மே மாதம் என்றவுடன் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கமே நினைவு
வரும். கோடையின் கொடையாக கல்வி நிலையங்கள் அறிவிக்கும் விடுமுறைகூட இந்த மே
மாதத்தில்தான் முழுதாக வருகிறது. திடீர் குளிர்பான கடைகள்,சுற்றுலா மையங்கள்,புது
சினிமா படங்கள் என வருகிறது. இந்த கோடையின் விடுமுறையை வைத்து சினிமா படம்
வெளியிடவும் பல தயாரிப்பாளர்கள் தயாராய் திட்டமிடுவார்கள்.அப்படி வெளியிட தயாரான
ஒரு படத்தின் பின்னே ஒரு கவிஞனின் தமிழ் நயமான மே மாத வரவேற்பை பார்ப்போம்.
ஒரு முறை சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பதாக
இருந்தது. ஒரு டூயட் பாடல் மலேசியா, சிங்கப்பூர்
போய் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். மலேசியாவில் குறிப்பாக மே
மாதத்தில் படமாக்க வேண்டும் என்பது இயக்குனரின் திட்டமாக இருந்தது.
காரணம் மலேசியாவின் பிரபல மலர் கண்காட்சி அப்போதுதான் தொடங்கும்.
அதற்கான அவசரத்தில் படப்பிடிப்புக் குழுவினர் இருந்தனர்.
பாடலுக்கான மெட்டு, படப்பிடிப்பு
குழுவினருக்கான பாஸ்போர்ட், விசா
எல்லாம் தயாராக இருந்தன.
சிவாஜி,
மஞ்சுளா கால்ஷீட்டுகளும்
ப்ரீ. பாடல் மட்டும் தயாராகவில்லை. பலமுறை கேட்ட போதும் கண்ணதாசன் எழுதி
கொடுக்கவில்லை ‘அப்புறம் தருகிறேன்’ என்பதே அவரது பதிலாக இருந்திருக்கிறது.
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத
இயலவில்லையாம்.
எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷுட்டிங்
இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள்
என்றார்.
மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில்
கண்ணதாசனிடம் பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி
கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.
பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா....
சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை
எழுதி கொடுத்தாராம்.
அந்தப்
பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல்.
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும்.
அன்பு நடமாடும் கலைக்கூடமேஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே.
மாதவி
கொடிப்பூவின் இதழோரமே
மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குல தங்கமே
மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குல தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
வெள்ளலை கடலாடும்
பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
மாநிலம் எல்லாமும்
நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
திரைப்படம்:
அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.
சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

1 கருத்துரைகள்:
அருமையான தகவல்.
மிக்க நன்றி.
https://kovaikkavi.wordpress.com/
Post a Comment