Friday, March 4, 2016

மகாசிவராத்திரி 2016

அன்றாடம் சிவனை இரவில் வழிபட்டால் அது, நித்திய சிவராத்திரிஎனப்படும். திங்கட்கிழமைகளில் (சோமவாரத்தில்)  அமாவாசை வருவது மிகவும் சிறந்தது. அத்தகைய சோமவார இரவு, ‘யோக சிவராத்திரிஎனப்படும். தேய்பிறைச் சதுர்த்தசி இரவு, ‘மாத சிவராத்திரிஎனப்படும். சிவனடியார்கள் பலர் மாதந்தோறும் இந்த சிவராத்திரியைத் தவறாமல் அனுஷ்டித்து வருகின்றனர். மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகாசிவராத்திரிபுண்ணிய காலமாகும்.


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அங்குத் தோன்றிய நல்ல பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பலரும் முன்வந்தனர். ஆனால், விஷம் தோன்றியதும் எல்லாரும் பயந்து ஓடினார்கள். ஈசன் தன் அணுக்கத் தொண்டரான சுந்தரரை அனுப்பி, அந்தக் கூட்டு நஞ்சை எடுத்துவரப் பணித்தான். சுந்தரரும் ஆலாலத்தை எடுத்து வந்து ஈசனிடம் கொடுத்தார். ஆலாலத்தை எடுத்து வந்ததால் அன்று முதல் சுந்தரருக்கு, ‘ஆலாலசுந்தரர்என்ற பெயர் ஏற்பட்டது. அவரே பின்னர் தமிழ்நாட்டில் சுந்தரமூர்த்தி நாயனாராக அவதரித்தார். சிவபெருமான் ஆலகாலத்தை உண்டு உயிர்களைக் காத்தான். ஒப்பற்ற அடைக்கலம் அளித்து ஹாலஹால விஷத்திலிருந்து உயிர்களைக் காத்த ஈசனின் கருணையை நினைவு கூரும் நாளே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. ஈசன் நஞ்சை உண்ட பிறகு, சற்றுக் களைத்தவர் போல் காட்டிப் படுத்துப் பள்ளி கொண்டார். அவர் விழித்தெழும் வரை உமையம்மை உட்பட, எல்லாரும் கண்ணுறங்காமல் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்ட அந்த இரவே சிவராத்திரி என்றும் ஒரு வரலாறு உண்டு.


மகாப்ரளயம்என்னும் பேரூழிக் காலத்தில் அனைத்தும் ஈசனிடம் ஒடுங்கின. அப்போது எங்கும் இருள் படர்ந்தது. உலகங்களையும், உயிர்களையும் மீண்டும் படைத்தருள வேண்டி, அம்பிகை ஈசனை முறையாக வழிபட்ட நாளே மகாசிவராத்திரி என்றும் கூறுவர்.
ஒருமுறை பார்வதி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகங்கள் இருண்டன. தேவர்கள் மீண்டும் ஒளியை அருளவேண்டி இறைவனை வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கூறுவர்.

சிவபெருமான் லிங்கோற்பவராக வடிவெடுத்த அதாவது, அவன் லிங்கத் திருமேனியில் எழுந்தருளிய நாளே மகாசிவராத்திரி.

சிவராத்திரி நாளில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து, இரவில் உறங்காமல் கண் விழித்திருந்து அடுத்த நாள், அடியார்களுக்கு அமுதளித்து, பாரணை செய்வார்கள். பாரணைஎன்றால் நோன்பை நிறைவு செய்தல் என்பது பொருள். சிவராத்திரி நாள் இரவை, சிவகதைகளைக் கேட்டும், படித்தும் திருக்கோயில் வழிபாடுகளில் பங்கேற்றும் கழித்தல் வேண்டும்.

சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர்

தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பள்ளி கொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் தலை வைத்துப்படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நெஞ்சம் உருகுகிறது. என் ஐயனே மக்களைக் காக்கும் மகேசா! என்று உள்ளம் உருகுகிறது.


பள்ளி கொண்டுள்ள இந்த ஈசனுக்கு அருகே மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு மகரிஷி, பிரம்மா, சூரியன், சந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் ஆகிய அனைவரும் சிவனை வணங்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்திருக்கோயில் தல வரலாறு வைணவ சைவ ஒற்று மையைக் காட்டுகிறது. அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். ஆனால் அமுதம் வருவதற்கு முன் ஆலாகால விஷம் வந்தது. அப்போது அருகில் சென்றார் மகாவிஷ்ணு. விஷத்தில் இருந்து கிளம்பிய வாயு தாக்கியதால் அவரது மேனி நீல நிறமானது. இதனைக் கண்ட சிவபெருமான் அந்த ஆலாகால விஷத்தை முழுவதுமாக விழுங்கிவிட்டார். அருகில் இருந்த பார்வதி தேவி பதறினாள். தன் கைகளால் கணவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள். இதனால் ஆலாகால விஷம் அவரது கழுத்தைத்திலேயே உறைந்து விட்டது. கழுத்து என்னும் கண்டத்தில் நீல நிறத்தில் விஷம் தோய்ந்து விட்டதால், சிவன் திருநீலகண்டன் என்ற திருநாமம் கொண்டார்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழி லில் அழிக்கும் தொழில் கொண்ட சிவபெருமான் இவ்வுலகத்தோரைக் காக்க விஷம் என்னும் தீமையை அழித்தார். பின்னர் பார்வதி தேவியும் சிவனும் கைலாயம் நோக்கிச் சென்றார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே சிவபெருமான், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் கண் அயர்ந்தார்.

அதிசயமாக பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இத்திருக்கோலத்தைக் கண்டு மகிழ தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்துவிட்டார்கள். தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் அந்த மாலை நேரத்தில் ஆனந்த நடனம் ஆடிக்காட்டினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இத்திருகோவில் ஸ்தல புராணம்.

அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.

இத்திருக்கோயிலில் தெய்வங்கள் தம்பதி சமேதராகக் காட்சி யளிக்கின்றனர்.

சர்வமங்களாம்பிகை உடனுறை பள்ளிகொண்ட பரமேஸ்வரன்,
மரகதாம்பிகையுடன் வால்மீகிஸ்வரர்,
சித்தி, புத்தி சமேத விநாயகர்,
பூரணா, புஷ்கலாவுடன் சாஸ்தா,
கவுரிதேவியுடன் குபேரன்
தாராவுடன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கே வீற்றிருக்கிறார்கள்.

தற்காலத்தில், சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் அவ்வப் பொழுது, தொடர் ஓட்டங்கள் நடைபெறு கின்றன. விளையாட்டு வீரர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ளும் இத்தகைய ஓட்டங்களால் முக்கிய வரலாற்று உண்மைகள் மக்களுக்குத் தெரிய வருகின்றன. அத்துடன், உடல்நலம், நல்லிணக்கம் ஆகியவை வளர்கின்றன.

தமிழகத்தில், குமரி மாவட்டத்தில், சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது. சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக் கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர். அத்தலங்கள்:-

1.திருமலை, 2.திருக்குறிச்சி, 3.திருப்பரப்பு, 4.திருநந்திக்கரை, 5.பொன்மலை, 6.பன்னிப்பாக்கம், 7.கல்குளம், 8.மேலங்கோடு, 9.திரு விடைக்கோடு, 10.திருவிதாங்கோடு, 11.திருப்பன்றிக்கோடு, 12.திருநட்டாலம். ஆகியவை.
PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக அருமையான தகவல்கள்
மிக நன்று.
மிக்க நன்றி.
https://kovaikkavi.wordpress.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms