வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, September 2, 2016

முதல்வனே !

விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவேஎன்கிறார்.

கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?

சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.

கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.

கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.

பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால் அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. (விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர்  இயற்றினார்.)

வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங்கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.

ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.
ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)
கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.
கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.
லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.
விகடன்- குள்ளமாக இருப்பவர்.
விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.
விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.
தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.
கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.
பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.
கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.
வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.
கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.
ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.
ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.

இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.

ஒருசமயம் ஔவையார் கணபதி பூஜை செய்துகொண்டிருந்தபோது சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைப் பார்த்தார். உடனே தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பூஜை செய்தார். அப்போது விநாயகர் நிதானமாகவே பூஜை செய்யுங்கள்என்றார். அதன்படி ஔவை, விநாயகர் அகவல் பாடி கணேசனைப் பூஜித்தார். அடுத்த கணம், சுந்தரர் கயிலை அடையும் முன்னரே ஔவையை கொண்டுபோய் சேர்த்துவிட்டார் விநாயகர். அத்த கைய விநாயகர் அகவலின் சில வரிகளைக் காண்போம்

எல்லையில்லா ஆனந்த மளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத் துள்ளே சதாசிவம் காட்டி
சித்தத் துள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய்
அப்பாலுக் கப்பாலாய்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுஅக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

அருணகிரியார் தம் திருப்புகழில் ஆனைமுகனை எவ்வாறு துதிக்கிறார் என்று காண்போம்

உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகி பலகாலும்
எந்தனுக் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

வள்ளி கந்தனை அணைந்திட வள்ளி மலைக்கு வந்த ஐந்துகர விநாயகனே! தந்தையை வலம்வந்து கனி பெற்றவனே! உன்னை வணங்கும் அன்பர்களுக்கு நிலைப்பொருளாக  விளங்கி, தேவலோகத்து கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி போன்று கேட்பனவற்றையெல்லாம் தந்து மகிழச் செய்பவனே என்று போற்றுகிறார் அருணகிரி.

தமிழில் கந்தபுராணம்செய்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவருக்கு திகடச் சக்கரஎன அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன். தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம் கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது  முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற் றம் செய்ய முனைந் தார் கச்சியப்பர்.
முதல் பாடலான-

திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம்  போற்றுவாம்

என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், “திகடச் சக்கரஎன்பது இலக்கணப்பிழை என்றார். அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்கணப் பிழையென்கிறார்
களேநான் என் செய்வேன்…’ என்று மனமுருகினார். கந்தன் யாமிருக்கப் பயமேன்என்றான்.

மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி திகடச்சக்கரஎன்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார்.

திகடச்சக்கரஎன்பது திகழ் தசக்கரஎன்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.

ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா! ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா! அழகன் அண்ணா கணேஸ்வரா! ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா! பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா! என்றும் மங்களம் கணேஸ்வரா! 

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Wednesday, August 3, 2016

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில்


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும். வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும். அந்த மலையின் மீதே வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் திருக்கழுக்குன்றம்என்று பெயர் பெற்றது.

இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்த புஷ்கர மேளாஎன்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள். 

ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்என்று வேண்டின.

அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்என்றார். அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர்வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன. 

மார்கண்டேய சங்கு தீர்த்தம்

மிருகண்டு முனிவர்மருத்துவதி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ‘உங்களுக்கு நீண்ட காலம் வாழும் புத்தி குறைவான மகன் வேண்டுமா?, நிறைந்த புத்தியோடு குறைந்த காலம் வாழும் மகன் வேண்டுமா?’ எனக் கேட்டார்.

இறைவனிடம் புத்தியோடுள்ள குறைந்த காலம் வாழும் மகனை வேண்டினர் அந்த தம்பதியர். எனவே மார்கண்டேயர் 16 வயது ஆயுளோடு பிறந்து, சிவ பக்தியோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது உயிரைப் பறிக்க எமதூதர்கள் வந்தனர். அப்போது மார்கண்டேயர் சிவனை நினைத்து கடும் பூஜை செய்து கொண்டிருந்தார். இதனால் அவரது உயிரை கவர முடியாமல் எமதூதர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து எமனே நேரடியாக அங்கு வந்தான். எமனைக் கண்டதும் மார்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக்கொண்டார்.

ஆனால் எமன், பாசக்கயிறை மார்கண்டேயர் மேல் வீசினான். அந்த கயிறு மார்கண்டேயரோடு சிவலிங்கத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், உக்கிரமூர்த்தியாய் தோன்றி எமனை எட்டி உதைத்தார். எமதர்மன் மூர்ச்சையாகி விழுந்தான்.

பின்னர் மார்கண்டேயரை என்றும் 16 வயதுடன் இருக்க அருள்புரிந்தார். இதையடுத்து மார்கண்டேயர் பல சிவதலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி அவர் வந்த திருத்தலத்தில் ஒன்றுதான் திருக்கழுக்குன்றம். 

அவர் இந்த ஆலயத்திற்கு, குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் வந்தார். இத்தல வேதகிரீஸ்வரரை வழிபடும் முன்பாக அங்குள்ள குளத்தில் நீராடினார். சிவபூஜை செய்யும் முன்பாக அங்கு விநாயகர் ஒருவரை பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு அபிஷேகம் செய்ய, நீர் எடுக்க பாத்திரம் எதுவும் இல்லாததால், சிவபெருமானை நினைத்து வேண்டினார் மார்கண்டேயர். இதையடுத்து அங்குள்ள நன்நீர் குளத்தில் ஒரு சங்கு உருவாகி வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்த சங்கை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தார். இறைவனுக்காக சங்கு உருவானதால் அந்தக் குளத்திற்கு சங்கு தீர்த்தம்என்று பெயர் உண்டானது.


இந்த நிகழ்வே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக் கழுக்குன்றம் திருத்தலத்தில் சங்கு தீர்த்த புஷ்கர மேளாஎன்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு சங்கு தீர்த்தக் குளத்தில் நீராடி மகிழ்கிறார்கள்.

சங்கின் இத்திருப்பிறப்பு முதன்முதலில் குரு பகவான் கன்னி ராசியில் செல்லும் போது நடந்தது. ஆகவே குரு பகவான் கன்னி ராசிக்குச் செல்லும் நாள் சங்கு தீர்த்த புஷ்கர மேளாவாக கொண்டாடப்படுகிறது.  அந்நாளில் குரு பகவான், இத்தல இறைவனை லட்சதீபம் ஏற்றி வழிபடுவதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இங்குள்ள குளத்தில் சங்கு பிறக்கிறது. கடைசியாக கடந்த 1.9.2011 அன்று சங்கு பிறந்தது. அந்த சங்கைக் கொண்டுதான், சங்கு தீர்த்த புஷ்கர மேளாவின் போது இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

சங்கு பிறப்பதற்கு முதல் நாள் குளம் முழுவதும் நுரையாகக் கிளம்பும். பின்னர் அக்குளத்தில் தோன்றும் சங்கு, ஒரு ஓரமாக மிதந்து வரும். அதை கோவிலிலுக்குள் மேள தாளம் முழங்க எடுத்துச் சென்று, இறைவனின் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். 

இந்த ஆண்டு 2.8.2016 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் குரு கன்னி ராசியில் பிரவேசமாகிறார். இதை உத்தேசித்து 31.7.2016 மாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. 2.8.2016 அன்று காலை 9 மணிக்கு முடியும் இந்த பூஜையை அடுத்து, சங்கு தீர்த்தக் குளத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம் செய்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிஅம்பாள் வீதி உலா வந்தனர்.

நால்வர் கோவில்

சைவ சமயக் குரவர்கள் திருக்கழுக்குன்றம் அடைந்து வேதகிரி மலையில் ஏற நிதானித்து, கீழேயே நின்று பாடல் பாடினர். இந்த இடம் நால்வர் கோவில் என்று வழங்கப்படுகிறது. மலைமீது சொக்கநாயகி உடனுறை வேதகிரீஸ்வரர் என்ற ஆலயமும், ஊருக்குள் திருபுரசுந்தரி உடனுறை பக்தவசலேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளன. இவை முறையே மலைக்கோவில், தாழக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.

மலைக்கோவிலுக்குச் செல்ல 565 படிகள் உள்ளன. இறைவன் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். கருவறை, கருங்கற்பாறைகளால் ஆனது. உட்சுவரில் சோமாஸ்கந்தர், பிரம்மா, திருமால் உள்ளனர். வடக்குச் சுவரில் தட்சிணாமூர்த்தி உள்ளார். முதல் பிரகாரத்தில் விநாயகரும், சொக்கநாயகி அம்மனும் அருள்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Tuesday, August 2, 2016

ஆடிப் பெருக்கு

பஞ்ச பூதங்களான  நீர்,நிலம் ,நெருப்பு,ஆகாயம்,காற்று இவைகளில் முதல் மூன்றை நம் முன்னோர்கள் எல்லா வழிபாடுகளிலும் முன்னிலைக் கொண்டே நடத்துகிறார்கள் அவைகளை தாயாக எண்ணி வணங்கவும் செய்கிறார்கள்.

நீரின்றி அமையாது உலகு எனும் வாக்கின்படி நீர் முதன்மை பெறுகிறது.அந்த நீருக்கு அடிப்படை ஆதாரம் மழை.இந்த மழை  ஆடி மாதத்தில், தென்மேற்கு பருவ மழையின் தொடக்க காலமாகும். சித்திரை மாத வெயிலின் தாக்கம் ஆடி மாதத்தில் முடிவுற்று, நன்றாக மழை பொழியத் தொடங்கும். நீர் நிலைகளுக்கான அடிப்படை ஆதாரம் மழை. மழையினால் ஏற்படும் வெள்ளம் அமைதியுற்ற ஆற்றினை சுத்தப் படுத்தி நிலத்தினை குளிர வைத்து செழிப்படைய வைக்கிறது.

அத்தகைய மழையை வரவேற்று வணங்கி உபசரித்து கொண்டாடுவதே, ஆடி மாதத்தின் சிறப்பாகும். அப்படி, ஆடி மாதத்தின் தொடக்கத்தில் ஆற்றில் பொங்கி வரும் மழை நீரினை ஊற்றாய் கொண்டு விவசாயிகள் நாற்று நடத்தொடங்குவர்.

இந்த விதைநெல்களே விளைந்து தை மாதம் அறுவடைக்குத் தயாராகிறது. பொங்கல் எப்படி உழவர்கள் நன்றி சொல்லும் நாளோ, அதே போல் ஆடிப்பெருக்கு நதியை வணங்கி உழவை ஆரம்பிக்கும் திருநாள் என்கின்றனர் பெரியோர்கள்.

அதுமட்டுமின்றி, மழை பெய்து நதிகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுவதை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டாடும் திருநாளே 'ஆடிப் பெருக்கு' என்கின்றனர் ஒரு சாரார்.

தஞ்சையில் பாயும் காவிரியின் துணை ஆறுகளான வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகியவற்றின் கரைகளில் இவ்விழா மிகவும் பிரபலம். இந்த நாளில், ஆற்றில் நீராடி அங்கு இருக்கும் நதியை தெய்வமாய் நினைத்து வழிபடுவார்கள்.

நதியில் நீராடி
தென்றலில் துடைத்து
நெருப்பில் பொங்கல் பொங்கி
நிலமெல்லாம் பச்சை உடுத்தி
வானோக்கி கையேந்தினேனே
வரங்கள் தருவாய்
வாழ்த்தும் அருள்வாய்
வசமானதை உனக்கே
வாரிகொடுப்போம் அம்மா!

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Thursday, July 28, 2016

கௌஸ் முருகன் கோயில்

மதங்களின் பெயரால் மனிதர்கள் பிரிந்தும், மத காழ்ப்புணர்ச்சியிலும் மதவெறியிலும் சிதைந்து போன மனிதர்களுக்கு சவுக்கடியாய் 'அனைத்து மதங்களும் ஒன்றே' என்று சொல்லிஇந்துக் கடவுளான முருகனுக்கு கோயில் கட்டி இருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த காலம் சென்ற இஸ்லாமிய சகோதரர் முகம்மது கௌஸ்.


ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள இந்தக் கோயில்புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல், சமய நல்லிணக்கத்திற்கான அடையாளமாகவும் திகழ்கிறது.
1940-ம் ஆண்டு, பாரம்பர்யமான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் முகமது கௌஸ். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது முன்னோர்கள், இரண்டு தலைமுறைக்கு முன்பே புதுச்சேரி நகரப்பகுதியில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் எல்லையம்மன் கோயில் தெருவில் குடியேறினார்கள். சாதி, மதம், இன வேறுபாடுகளைப் பற்றி அறிந்திடாத சிறு வயதிலேயே, கௌஸுக்கு முருகக் கடவுளை மிகவும் பிடித்து விட்டது. அதனால் பெரும்பாலான நேரங்களில் அருகில் இருக்கும் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று அக்கோயிலின் கட்டடக்கலை, சிற்பங்களின் வடிவமைப்பு போன்றவற்றை ரசித்து அங்கு நேரம் கழிப்பதே வழக்கமாகிப் போனது. பெத்தி செமினார் பள்ளியில் படித்த அவர்இந்து கோயில்களுக்கு மட்டுமல்லாமல் தான் சார்ந்த இஸ்லாம் மசூதிக்கும், கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் இவர் செல்ல ஆரம்பித்தார். சிறு வயதிலேயே சமய நல்லிணக்கம் கொண்டவரான இவருக்குநாளடைவில் படிப்பில் நாட்டம் குறைந்ததால் எட்டாம் வகுப்போடு பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அனைத்து மதக் கடவுளையும் இவருக்கு பிடித்திருந்தாலும் ஏனோ முருகக் கடவுளின் மீது மட்டும் இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த சிறு வயதில்தன் பெற்றோரால் தன் இடுப்பில் கட்டப்பட்டிருந்த தங்க அரைஞாண் கயிற்றைக் கழற்றி விற்று அந்த பணத்தில் தனக்கு சொந்தமாக செப்பாலான முருகன் தெய்வானை வள்ளி திருவுருவங்களை வடிவமைத்து அதற்கு தினம் அலங்காரங்கள் செய்து சிறிய அளவில் பூஜைகள் செய்து வணங்க ஆரம்பித்தார். முருகன் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகமானது. அதனால் ஒவ்வொரு வருடமும் மாசி மகத் திருவிழாவின் போது முருகக் கடவுளின் திருவுருவச் சிலைக்கு நன்றாக அலங்காரங்கள் செய்து தன்னுடைய மார்பிலும், தோளிலும், தலையிலும் சுமந்து கடற்கரைக்கு எடுத்துச் சென்று புனித நீராட்டு செய்வார்.

அத்திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும், இவரையும் இவரின் முருகர் சிலையையும் ஆச்சர்யமாக பார்ப்பதோடு தரிசித்து செல்வது வாடிக்கையாகிப் போனது. மேலும் கௌஸின் முருகன் சிலையை 'பாய் முருகர்' என்றே புதுச்சேரி மக்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் முருகக் கடவுளுக்கென்று தனியாக ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்ற அவரது ஆசை, வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.

இந்நிலையில் 1969-ம் ஆண்டு 'துளசி முத்து மாரியம்மன்' என்ற கோயிலைக் கட்டினார். அதன் கும்பாபிஷேக விழாவின்போது அவரின் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி வந்த போதிலும் விழாவை வெற்றிகரமாக முடித்தார். சமய நல்லிணக்கத்திற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பார்த்த அப்போதைய புதுச்சேரி மேயர் 'எதுவார் குபேர்' , கௌஸை அழைத்து,  'உனக்கு மேலும் என்ன உதவிகள் வேண்டும்?' என்று கேட்க, தனது வாழ்நாள் ஆசையான முருகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதைச் சொன்னார். உடனே அவர் அதற்கான அனுமதியையும் உதவிகளையும் அளித்ததோடு 14.12.1970 அன்று புதுச்சேரி கவர்னர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலை கட்டி முடித்தார். 1977-ம் ஆண்டு சித்திரை மாதம் 19-ம் நாள், ஆகம விதிகளின்படி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார். அதன்பிறகு இக்கோயிலுக்கு ஒருமுறை வருகை புரிந்த காஞ்சி சங்கராச்சாரியார், 'கௌசிக பாலசுப்ரமணியர் திருக்கோயில்' என்று பெயர் வைத்தார். அனைத்து மக்களாலும் 'கௌஸ் கோயில்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயனிகள் அனைவரும் இந்தக் கோயிலைப் பார்க்காமல் செல்வதில்லை.

சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி, வைகாசி மாதத்தில் வைகாசிப் பெருவிழா, ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை மற்றும் துளசி முத்து மாரியம்மனுக்கு ஆடிப்பூர விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் நீள்கிறது இக்கோயிலின் திருவிழாப் பட்டியல். 2003-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் முகமது கௌஸ் மரணமடைந்தார். தற்போது, அவரது மகன் முகமது காதர் கோயிலை நிர்வாகித்து வருகிறார்.
சிறு வயது முதலே அப்பாவின் கூடவே இருந்ததால் எனக்கும் இந்த முருகக் கடவுளைப் பிடிக்கும். இவரை வணங்குவதையும் இவருக்கான பணிகளைச் செய்வதையும் நான் பெரிய பாக்கியமாகவே நினைக்கிறேன். இன்றும் நான் இஸ்லாத்தில்தான் இருக்கிறேன், மசூதிக்கும் செல்கிறேன். என்னைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் கடவுள்களும் ஒன்றுதான். வழிபாட்டு முறைகள் மட்டுமே வேறு வேறாக இருக்கின்றதுஎன்கிறார்.

இன்றும் இந்த கோயிலின் உட்பிரகாரத்தில் முகமது கௌஸ் திருவுருவப் படத்தைக் காணலாம். சமயங்களை ஊக்கப்படுத்தி அதன்மூலம் பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கான சவுக்கடியாக கம்பீரமாய் உயர்ந்து நிற்கின்றது 'கௌஸ் கோயில்'.
நன்றி :ஆனந்த விகடன்

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Thursday, July 14, 2016

எல்லோரும் கொண்டாடுவோம்

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.


"மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.

அதன்படி, அந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம்
தெரிவித்தார்.

வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும் விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என குழம்பினார்கள்.

திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே," எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும் கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால் இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.

இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.


எல்லோரும் கொண்டாடு " ஓம் "

எல்லோரும் கொண்டாடு  "ஓம் "

அல்லாவின் பெயரைச் சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடு "ஓம் "

வருவதை வரவில் வைப்போ " ஓம் "

செய்வதை செலவில் வைப்போ "ஓம் "

முதலுக்கு அன்னை என்போ " ஓம் "

முடிவுக்கு தந்தை என்போ " ஓம் "

மண்ணிலே  விண்ணை கண்டு

இன்பம் காணு  "  ஓம்  "

எடுத்தவன்  கொடுக்க வைப் "ஓம் "

கொடுத்தவன்  எடுக்க. வைப்  "  ஓம்  "

இன்று  போல்  என்றும்  இங்கே

ஒன்றாய்  கூடு  "  ஓம்  "

என்று முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்..

கூடவே இயக்குனர் ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில் ஆழ்ந்தார்.

அதே போல இந்தப் பாடல் முழுக்க " ஓம்  " என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு முக்காட  வைக்கும் அந்தப் பாடல்.

Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms