Monday, May 8, 2017

சித்ரா பௌர்ணமி காஞ்சிபுரம் வரதராஜர் நடவாவி உற்சவம்

வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் வரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அந்த வைபவம் நடவாவி உற்சவமாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.


காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலிருந்து வரதர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே தனி. அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடபாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐய்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார். அங்கிருந்து பாலாறு, மீண்டும் செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு பெருமாளை அழைத்து வருகின்றார்கள்.

பெருமாளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வருபவர்களுக்கு தனது அழகைக் காட்டி மயக்கிவிடுகிறார் பெருமாள். அவர்கள் மனதில் என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நினைக்கின்றார்களோ, அவர்கள் வேண்டாமலேயே பெருமாள் அதை  பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

சுட்டெரிக்கும் வெயிலில் வீதிகளில் நீரை தெளித்து குளிர்வித்து, கோலமிட்டு பெருமாளை வரவேற்கிறார்கள் பக்தர்கள். வழியெங்கும் தோரணங்கள், இளைப்பாற பந்தல்கள் என குதூகலத்தோடு பெருமாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றார்கள். புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார்சாதம் என வழியெங்கும் அன்னதானம் செய்கிறார்கள். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க பானகம், மோர், தண்ணீர் என கொடுக்கிறார்கள்.

நடவாவி கிணறு
வாவி என்றால் கிணறு என்று பொருள். நட என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் நடவாவி கிணறு என்று அழைக்கப்படுகின்றது. சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத்தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகின்றார்கள்.

48 மண்டலங்களை குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப் பட்டுள்ளன. 27வது படி வரை கீழே இறங்க முடியும். இந்த 27 படியும் 27 நட்சத்திரங்களை குறிக்கின்றன. 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும். 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர், கிணற்றை மூன்றுமுறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. இதுபோல் மொத்தம் 12 முறை தீபாராதனை நடைபெறுகிறது. கல்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்குபாலாற்றில் வைத்து பூஜை செய்கிறார்கள். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, அதற்கு பந்தல் போட்டு அபிஷேகம் நடக்கின்றது. இதற்கு ஊறல் உற்சவம் என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைகிறார் வரதர்.

பெருமாள் செல்லும் இடங்களில் எல்லாம் திருவிழாவாகவே இருக்கின்றது.

 Arrow Sankar Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms