தொழிலாளி
என் தெருவிலுள்ள முடிதிருத்தம் ஒன்றில் முடித் திருத்துவதற்காக
அன்று காலை ஏழு மணிக்கு சென்றேன். அப்போதுதான் திறந்து இருந்தது என்பதை ஊதுவர்த்தியின்
மெல்லிய வாசனைப்புகையும் செல்போனில் கந்தசஷ்டியும் சொல்லியது. யாரும் இல்லாததால்
நானே முதல் ஆளாய் உட்கார முடிதிருத்துபவர்(அவரேதான் அந்த கடையின் முதலாளி) துணி
போர்த்தி வழக்கமாய் கேட்கும் கேள்வியோடு ஆரம்பித்தார். அவர் வாயில் இருந்த குட்காவின்
வாசனை அவர் கேள்வியோடு சொதப்பி நாற்றமாடியது. தண்ணீர் ஸ்பிரே “ஸ்,.. ஸ்,.. என என் தலையை ஜில்லாக்க,
சீப்பும் கத்திரிக்கோலும் கச்சேரி ஆரம்பித்தது.
இடைஇடையில் கடை வாசலின் ஓரமாய் குட்கா எச்சிலைத்
துப்பிவிட்டு வந்து முடிவெட்டினார். யாரோ செல்போனில் கூப்பிட கந்தசஷ்டி நிற்க
முடிதிருத்துபவர் எடுத்து கொஞ்சம் திட்டினார், கொஞ்சம் கொஞ்சினார், கொஞ்சம் மிரட்டினார். நடுவில்
மச்சான்,மாமா என்று உறவுமுறையோடு பேசி வைத்தார். கந்தசஷ்டி தொடர மீண்டும் குட்கா எச்சிலைத் துப்பிவிட்டு வந்து
முடிவெட்டினார். முடிந்தது. ஒரு மிருதுவான பிரஷ்ஷால் என் கழுத்தில் தோளில் இருந்த
முடியை சுத்தம் செய்து போர்த்திய துணியினை அவிழ்த்து வேலை முடிந்ததை சைகையால்
காட்டினார்.
நான் கட்டணம் எவ்வளவு எனக் கேட்க முடிதிருத்துபவர்
வாயில் இருந்த குட்காவை முழுவதும்
துப்பிவிட்டு வாயை டிஷுயு பேப்பரில் துடைத்துகொண்டே தெளிவாய் “நீங்க குடுங்கய்யா” என்றார்.
நான் எவ்வளவு என்று மீண்டும் கேட்க “ஏழை தொழிலாளி நீங்க பெரியமனசு
பண்ணி நெறையா கொடுத்தாதான்யா எங்க பொழப்பு” என்றார்.
நான் நூறு ரூபாய் தாளை நீட்டினேன். பவ்யம்மாக இரு கைகளால்
பெற்றுக்கொண்டார். சில்லறை எதுவும் தரவில்லை. போய்வா என்பதுப் போல் தலையை
ஆட்டினார்.
இப்போதுதான் நான் ஆரம்பித்தேன்.
“கட்டிங்கு (Hair cutting) எவ்வளவுன்னும் சொல்லமாட்டே,ஆனா எவ்வளவு கொடுத்தாலும்
வாங்கிக்குவே நீ என்ன பிச்சையா எடுக்குறே. கவுரமான ஒரு தொழிலை செய்றே, அதுக்கு ஒரு
வரைமுறை வெச்சிக்க வேணாம்மா, சும்மா கொடுக்கறதுக்கும் வாங்கறதுக்கும் தொழில்னு
பேரு கிடையாது”
என்றேன் கொஞ்சம் கோபமாய்.
“இல்ல சார் மத்த கடைக்கு போனா டிப்சு தரமாட்டிங்களா,அதான்” என்றார்.
“இந்த கடைக்கு நீதான் ஓனர்,நீதான் தொழிலாளி.தொழிலுக்கும்
மரியாதை தரமாட்டே,மனுஷனையும் மதிக்க மாட்டே இல்லே” என்றேன்.
கல்லாவிலுருந்து இரண்டு பத்து ரூபாய் எடுத்துக்
கொடுத்து “சாரி சார்” என்று கூறினார்.
மீண்டும் நான், “ஒரு நல்ல தொழில செய்றே,அதுக்கு நீ மதிப்பு தர வேணாம்மா,
பாக்கு போட்றே, வேலைக்கு நடுவுலே துப்றே
இதுவெல்லாம் உனக்கு வேணா நல்லா இருக்கலாம்,ஆனா கஸ்டமருக்கு நல்லா இருக்காது” என்றேன்.
கையெடுத்து கும்பிட்டார்.
அதற்கு பிறகு நான் அந்த கடைக்கு போகவில்லை. அவரும்
என்னை வழியில் பார்த்தால் பார்க்காததுப் போல் இருப்பார். நஷ்டம் அவருக்குத்தான் என்பதை
நான் மட்டுமே புரிந்து கொண்டிருப்பது மட்டும் வேடிக்கையாக இருக்கிறது.
பின் குறிப்பு : இந்த பதிவை அவர் படிக்க நேரிடும். அல்லது தன் தவறினை வரும் காலத்தில் உணரலாம். அப்பொழுது இந்த பதிவு மீண்டும் தொடரும்.

2 கருத்துரைகள்:
இந்த பதிவை அவர் படிக்க நேரிடும்.///
அவர் படிப்பார் என்று நம்புவோம்.
https://kovaikkavi.wordpress.com/
அவர் விரைவில் திருந்துவார் என நம்புவோம்.
Post a Comment