Thursday, December 24, 2015

தலைமை

சுமை நிறைந்த வனப் பகுதிக்குள் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார் ஒரு ஆன்மிக குரு. அவரிடம் ஏராளமானவர்கள் சீடர்களாக சேர்ந்து, ஞானத்தையும், ஆன்மிக மார்க்கத்தையும் கற்றறிந்து வந்தனர். ஒரு பிரிவினர் தங்களின் ஆன்மிக ஞானத்தை வளர்த்துக் கொண்டதும், அவர்களை தனியாக போகும்படி கூறிவிட்டு, அடுத்ததாக புதியவர்களை சீடர்களாக சேர்த்து, அவர்களுக்கு ஞான மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதை தன்னுடைய பணியாக வைத்திருந்தார் அந்த குரு.

சிறிய குடிலாக தொடங்கப்பட்ட குடில், பல சீடர்களின் வருகை காரணமாக கொஞ்சம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குருவின் ஆன்மிகத் தொண்டையும், அவரது சிறந்த தவத்தையும் தெரிந்து கொண்ட, அந்நாட்டு மன்னரும், பொதுமக்களும் கூட அவ்வப்போது குருவின் ஆசிரமத்திற்கு வந்து தங்கியிருந்து அவரை வழிபட்டு, வாழ்வை சிறப்புற வாழ்வதற்கான வழியை கேட்டுச் சென்றனர். 

காலங்கள் பல உருண்டோடின. குருவுக்கு உடல் அளவில் தளர்ச்சி ஏற்பட்டது. தனது இறுதிக்காலம் நெருங்கிக் கொண்       டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தனக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தைக் கவனித்துக் கொள்ளவும், ஞான மார்க்கத்தை தளர விடாமல் வளர்த்தெடுக்கவும், தகுந்ததொரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் குருவுக்கு தோன்றியது. இதனால் அவர் சீடர்களுக்கு ஒரு தேர்வு வைக்க முடிவு செய்தார்.

அதன்படி சீடர்கள் அனைவரையும் அழைத்தார் குரு. அவரது கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு, சீடர்கள் அனைவரும் ஆயத்தமாக நின்று கொண்டிருந்தனர்.

குரு பேசலானார். என் அன்புக்குரிய சீடர்களே! உங்களிடம் நான் ஒன்று கூறப்போகிறேன். அது யாதெனில், எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் எனது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், என்னை ஓய்வு எடுக்கச் சொல்வது போல் இருக்கிறது. எனவே இனிமேலும் தொடர்ந்து என்னால் இந்த ஆசிரமத்தை நடத்த முடியாது. எனவே உங்களில் இருந்து ஒருவரை, எனது வாரிசாக, இந்த ஆசிரமத்தை எந்த சுயநலமும் இல்லாமல், நல்லவிதமாக நடத்துவதற்கு தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படுபவரிடம் இந்த ஆசிரமம் ஒப்படைக்கப்படும். அவருக்கு கீழ் மற்றவர்கள் அனைவரும் இருந்து தங்கள் பணியை செய்து வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் உங்களது கருத்தை கேட்கவே, அனைவரையும் இங்கு அழைத்தேன்என்றார்.


மேலும் அவர், ‘உங்களில் யார் இந்த ஆசிரமத்தின் அடுத்த வாரிசாக வர விரும்புகிறீர்கள். அப்படி விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கையை உயர்த்திக் காட்டி எனக்குத் தெரியப்படுத்தலாம்என்றார்.

அனைத்து சீடர்களும் ஒரு சேர தங்களது கையை உயர்த்தி, தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். குருவானவர் தன்னுடைய தீர்க்கமான பார்வையால், சீடர்கள் கூட்டத்தை ஒருமுறை கவனித்தார். அப்போது ஒரே ஒரு சீடன் மட்டும் கையை உயர்த்தாமல் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

அந்த சீடனிடம், ‘நீ மட்டும் ஏன் கையை தூக்கவில்லை. உனக்கு இந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பை ஏற்க விருப்பம் இல்லையா?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன், ‘குருவே! இங்கு பலரும் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவிப்பதைக் கண்டேன். அவர்களின் ஆசைக்கு குறுக்கே நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் அமைதியாக இருந்து விட்டேன்என்றான்.

அவனது பதிலைக் கேட்டதும் குரு மனம் மகிழ்ந்தார். அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பிற்கு வரக்கூடியவர் ஆசைகளை துறந்தவராக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து, அவர்களை அனுசரித்து போகக் கூடியவராக இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் அனைத்தும் உன்னிடமே உள்ளன. அதனால் இந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்என்றார்.

பின்னர் மற்ற சீடர்களைப் பார்த்து, ‘உங்களுக்கு இதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா?’ என்று கேட்டார்.


சீடர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், ‘இல்லை குருவேஎன்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

புத்தகங்கள் படிக்க –ARROWINBOOKS BLOG
Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms