Sunday, May 8, 2016

கடவுளும் கற்சிலையும்

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம். ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.


பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று

காற்று : கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

ஆகம விதிப்படி கண்திறக்கும் முறைகள்
ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வத் திருவுருவங்கள் விக்ரகங்கள் எனப் படுகின்றன. இத்திருவுருவங்களில் தாமாகவே தோன்றிய சுயம்பு வடிவங்களும்; தேவர்கள், ரிஷிகள், ஞானிகளால் ஸ்தாபிக்கப்பட்டவையும் உண்டு. ஸ்தாபனம் செய்யப்பட்ட விக்ரகங் களைப் பலவகை பூஜைகளாலும் ஆராதனைகளாலும் கடவுள் சக்தியை நிலைநிறுத்திஅவற்றை வழிபடுவோர் பயன்பெறும்படி செய்துள்ளனர்.

ஆண்டவனது அருளைப் பெற ஆலயங்களுக்குச் சென்று வழிபடு கிறோம். தெய்வ விக்ரகங்களைத் தரிசிக்கும்போது நமது உள்ளத்தில் அருள் அலைகள் பாய்கின்றன. தெய்வச் சிலைகளின் கண்களின் மூலமாகவே நாம் தெய்வ அனுக்கிரகத்துக்குப் பாத்திர மாவதாக உணர்கிறோம்.

ஆலயங்களிலுள்ள மூலமூர்த்தி சிலா விக்ரகம், சுதைமூர்த்தி, தாருக மூர்த்தி என மூவகைப்படும். சிலா விக்ரகங்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்யப்படுகின்றன. சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகைகளையும் சுண்ணாம்பையும் சேர்த்து வடிக்கப்படும். தாருகமூர்த்தி என்பது மரத்தினால் செய்யப் படுவது.

திருவுருவங்கள் செய்யப்படுவதற்கான பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே சிலைகள் வடிக்கப்படுகின்றன. கல் அல்லது உலோகங்களால் செய்யப்படும் சிலைகளின் கண் திறக் கப்படுவது என்பது கடைசி நிகழ்ச்சியாகவும்; சிலையின் புனிதத்துவத்தை நிலைபெறச் செய்வதற்கான நிகழ்ச்சியாகவும் அமைகிறது. சிலை கண் திறப்புக்கென சில நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

சிலை செய்து முடிக்கப்பட்டபின்- கண்கள் திறக்கப்படுவதற்குமுன் அங்க ரத்ன நியாசம் எனப்படும் ஆராதனை செய்யப்படும். நவரத்தினங்களை சிலையின் சிரசு, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்கள் போன்ற ஒன்பது இடங்களில் வைத்துப் பூஜை செய்து, பால் நிவேதனம் செய்து, தூப தீப ஆராதனைகள் செய்வார் கள். அதன்பின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அபிஷேகம் செய்தபிறகு சிலை செய்த சிற்பியைக் கொண்டு கண்திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

சிற்பி கண் திறக்கச் செல்வதற்குமுன் சில நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர் குளித்து, புத்தாடைகள் அணிந்து, பூணூல் தரித்து, நெற்றிக்கு திருக்குறி இட்டு, விரல்களில் மோதிரங்கள் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்துக்கொண்டு நிகழ்ச்சியின் முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.

பிறகு சிலைக்கு அருகில் ஓரிடத்தில் அரிசியைப் பரப்பி, அதன்மீது கலச ஸ்தாபனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்கலச நீரால் உரிய தேவதையைப் படிமத்தில் ஆவாஹனம் செய்து, அந்த தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபித்து, அந்தப் படிமத்தை பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது மணிமங்கள கோஷங்களை முழங்கச் செய்ய வேண்டும்.

பிறகு ஸ்தபதி விராட்விஸ்வ பிரம்மனைத் தியானித்து, வணங்கி, அவர் அனுமதி பெற்று கண்களைத் திறக்க வேண்டும். பொன்னாலான உளி அல்லது தங்க ஊசியைக் கொண்டு முதலில் வலது கண்ணையும் அடுத்ததாக இடது கண்ணையும் திறக்க வேண்டும். பல முகங்கள் இருந்தால் அவற்றிலுள்ள கண்கள் அனைத்தையும் திறக்க வேண்டும்.

முக்கண்ணனாகிய இறைவனின் வலது கண் சூரியனைக் குறிப்பதால் சூரிய பீஜ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டும்; சந்திரனைக் குறிக்கும் இடது கண்ணை சந்திர பீஜ மந்திரத்தை ஜெபித் துக்கொண்டும் திறக்க வேண்டும். நெற்றிக்கண் அக்னியைக் குறிப்பதால் அக்னி பீஜத்தை ஸ்மரித்துக் கொண்டு செதுக்க வேண்டும்.

பிறகு கூரிய உளியால் ஒளி மண்டலம், விழி மண்டலம் ஆகிய இரண்டையும் திருத்தமாகச் செய்ய வேண்டும். உடலுக்குரிய ஒன்பது வாசல் களையும் குறிப்பதான ஒன்பது துவாரங்களையும் உளியால் செதுக்க வேண்டும்.

கண்கள் திறக்கப்படும்போது, ஸ்தபதியைத் தவிர வேறு யாரும் அருகில் இருந்து பார்க்கக் கூடாது. நான்கு புறமும் திரையிடப்பட்டு, திரைக்குள்ளேயே தூப தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். படிமத்தில் அதற்குரிய தேவதை எழுந்தருளி நிலைத்திருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

கண் திறக்கப்பட்ட பிறகு சிலையின் கண்கள் முதலில் பார்க்க வேண்டியவை எவை என சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றைப் பார்க்கச் செய்யும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்.

சிற்ப நூல்களில் பார்க்க வேண்டியவை பற்றி மிகுதியாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் உள்ள "தச தரிசனங்கள்' என்ற பத்து வகை தரிசனங்களைப் பார்ப்போம்.

கண்கள் திறந்தவுடன் சுவாமிக்குமுன் ஒன்றன்பின் ஒன்றாக கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிப் பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், கன்னியர்கள், சந்நியாசிகள் ஓரிருவர், வேத விற்பன்னர்கள், அடி யார்கள் என்ற வரிசையில் காட்டப்படும். இறுதியாக ஆலயம் கட்டுவித்த எஜமானனை சுவாமிமுன் நிறுத்தி வணங்கிடச் செய்வார்கள்.

இவற்றை ஸ்தபதி மற்றும் சிலர் உடனிருந்து செய்வதோடு, ஒவ்வொரு தரிசன இடைவெளியிலும் தூப தீப ஆராதனைகள் காட்டி மங்கள வாத்தியங் கள் முழங்கச் செய்தல் வேண்டும்.

இவ்வளவு சிறப்புடனும் சிரத்தையுடனும் திறக்கப்படும் இறை விக்கிரகங்களின் கண்கள் பக்தர்கள் மீது அருள்மழை பொழிவதில் என்ன வியப்பு!

 Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Dr B Jambulingam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பல அரிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms