Thursday, May 4, 2017

அக்னி நட்சத்திரம்

அது ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் வேதகோஷங்களாலும் பெரும் சாந்நித்தியம் அடைந்திருந்த அந்த வனத்தை ஒட்டி ஓடியது யமுனை!

ஒருநாள், ராஜகுமார்கள் சிலர், தங்கள் நண்பர்களுடனும் தாயாதிகளுடனும், உறவினர்களுடனும் அந்த வனத்தை ஒட்டிய யமுனை தீரத்துக்கு நீராட வந்தார்கள். சிலபல நாழிகைகள் நதியில் நீராடி மகிழ்ந்தபின் பலரும் கரையேறியபின்னர், இருவர் மட்டும் கடைசியாக கரைக்கு வந்தனர்.
மாமனும், மைத்துனனுமான அவர்கள் கரையேறும்போது, வயோதிக அந்தணர் ஒருவர் அவர்களை வணங்கி, “உங்களைப் பார்த்தால், கருணை நிறைந்தவர்களாகத் தெரிகிறது. எனக்கு பசிக்கிறது. உணவிடுவீர்களா?” என்று கேட்டார்.
அந்த இருவரில் ஒருவர் கிருஷ்ணன்; மற்றவன் அர்ஜுனன். வயோதிகரை உற்று நோக்கிய கிருஷ்ணன் அவரை இனம்கண்டு கொண்டார். பின்னர் புன்னகையுடன் அவரிடம் கேட்டார், “அக்னி பகவானே! உமக்கேன் இந்த வேடம்? வேண்டியதை எங்களிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாமே?” என்றார்.
பரம்பொருளே! உலகுக்கே படியளக்கும் உமக்குத் தெரியாததா? சுவேதசி மன்னருக்காக துர்வாச மகரிஷி தொடர்ந்து நூறாண்டுகள் தீ வளர்த்து யாகம் செய்தார் (12 ஆண்டுகள் எனவும் சில புராணங்கள் சொல்கின்றன). நூறாண்டுகள் தொடர்ந்து நெய்யையும் ஹவிஸையும் (வேள்வியில் இடும் பொருட்கள்) உண்டதால், எனக்கு வயிறு மந்தமாகி, இயல்பான செயல்களைச் செய்யமுடியவில்லை. இதற்குத் தீர்வுமூலிகைகள் நிறைந்த இந்த காண்டவ வனத்தைச் சாப்பிடுவதுதான். ஆனால், அதை எரிக்கச் சென்றால், வருணன் வந்து என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான். என் பிணி தீர உதவுங்கள்என வேண்டினார் அக்னி.
அக்னியே பிரதானம். அக்னி மந்தமானால் உலக வாழ்க்கை ஸ்தம்பிக்கும். பிரபஞ்சம் குளிர ஆரம்பித்தால் சிருஷ்டி முதல் அனைத்துக் காரியங்களும் தடைப்படும். கண்ணுக்குத் தெரியாத இழையால் பிணைக்கப்பட்ட அனைத்துமே ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். இதையெல்லாம் ஒரு விநாடியில் யோசித்த கிருஷ்ணர், கூடவே ஒரு தந்திரமும் செய்தார் அர்ஜுனனுக்காக.

அக்னியே! நாங்கள் நீராடவே வந்தோம். எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை. என்ன செய்வது?” என யோசிப்பது போல நடித்தார். 
உடனே, எடுக்க எடுக்க அம்புகள் குறையாத அம்பறாத் தூணியையும், காண்டீபம் எனும் வில்லையும் அர்ஜுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான். அப்புறமென்ன... காண்டீபத்தைக் கொண்டு வருணன் உள்ளே நுழையமுடியாத அளவுக்கு அம்புகளாலேயே பந்தலிட்டு (ஒரு சொட்டு நீர் கூட புகாத வண்ணம்), வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினான் அர்ஜுனன். முன்னதாக ரிஷிகள் முதலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். மூலிகைகள் நிறைந்த அந்த வனத்தை 21 நாட்கள் எரித்து தீர்த்தார் அக்னி.
பிறகு ஸ்ரீகிருஷ்ணர், “பசியா, வாழ்வியலா என்றால், பசி போக்குவதே முதல் காரியம். அக்னி பசியாறுவது லோக கல்யாணம். இனி, உங்களுடைய தவபலத்தால் மீண்டும் காண்டவ வனத்தைப் புதுப்பிக்கும் சக்தியையும் வழங்கு கிறேன்என்று காண்டவ வன ரிஷிகளுக்கு அருள்புரிந்தார்.

இந்த 21 நாட்களே அக்னி நட்சத்திரமாக இன்றளவும் தொடர்கிறது. பூமத்திய ரேகைக்கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம்; புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும்.
  
இந்த காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயணிக்கும் காலம், ‘கத்ரி காலம்' என பண்டைய பாரத வானியலாளர்கள் கணித்துள்ளனர். சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பம் அதிகம் என்பது விஞ்ஞானம்.
கார்த்திகையும் கத்திரியும்! 
தாரகாசுரனை அழிக்கவேண்டி அனைத்து தேவர்களும் மஹாதேவனான ஈஸ்வரனிடம் முறையிட்டனர். அவர்களின் இன்னல்களைக் கண்டு சினந்து, தனது நெற்றிக்கண்ணை திறந்தார் சிவனார். அப்போது ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிவந்தன. அவற்றின் பிரகாசத்தை அன்னை பார்வதியால்கூட தாங்க இயலவில்லையாம்! 

அந்த ஆறு ஒளிப் பிழம்புகளையும் வாயுவிடம் ஒப்படைத்தார். வாயு அவற்றைக் கொண்டு இமயமலையின் அடியில் உள்ள சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கே தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக, ஆறு  தாமரை மலர்களில் தவழ்ந்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் எடுத்துவளர்த்தனர். அவ்வேளையில் தீப்பொறிகளின் வெம்மை, அதாவது குழந்தைகளின் வெம்மை - உக்கிரம் தணிகிறது. கார்த்திகைப் பெண்களிடம் இந்த உஷ்ணம் (அக்னி) இடம்பெயர்கிறது. பின்னர், கார்த்திகைப் பெண்கள் உமையிடம் குழந்தை களைச் சேர்க்க, அவள் அவர்களை ஆனந்தத்தில் அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுகனாக, அழகனாக, முருகனாக தோற்றம் தந்தனர். 

கார்த்திகைப் பெண்கள் கார்த்திகை நட்சத்திர மாக மாறும் பேறு பெறுகிறார்கள். மங்காத ஒளியுடன் அக்னியின் அம்சமாக மாறி ஜொலிக்கிறார்கள். கார்த்திகை நட்சத்திரத்துக்கு அக்னியே அதிபதி. கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பிரவேசிப்பதே கத்திரி எனப்படும். கத்திரிக்கு முந்தைய காலம் முன்கத்ரி. பிந்தைய காலம் பின் கத்திரி. கத்ரியின் உக்ரம் தணிக்க தணிகைவேலனை வழிபடுவது சிறப்பு.    (பவிஷ்யோத்ரபுராணம்).
அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது?

சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும். 
கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். ஏழைகள், அந்தணர்கள் இயலாத வர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம். 
கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.
விஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு. 
இந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு,
அஸ்வத் த்வஜாய வித்மஹே!
பாஸ ஹஸ்தாய தீமஹி!   
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!
என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.
சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.
இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு
பணிகளைச் செய்யக்கூடாது. அதேபோல்  நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.

அக்னி பூஜை!
இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர்.
அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர்.
அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.
ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. முக்கிய குணம் - பிரகாசம், ரூபம் - ஹிரண்மயம் (தங்கத்தைப் போன்றது).
அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை (ஹோமத் தீயில் இடும்பொருட்களை) கொண்டு சேர்க்கிறார். அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும்.  பிரசாதமாக முறையே ஞாயிறு - பாயசம், திங்கள் - பால், செவ்வாய் - தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் - தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் - சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி-வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனி - பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும். 

சூரியபகவானைப் போற்றுவோம்!
வானுலகமாகிய சுவர்க்கத்தில் சூரியன், இடைவெளியில் மின்னல், மண்ணுலகில் அக்னி என மூவுலகிலும் நிலைத்திருப்பது சூரியனே என்கின்றன ஞானநூல்கள்.
நமது பேரண்டத்தை ஒரு முட்டையைப் போல கற்பனை செய்யுங்கள். அதன் மேல் பகுதி: பூமி முதலான ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜலலோகம், தபோலோகம், சத்தியலோகம்). கீழ்ப் பகுதி: அதல, சுதல, விதல, ரசாதல, தலாதள, பாதாள, மஹாதள லோகங்கள் ஆகும்.  

இவற்றுள், பூமியின் மத்தியில் மேரு பர்வதம் உள்ளது. அந்த மலைக்கு பொன்மயமான சிகரங்கள் நான்கு உண்டு. ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை விஸ்தீரணம் கொண்டது. அவை: சௌமனஸம் - பொன் மயம், ஜோதிஷ்கம் - பத்மராகம் மயம், சித்துரம் - சர்வதாது மயம், சாந்திரமாசம் - வெள்ளி மயம். இந்த நான்கில் உத்தராயனத்தில் சௌமனஸம் எனும் சிகரத்தில் இருந்தும், தக்ஷிணாயனத்தின்போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்திலிருந்தும் உதயமாகிறார் சூரியன். விஷூக்களின்போது இரண்டுக்கும் நடுவிலிருந்து உதயமாகிறார்.
சூரியனை தேவாதிதேவர்களும் வழிபட்டு அருள்பெறுகிறார்கள். உதய நேரத்தில் இந்திரன், மதியப் பொழுதில் வாயு, அஸ்தமன நேரத்தில் வருணனும் சந்திரனும், அர்த்தஜாமத்தில் குபேரன், இரவின் முடிவில் மும்மூர்த்தியர் ஆகியோர் வழிபடுகிறார்களாம். அதேபோல் அஷ்டதிக்கிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபடுவதாகப் புராணங்கள் சொல்லும்.
இப்படி தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் பூஜிக்கப்படும் சூரியனை நாமும் நாளும் வழிபட்டு வந்தால், பிணிகள் நீங்கும், ஆயுள் பெருகும். சரி! அவரை வணங்கும்போது என்ன சொல்லி வணங்கலாம்?
 அந்த ஸ்லோகங்கள்:
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ரூசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர்மரீசிமான்
 
திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்:


பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி: பரேசாய நமோ நம:
   
அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோநம:
கமலாஸன தேவேச பானு மூர்த்தே நமோ நம:
   
தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:
ஸகலேசாய ஸூர்யாய சாயேசாய நமோ நம:
ஸ்ரீசூர்ய ஸ்தோத்ரம்
அக்னி நட்சத்திரம் 2017 ம் ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி நிறைவடைகிறது. Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல விரிவான சிந்தனைப் பதிவு.
மறந்தவை நினைக்க வைத்தது.
மிக்க நன்றி சகோதரரே
https://kovaikkothai.wordpress.com/
தொழில் நுட்ப வேலைகள் தொடர்கிறது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms