Friday, August 1, 2014

இலங்கை அரசுக்கு கண்டனம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கடத்திச் செல்லப் படுவதும் அவ்வப்போது நடைபெறுகிறது.அந்த சமயங்களில், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட கோரியும், மீனவர்களை மீட்கக் கோரியும் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதங்கள் எழுதுகிறார்.


இதை இலங்கை அரசு விமர்சித்து உள்ளது. இலங்கை அரசின் பாதுகாப்பு துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச் சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்கள் எழுதுவது குறித்து, ஆட்சேபகரமான புகைப்படத்துடன் அவதூறான கருத்துகள் வெளியாகி இருந்தன.

இலங்கை அரசின் இந்த விஷமத்தனமான நடவடிக்கையை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டித்தனர். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி


இலங்கை சிங்களவாத அரசின் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழக முதல்அமைச்சரை அநாகரிகமாக இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் தமிழக மீனவர்களின் இன்னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்த கடுமொழிகளை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறியதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்துகொள்ளக்கூடாது என்றுதான் தமிழகத்தின் சார்பில் அனைத்து கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம். அந்த கட்டுரை இழிவுபடுத்தியிருப்பது தமிழக முதல்அமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டு பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்  (முன்னாள் மத்திய மந்திரி தமிழ்நாடு காங்கிரஸ் )
 
முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து, இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வமான இணையத்தளத்தில் தமிழக முதல்அமைச்சரை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்து வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக முதல்அமைச்சரின் கடிதத்தை விமர்சித்து இலங்கை ராணுவ இணையத்தளத்தில் இலங்கை அரசு வெளியிடுவது, தமிழக முதல்அமைச்சரை மட்டுமல்ல தமிழக மக்களையே இழிவுபடுத்தும் செயலாகும். இலங்கை அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் (பா.ம.க.நிறுவனர்)

இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மீனவர் பிரச்சினை தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை தமிழக முதல்-அமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அக்கட்டுரையுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள படம் மனசாட்சி உள்ள அனைவரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இலங்கை அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பான உள்நாட்டு பிரச்சினையில், இலங்கை அரசு தேவையில்லாமல் கருத்து தெரிவிப்பது மட்டுமின்றி, பெண் என்றும் பாராமல் முதல்-அமைச்சரை இழிவுபடுத்துவது முறையல்ல.
 
இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதல்-அமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மைக் கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது.

வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் பிரதமர் நரேந்திர மோடியை மனதால் நினைத்துக்கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றது.

ஹிட்லரின் நாஜிப்படைகள் கூட செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைத்த இலங்கை ராணுவம், தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள ஜெயலலிதாவை இழிவு படுத்தத் துணிந்து இருக்கின்றது. இத்தகைய கேவலமான வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

வரலாற்றில் தமிழ்நாட்டையோ, தமிழக முதலமைச்சரையோ இந்த அளவுக்கு இழிவுபடுத்த உலகில் இதுவரை எவரும் துணிந்தது இல்லை. இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும்.

ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர்)

தமிழக மக்களின் உரிமைக்காகவும், மீனவர்களின் உரிமைக்காகவும் தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும், மத்திய அரசை நிர்ப்பந்தித்து வருவதும், இலங்கையின் கண்களை எப்படி உறுத்தியிருக்கிறது என்பதின் வெளிப்பாடே இந்த கார்ட்டூன். தமிழக மக்களால் பெரிதும் மதித்து போற்றப்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சரை அவமதிப்பதும், 7½ கோடி தமிழக மக்களை அவமதிப்பதும் ஒன்றுதான்.

இந்த கார்ட்டூன் குறித்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற செயல்களை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

பி.எஸ்.ஞானதேசிகன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்)

இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில், இணையதள உபயோகிப்பாளர் ஒருவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு தமிழக மீனவர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார்.

அரசியல் மாச்சர்யங்கள், கருத்து வேறுபாடுகள் என்பது அரசியலில் இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்-அமைச்சரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை மீனவர்கள், கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முட்டுக்கட்டை போடும் இலங்கை அரசு இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு இதுவரை தீர்வு காண முடியாமல் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற நச்சுக்கருத்துக்களை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனியார் ஒருவர் வெளியிடுவதை தடுக்காமல் இருந்தது விஷமத்தனமானது. இதுபோன்ற கருத்துக்களை இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், இக்கருத்துக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி தலைவர்)

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதும் கடிதங்களைக் கொச்சைப்படுத்தி இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டின் முதல்வர் என்பதையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெண் என்பதையும் மதிக்காமல் சிங்கள வெறியர்கள் இழிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதித்துள்ளனர்.

இச்செய்கையை ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரானதாகக் கருதி நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சீமான் (நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்)

இலங்கை இனவெறி அரசின் பாதுகாப்பு செயலராக இருக்கும் கோத்தபய ராஜபக்சேவின் பாதுகாப்பு அமைச்சக இணையத்தளத்தில் அரசியல் விமர்சனம் என்ற பெயரில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடி பற்றி போடப்பட்டுள்ள சித்திரமும், கட்டுரையும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவின் பிரதமருக்கும் அதன் மாநில முதல்வர் ஒருவருக்கும் இடையிலான கடித பறிமாற்றத்தை இப்படி ஆபாசமாக சித்தரித்திருப்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் வக்கிர எண்ணத்தோடு விளையாடும் விபரீதமான செயலாகும். இப்படிப்பட்ட கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்)

முதல்வரை இழிவுபடுத்தி உள்ள இலங்கைக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் இந்திய பேரரசு துண்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு இணை அனுப்பி அவரை நேரில் வரவழைத்து எச்சரிக்க வேண்டும். இழிவான கட்டுரையை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொறுப்பான, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இழுத்து மூடவும் எனது தலைமையில் நாளை(இன்று) முற்றுகை போராட்டம் நடைபெறும்.

தேவநாதன் யாதவ்(இந்தியமக்கள் கல்வி முன்னேற்றக் கழகநிறுவன தலைவர்)

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தமிழர்ஆதரவு நிலைபாட்டினை கொச்சைப்படுத்தும் வகையிலும், தமிழக மக்களின் ஏகோபித்த குரலாய் அம்மாஎன்று அழைக்கப்படும் முதலமைச்சரை பெண் என்ற முறையில் கொச்சைப்படுத்துவதும் அவர் தமிழர்களின் நலனுக்காக பிரதமருக்கு எழுதிய கடிதங்களை கேலி, கிண்டல் தொணிக்கும் விதமாக செய்தி வெளியிடுவது என்பது, அதுவும் ராணுவ இணையதளத்திலேயே வெளியிடுவது உலக தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் செயலாகும். இந்திய அரசு இதற்கான உரிய விளக்கத்தையும், மன்னிப்பையும் இலங்கை அரசிடம் இருந்து பெற வேண்டும்.

இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர் அலி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்,எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெக்லான்பாகவி, புரட்சி பாரத இயக்க தலைவர் மு.ஜெகன்மூர்த்தி,ஏரோ சங்கர் ப்ளாக் வான்மீகீயூர் சங்கர் ஆகியோரும் உள்பட பலரும் இலங்கைக்கு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். இதனை 'ஏரோ சங்கர்' ப்ளாக் வாசகர்கள் சார்பிலும் வன்மையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

****
இதையடுத்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியது. அதன்பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், இந்த பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றது. இதனால் ராஜபக்சே அரசு பணிந்தது. அந்த சர்ச்சைக்குரிய கட்டுரையை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்கியது. அதுமட்டுமின்றி நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.


         மன்னிப்பு கோரி இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை பற்றி, கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களுடன் எங்கள் இணைய தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி விட்டது. இந்த கட்டுரை அதற்கான முறையான அங்கீகாரம் இன்றி வெளியிடப்பட்டு விட்டது. அது இலங்கை அரசின் ராணுவ அமைச்சகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டினை பிரதிபலிக்கவில்லை. எனவே அது நீக்கப்பட்டு விட்டது. இதை வெளியிட்டதற்காக நாங்கள் இந்திய பிரதமரிடமும், தமிழ்நாட்டின் முதல்- அமைச்சரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்.
-Arrowsankar

3 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் கண்டனத்திற்கு உரிய கேவலமான செயல்
வேண்டமென்றே வெளியிட்டுவிட்டு, தெரியாததுபோல் நாடகமாடுகிறார்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Uthra perumal Says:-

அன்புள்ள சங்கர் அவர்களுக்கு

வணக்கம். தமிழக முதல்வர் அவர்களின் உண்மையான செயற்பாட்டை விமர்சித்து இருக்கும் இலங்கை அரசின் செயல் மிக கேவலமானது. மிக வன்மையாக கண்டித்தக்கது. இதற்கு அணைத்துத தலைவர்களும் கண்டனம் தெரிவித்ருப்பது தமிழ முதல்வர் அவர்களின் செயற்பாட்டின் சத்தியத தன்மையைப புலப்படுத்துகிறது. எனக்கு தெரியாது என்பதெல்லாம் இலங்கை அரசின் அருவருத்தக்க நாடகம். தமிழக மீனவர் பிரசினையின் மீது உண்மையான பொறுப்பான மனிதாபிமான அடிப்படையில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வரின் செயற்பாடுகள் மீனவர்கள் வாழ்வில் நிச்சயம் நிரந்திர வெற்றியைத தரும்.

அன்புடன்
ஹரணி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே, இலங்கை ராஜபக்சே அரசின் விஷம த்தன்மையை உலகுக்கு எடுத்துரைப்போம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms