Thursday, January 14, 2016

மாட்டுப் பொங்கல் திருநாள்

லகமக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு. முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர். கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன், உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது.


ராமபிரான் பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜைதான் என்கிறது புராணம். சக்கரவர்த்தி திலீபன் பல வருடங்களாக பிள்ளைப் பேறின்றி வேதனையில்ஆழ்ந்திருந்தான். அப்போது, அவன் அரண்மனைக்கு வந்த வசிஷ்ட முனிவர், நந்தினி எனும் பசுவைக் கொடுத்து பூஜிக்கும்படி சொன்னார். அதன்படியே தினமும் அதனை நீராட்டி, தகுந்த ஆகாரத்தைக் கொடுத்து வழிபட்டுவந்தான் திலீபன். அவ்வாறு அதனைப் பேணி வளர்த்துவந்ததன்  பயனாக திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டான்.

வருடங்கள் கழிந்தன. திலீபன் தன் மகனான ரகுவுக்குத் திருமணம் நடத்தி வைத்தான். ஒரு வருடத்திலேயே தந்தையானான்  ரகு. திலீபன் தன் பேரனுக்கு "அஜன்' என்று பெயர் சூட்டி விழா எடுத்தான். கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய அஜனுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்தது. அவனுக்குப் பிறந்த மகன்தான் தசரதன். தசரத சக்கரவர்த்தி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்திய யாகப் பயனால் ராமாவதாரம் நிகழ்ந்தது.

திலீபன் பல வருடங்களுக்குமுன் கோபூஜை செய்த பயனால் மகாவிஷ்ணுவே பூவுலகில் அவதரித்தார்.

பசு குறித்து இன்னொரு புராணத் தகவலும் உண்டு. பிரம்மதேவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் உடலிலுள்ள சக்தி விரைவில் தீர்ந்துபோவதை அறிந்து, அதனை சமன் செய்யும் வழியை அறியவேண்டுமென்று திட்டமிட்டார்கள். அவர்கள் ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அதற்கு வழிகூறுமாறு வேண்டினர். அவர்கள் பிரம்மதேவனை அணுகி மனிதர்களின் கோரிக்கையைத் தெரிவிக்க, பிரம்மா யோசித்தார். தேவலோக அமிர்தத்தை மானிடர்களால் ஜீரணிக்கமுடியாது என்பதால் தானே சிறிது அமிர்தத்தை உண்டு, அதனை மனிதர்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொண்டார். பின்னர் அவர் ஒரு பசுவாக உருவெடுத்து பாலைச் சொரிந்தார். அந்தப் பாலே வழிவழியாக மனிதர்களுக்கு சக்தியூட்டுவதாக விளங்கிவருகிறது.

எனவே பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கிப் போற்றுபவன் பிரம்மதேவனையும், தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான். 
பசுவைப் பாதுகாப்பவன் தனது பெற்றோரை, அவர்களின் முதிய காலத்தில் காப்பாற்றுவான் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும்; காதுகளில் அஸ்வினி குமாரர்களும்; கழுத்து, தாடைப்பகுதிகளில் ராகு- கேதுவும்; இரண்டு கண்களில் சூரிய சந்திரர்களும்; மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும்; முன்னிரண்டு கால்களில் பைரவரும்அனுமனும்; முகப்பகுதியில் சிவபெருமானும்; கழுத்து முதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரமும்; வால் பகுதியில் நாகராஜனும்; முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சல பர்வதங்களும்; பின்கால் பகுதியில் மந்த்ராசலம், துரோணாசல பர்வதங்களும்; மடியில் அமிர்தசுரபி கலசமும்; பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிற தேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம்.

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முக்கிய பொருளாக பால், தயிர், நெய் ஆகியவை இருக்கின்றன. பால், தயிர், நெய், கோமயம், கோசலம் ஆகிய ஐந்தையும் ஐம்பூதங்களாக பாவித்து, ஒன்றாகக் கலந்து, பூஜைசெய்யும் இடத்தையும் யாகம் செய்யும் இடத்தையும் தூய்மை செய்வர்.

பொதுவாக, யாகங்களுக்கு நெய் மிக அவசியம். பசு நெய்யில் தீ வளர்த்து, அதில் பால் ஊற்றி நெருப்பை அவிக்கும்போது அதிலிருந்து உண்டாகும் புகையானது விஷ வாயுக்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

சாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது.

ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நட்சத்திரத்திலும் கோ தானம் செய்வதும், கோ பூஜை செய்வதும் மேன்மை தரும். பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.

கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.

பசு தானம் செய்பவர் தன் பூவுலக வாழ்வை நீத்தபின், பசுவின் ஒவ்வொரு உரோமத்திலும் ஒவ்வொரு ஆண்டுவீதம், கோலோகத்தில் கண்ண பரமாத்மாவுடன் பல்லாயிரம் ஆண்டுகள் வசிக்கும் பேறு பெறுவர்.

பசு தானத்தால் ஒருவர் தனது முன்னேழு, பின்னேழு தலைமுறையினரை மோட்சம் பெற வழிசெய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகும். (தெரிந்தே பாவம் செய்தவருக்குப் பலன் தராது) 

கோபூஜை போலவே கோதுளி நீராடலும் சிறந்த பலனைத்தருவது. அதாவது பசு நடந்து செல்லும்பொழுது, அதன் கால்கள் பதிந்த இடத்திலுள்ள மண்ணை எடுத்து உடல்முழுவதும் பூசிக்கொண்டு நீராடினால், கங்கை நதியில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்கின்றன வேதநூல்கள்.

ஒரு காரியமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பசு எதிரே வந்தால் சுபசகுனமாகும். பசுக்களை கூட்டமாகப் பார்த்தால் இன்னும் சிறப்பு. தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும். தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுப்பொங்கல் திருநாளிலாவது பசுவை வணங்குதல் நன்று. பசுவை மட்டுமின்றி காளையையும் வழிபடவேண்டும். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளைகளை நீராட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம்தீட்டி, மலர் மாலை சூட்டி, சர்க்கரைப் பொங்கல், கரும்பு தந்து வழிபடுவதை கிராமப்புறங்களில் காணலாம்.

சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள்தான் காளைகள். நந்தி, நன்மைகளின் சொரூபம். வம்சவிருத்தியின் அடையாளம்.

பசு இருக்குமிடத்தில் தீயசக்திகள் அண்டாது. நமக்கு கெடுதல் செய்யும் மனம் கொண்டவர்கள் நம் இல்லம்தேடி வந்தால், முன்கூட்டியே பசு குரல் கொடுத்து தெரிவிக்குமாம். தற்போதைய சூழலில் நகரங்களில் பசு வளர்ப்பதற்கு முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மாட்டுப் பொங்கலன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று, நந்தி பகவானுக்கு பூஜை செய்யலாம். அன்று மாலை வேளையில் பசு வைத்திருப்பவர்கள், கோவிலுக்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது, அவர்களிடம் அனுமதி பெற்று கோவில் குருக்கள் மேற்பார்வையில் கோபூஜை செய்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். கோசாலை இருந்தால் அங்கும் பூஜிக்கலாம்.

மாட்டுப் பொங்கல் நாளில் சிவலிங்கத்திற்கு எதிரிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அறுகம்புல் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், நிலக்கடலை, கரும்பு படைப்பார்கள். அந்த வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியம்பெருமானை வழிபட்டால் வம்சம் நல்ல முறையில் வளரும்.

இவ்வாறு மாட்டுப் பொங்கல் திருநாளில் வழிபட்டு மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் அருளுடன் சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பள்ளி நாள்களில் மாட்டுப்பொங்கலன்று மாடுகளோடும் வண்டியோடும் நண்பர் குழாமாக போட்டிபோட்டுக்கொண்டு ஓடியதும் விளையாண்டதும் நினைவிற்கு வந்தன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms