Thursday, August 16, 2018

சப்த விடங்கத் தலங்கள் பற்றி் தெரியுமா?

சப்த விடங்கத் தலங்கள் பற்றி் தெரியுமா?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் திருநடனம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 'சப்த' என்றால் சமஸ்கிருதத்தில் 'ஏழு' என அர்த்தமாகும். 'விடங்கம்' என்பதற்கு உளியால் செதுக்கப்படாதது என்று பொருளாகும். எனவே, உளியால் செதுக்காமல் சுயம்புவாகத் தோன்றிய மூலவரை உடைய ஏழு திருத்தலங்கள் இந்த சப்த விடங்கத் தலங்கள் ஆகும்.

திருவாரூர் - அஜபா நடனம்
கும்பகோணத்தில் இருந்து 43 கி.மீ
இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜர்; 
இறைவிகமலாம்பாள்
தில்லைக்கு முந்தைய கோயில் இதுவாகும். வீதிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

திருநள்ளாறு - உன்மத்த நடனம்
கும்பகோணத்தில் இருந்து 56 கி.மீ
இறைவன் - தர்ப்பாரண்யேசுவரர்; இறைவிபிராணேஸ்வரி
சனீஸ்வர பரிகாரத் தலமான இக்கோயிலில், நகர விடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். சனீஸ்வர பகவானின் அருளைப் பெறவும், அவரால் ஜாதகத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கவும், பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. இங்குள்ள வாணி தீர்த்தத்தில் நீராட கவி பாடும் திறன் வரும் என்பது நம்பிக்கை.

திருநாகைக்காரோணம் - தரங்க நடனம்
கும்பகோணத்தில் இருந்து 67 கி.மீ
இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்;
இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
மூன்று காயாரோகத் தலங்களுள் முதன்மையானது இது. இங்கு, சுந்தரவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, செய்த பாவத்துக்கு மன்னிப்பு பெறவும், முக்தி பெறவும் பக்தர்கள் பிரார்த்தித்துக்கொள்கின்றனர்.

திருக்காறாயில் - குக்குட நடனம்
கும்பகோணத்தில் இருந்து 54 கி.மீ
இறைவன் - கண்ணாயிரநாதர்; இறைவிகயிலாயநாயகி
ஈசன் ஆயிரம் கண்களுடன் பிரம்மனுக்கு காட்சியருளிய தலம் இது. ஆதிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபட்டு, சிறப்பு பிரசாதத்தை பக்தியுடன் பெற்று உண்ணுகின்றனர் பக்தர்கள்.

திருக்குவளை - பிருங்க நடனம்
கும்பகோணத்தில் இருந்து 72 கி.மீ
இறைவன் - பிரம்மபுரீஸ்வரர்;
இறைவி - வண்டமர் பூங்குழலம்மை
நவகிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அவனிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். நவகிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள பக்தர்கள் இங்கு வந்து அப்பனையும் அம்மையையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

திருவாய்மூர்கமலநடனம்
கும்பகோணத்தில் இருந்து 76 கி.மீ
இறைவன் - வாய்மூர்நாதர்;
இறைவி - பாலினும் நன்மொழியம்மை
பிரம்மன், சூரியன் சாபம் தீர்த்த தலம். நீலவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடத் திருமணத் தடை நீங்குகிறது, கல்வி மற்றும் செல்வம் பெருகுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்
கும்பகோணத்தில் இருந்து 106 கி.மீ
இறைவன் - மறைக்காட்டுநாதர் () வேதாரண்யேஸ்வரர்; இறைவி
யாழினுமினிய மொழியாள் () வேதநாயகி
அப்பரும் சம்பந்தரும் பாடி கதவைத் திறந்து மூடிய அற்புதத் தலம். புவனி விடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்துவகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மன அமைதி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

 Arrow Sankar Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms