வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, July 27, 2018

ஆடி மாதத்தின் மகிமைகள் என்ன?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடியை கற்கடக மாதம் என்றும், சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். 'ஆடிப் பட்டம் தேடி விதை" என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், இந்த மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ குணமும், தெய்வீக குணமும் உண்டு.

ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

 துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு ஆகிய தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது மிகவும் நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், முன்னோர்களின் ஆசிகளைப் பெறலாம்.

ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவார். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆகையால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.....!

ஆடி மாத விரதங்கள் !!

ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விதங்களில், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மௌன விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
இம்மாதத்தில் வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைபிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைபிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் ஊற்றி, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.


ஆடிமாதம் முழுவதும் பக்தி நிறைந்த நாளாக காணப்படுவதால் விரதம் இருந்து வழிபட்டு வேண்டியதை அருளும் இறைவனை வணங்குவோம்.

Arrow Sankar Print Friendly and PDF

Thursday, June 14, 2018

மேல்நோக்கு நாள்- கீழ்நோக்கு நாள்-சம நோக்கு நாள்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?



மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. 

இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.
-Arrow Sankar Print Friendly and PDF

Friday, June 8, 2018

கர்மா என்பது என்ன?

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:


ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறதுஎன்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!

அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!

அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாதுஎன்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!

அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!

இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படி சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்!

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!

அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்!

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது!

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!

அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!

குரு சிஷ்யர்களைக் கேட்டார் சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்!.

பல சீடர்கள் அதற்கு பல விதமாக கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்என்றெல்லாம் பதில் கூறினர்!!

குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே..

நாம் அடுத்தவர்கள் மேல்  நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே  எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.

எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்
Arrow Sankar Print Friendly and PDF

Saturday, May 5, 2018

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. `ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். `தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், ``அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. 
சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. `பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். `இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா?' இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள். 
யுத்தகளத்தைவிட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.
பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ  எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச்  செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி. யாரோ  ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார்.  பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார். 
பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள்  குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.
``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.
``, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திருக்கிறேன்’’ என்றான்.
கண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா?என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா..." என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?! 


Arrow Sankar Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms