந்தே ஆடை அணியத் தொடங்கியதோடு, தங்களின் ஆடைகள் குறித்த கலாச்சாரத்தையும்
உலகிற்கு எடுத்துக்காட்டினர். 2 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி
நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் நம் தமிழர்கள். அத்தகைய ஆடை
பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாக நீண்ட காலமாக நின்று நிலைத்தது
வேட்டியாகும். வேட்டி தமிழர்களின் ஆடைமரபின் அழகான வெளிப்பாடாகும்.
![]() |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் வேட்டியணிந்து |
ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடை அவரது பண்பாட்டை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அந்த நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிபடுத்தும்.
வேட்டி அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் வேட்டி யணிதல்
வழக்கத்திற்கு வந்து விட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். தொல்காப்பியகாலம், சிலப்பதிகார காலத்தில் வேட்டி அணியும்
வழக்கம் இருந்துள்ளது என்பர்.
தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான ஆடையாகவுள்ள வேட்டி, தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக
விளங்குகின்றது. சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு கலாசார முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவது ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச்
சின்னமாக விளங்குகின்றது.
![]() |
மக்கள் திலகமும்,கலைஞரும் |
உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும்
யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது என்பது வேட்டிக்கு
கிடைத்த உலக அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு
மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உயர் நீதிமன்ற
நீதிபதி ஒருவர் வேட்டி கட்டிச் சென்றபோது, அந்த மனமகிழ் மன்ற நிர்வாகம் அவரை அனுமதிக்கவில்லை.
![]() |
வேட்டியில் நடிகர்கள் |
இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இன்றைய தலைமுறையினருக்கு வேட்டியின் முக்கியத்துவத்தைப்
பற்றி தெரியப்படுத்தியது. இதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் ஓட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் வேட்டி கட்டி வருபவர்களை
அனுமதிக்காவிட்டால் அதன் அனுமதி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அவரசச்
சட்டத்தையும் இயற்றி வேட்டிக்கு பெருமை சேர்த்தது.
வேட்டி பெரும்பாலும் வெண்மையான நிறத்தில் இருக்கும். வெளிர்
மஞ்சள் நிறத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி
எனப்படும். இவை திருமணம் போன்ற விசேஷ நாட்களில் பயன்படுத்தப்படும்.
![]() |
வேட்டி |
சில குறிப்பிட்ட நோன்பு சமயங்களில் நீலம், கருப்பு, சிகப்பு அல்லது காவி நிறங்களில் வேட்டி உடுத்துவர். தமிழ்நாட்டில்
திருமணத்தின் போது பெரும்பாலும் மணமகன் பட்டு வேட்டி உடுத்துவது வழக்கமாக உள்ளது.
பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில்
தங்கத்திலான சரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த
ஏதுவாக இருக்கும்.
வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது
உண்டு. நான்கு முழம் வேட்டி, எட்டு
முழம் வேட்டி, கரை வேட்டி போன்றவைகள் அதனுடைய
வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக்
கட்டுவர். இது பஞ்சக்கச்சம் எனப்படுகிறது. அரசியல்வாதிகள் தங்கள் வேட்டிக் கரைகள்
தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவதும் தற்போது வழக்கமாக உள்ளது.
அன்னிய தேசத்தவரும் நம் கலாசார பழக்க வழக்கங்களால் கவர்ந்து இழுக்கப்பட்டு நம்மை போல் வேட்டி, நமது பெண்களது சேலை ஆகியவற்றை அணிந்து மகிழ்கிறார்கள். நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்துவிடாமல் சர்வதேச வேட்டி தினத்தன்று, முதியோர், இளைஞர் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் நமது பாரம்பரிய உடையான வேட்டியை உடுத்துவோம்.

1 கருத்துரைகள்:
அடையாளம் அறிந்தேன், அரிய புகைப்படங்களுடன்.
Post a Comment