வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, March 22, 2017

எங்கும் நிறைந்தவனே -'உலக தண்ணீர் தினம்’

எங்கும் நிறைந்தவனே -'உலக தண்ணீர் தினம்
நாம் எந்தத் திரவத்தைப் பற்றி நினைத்துப்பார்த்தாலும் அதில் நீர் இருக்கிறது. ரத்தம், மது, பழரசம் என்று எதையெடுத்தாலும் எல்லாமே நீர்தான். அதில் சிறிதளவு மற்ற விஷயங்களும் கலந்து பரவியிருக்கின்றன, அவ்வளவுதான். பெட்ரோலியம், சமையல் எண்ணெய் போன்ற தூய்மையான திரவங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆனால் நீருடன் நாம் கொள்ளும் உறவுக்குப் பக்கத்தில், அவையெல்லாம் வரவே முடியாது.

நீர் என்பது எங்கும் காணப்படுவது, நம்முடன் நெருக்கமானது என்பதாலேயே, அதை ஒரு முக்கியமான விஷயமாகவே நாம் கருதுவதில்லை: தினமும் நாம் அதைக் குடிக்கிறோம், தொடுகிறோம், அதைக் கொண்டு கழுவுகிறோம், துவைக்கிறோம், பொருட்களை ஈரப்பதத்துக்கு உள்ளாக்குகிறோம், உலர வைக்கிறோம், நீரைக் கொதிக்க வைக்கிறோம், உறைய வைக்கிறோம், அதில் நீந்துகிறோம்.

வெவ்வேறு தட்பவெப்ப நிலையையும் அழுத்தத்தையும் கொண்டிருக்கும் நீரின் வெவ்வேறு பரப்புகளைத் தேடி பயணம் செய்ய வைக்கும் இயற்கைச் சூழலைக் கொண்ட உலகத்தில் நாம் வாழ்கிறோம். வேறுபட்ட அந்தத் தட்பவெப்பநிலைகளில் நீர் வெகு லாவகமாகத் திடப்பொருளாகவும் திரவமாகவும் வாயுவாகவும் மாறுகிறது (சில சமயங்களில் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளையும் அடைகிறது).

நீரை ஆராய ஆராய, அது மென்மேலும் புதிரானதாகத்தான் தோன்றுகிறது. நாம் அதிலிருந்து உருவானவர்கள் என்பதால், அதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். நாம் எதனால் உருவாகியிருக்கிறோமோ, அது இப்படிப்பட்ட ஒரு புதிராக இருக்கிறது என்பதே, ஒருவேளை நமக்கு வியப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

நீரைப் பற்றிய பல விஷயங்கள் நமக்கு விநோதமாகத் தோன்றினால், கீழே வரும் விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?: குளிர்ந்த நீரைவிட வெந்நீர் விரைவாக உறைந்துவிடும். இந்த விசித்திர இயல்புக்கு பெம்பா விளைவு என்று பெயர் (Mpemba effect).

தான்சானியாவைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவன் எராஸ்டோ பி பெம்பா, 1963-ல் வகுப்பறைப் பரிசோதனையின் போது கண்டுபிடித்ததால்தான், அந்த விளைவுக்கு இந்தப் பெயர். 

நீர் இருக்கும் நிலையினை பொருத்தும் அந்த நிலையின் பெயரும் மாறுகிறது.
ஆழ்துளை கிணறு, கிணறு ,குளம் ,குட்டை, ஏரி,ஆறு, அருவி,சுனை,நீருற்று ,கடல்,மழை என அழைக்கப்படுகிறது.

மறைந்த கடல்
1960-ம் ஆண்டு சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்தது ஏரல் ஏரி. இதன் பரப்பளவு கடல்போல் பறந்துவிரிந்து இருந்ததால், இந்த ஏரிக்கு 'ஏரல் கடல்' என்ற பெயரும் உண்டு. இந்த ஏரல் கடலானது மத்திய ஆசியாவைச் சேர்ந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அமைந்திருந்தது. ஷியர் தர்யா மற்றும் அமு தர்யா என்ற இரண்டு ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரை வாரிவழங்கியது. இந்தக் கடலைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு.


மத்திய ஆசியாவில் அதிகான இடங்கள் வறண்ட நிலங்களாகவே இருந்தன. அதனால் இந்தச் சதுப்பு நிலங்களையும், ஏரல் ஏரிக்குத் தண்ணீர்தரும் இரண்டு ஆறுகளையும் தடுத்து பருத்திப் பயிர் செய்ய பயன்படுத்தலாம் என்று சோவியத் யூனியன் சொல்ல... இந்த ஏரியை நம்பியிருந்த நாடுகள் சம்மதம் தெரிவித்தன.
விளைவு அந்த ஏரிக்கு தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளும் தடுக்கப்பட்டு சிறுசிறு கால்வாய்களாக மாற்றப்பட்டன. மேலும், ஏரியின் நீரையும் விவசாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. 1980-ம் ஆண்டில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் பருத்தியை உற்பத்தி செய்துவந்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை சரசரவென உயர ஆரம்பித்தது. பருத்திச் செடி, தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடும். இருந்தாலும், அனைவரும் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்ப்படுத்தத் தொடங்கினர். விளைவு, நிலங்கள் அனைத்தும் விஷமேறின. அதனால், தண்ணீரின் அளவும் அதிகமாகத் தேவைப்பட 'ஏரல் ஏரியின்' நீரையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். 
இதோடு விட்டிருந்தால்கூட 'ஏரல் கடல்' தப்பித்திருக்கும். ஒருபுறம், ரசாயன உரங்களால் நிலத்தை அழித்துக் கொண்டிருந்தனர். மற்றொருபுறம், தொழிற்சாலையிலிருந்து வெளி யேற்றப்பட்ட வேதியியல் கழிவுகள், குப்பைகள் என அனைத்தை யும் கடலில் கொட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்களும், 'ஏரல் கடலும்' தனது கனிம வளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கின. ஏரி தண்ணீர், ரசாயனக் கழிவுகளால் விஷமேறி இருந்ததால்... மீன்களும் இறக்கத்தொடங்கின. அதனால் ஏரியில் மீன்பிடித் தொழிலும் நின்றுபோனது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு ஏரல் கடலும், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாலைவனங்களாக மாறத்தொடங்கின. ஏரியில் இருக்கும் விஷம்... காற்றில் கலந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம்வரை தாக்கியதால், அந்தப் பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இன்று அந்தப் பூமியே ஒரு பாலைவனமாக மாறிவிட்டது. ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில் போக்குவரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், படகுகளும் தண்ணீர் இல்லாத அந்த ஏரியின் மணலில் புதைந்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

தண்ணீரைப் பாதுகாக்கத் தெரியாமல் சிறு கால இடைவெளிக்குள் ஒரு கடலையே இந்த உலகம் இழந்திருக்கிறது. வெறும் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளால் மட்டும் இந்தப் பேரழிவு ஏற்படவில்லை. விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தியதும் இந்தக் கடல் அழிந்துபோனதுக்கு மிகப்பெரிய காரணம். இன்று நாமும் அப்படி ஒரு தவற்றைத்தான் செய்துவருகிறோம். விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நிலங்களில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, நிலங்களை மட்டும் அல்லாமல் நிலத்தடி நீர், ஆறு மற்றும் ஏரி நீர் அனைத்தையும் அழித்துவருகிறோம். மழை வராமல் இருப்பதற்கும், நீர் வற்றிப்போனதற்கும் இயற்கை மட்டும்தான் காரணமா? மக்களும்தான்  
உலக தண்ணீர் தினம் கொண்டாடுவதன் நோக்கம்

1993ல் முதல் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பலகோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் இன்றுவரை அகலவில்லை.மக்கள் தொகை அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.

முந்தைய காலத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? 

இப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.
எனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது.

இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு படுத்துகின்றனர் . வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.

எனவே ஒவ்வொரு ஆண்டும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர்நாளில் முன்னெடுப்பதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் திட்டமாகும்.

இத்திட்டத்தின் படி 2006க்கான உலக நீர் நாள், யுனெஸ்கோவினால் 'நீரும் கலாசாரமும்' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்டது.
2007ல் 'நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளல்' என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. 2008ல் 'சுகாதாரத்திற்கான ஆண்டாகவும்',
2009ல் தண்ணீர் மற்றும் வாய்ப்புக்கள் பகிர்ந்துகொள்ளல்' ஆண்டாக வும், 2010ல் 'தரமான நீர்' என்ற கருப்பொருளை கொண்ட ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது. 

அதன்பின், 2011ல் நகரங்களுக்கு 'தண்ணீர் நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்',
2012ல் 'தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு',
2013ல் 'நீர்நிறுவனம்',
2014ல் 'நீரும் ஆற்றலும்',
2015ல் 'நீரும் நிலையான  மேம்பாடும்',
2016ல் 'சிறந்த நீர் சிறந்த தொழில்கள்' என்பன உள்ளிட்ட கருப்பொருட்களில் ஆண்டுகள் கொண்டாடப்பட்டன.

இந்த 2017ல் 'ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?' என்ற கருப்பொருள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த 'உலக தண்ணீர் தினத்தில்' (மார்ச்-22) அருகில் இருக்கும், ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருக்கும் கனிமவளங்கள், கொள்ளைபோகாமல் பாதுகாக்கவும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களை அழிக்காமல் இருப்பதற்கும் சபதம் எடுப்போம். 

 print this in PDF Print Friendly and PDF

Sunday, March 19, 2017

உலக சிட்டுக்குருவி தினம்: மார்ச் 20

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ. நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். *சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.

 print this in PDF Print Friendly and PDF

Thursday, March 9, 2017

ஹோலி திருநாள் 12–3–2017

ஹோலி திருநாள் 12–3–2017

இரண்யகசிபு என்ற அசுரனின்   மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை.

தான் பெற்ற வரங்களால், உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார்? என்ற அகம்பாவம் இரண்ய     கசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும்என்று தன் மகனிடம் கூறினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் மீது இரண்யகசிபுவுக்கு கோபம் ஏற்பட்டது. மகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்திரவதை செய்ய தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை விஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர்; தொடர்ந்து மதம் கொண்ட யானையால் மிதிக்கச் செய்தனர். மலையில் இருந்து உருட்டி விட்டனர்.

ஆனால் இந்த துன்பங்கள் எதுவும் பிரகலாதனை பாதிக்கவில்லை. அவன் நாவில் இருந்து எப்போதும் வெளிப்படும் நாராயணரின் நாமம், அவனை காத்துக் கொண்டே இருந்தது. இரண்யகசிபு தன் மகனை, துன்புறுத்துவதற்கு மற்றொரு முயற்சியை கையில் எடுத்தான். இரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான்.

மீண்டும் ஒரு முறை பிரகலாதனிடம், தன்னுடைய நாமத்தையே உச்சரிக்க வேண்டும் என்று கூறினான் இரண்யகசிபு. ஆனால் நாராயணரே முதல் கடவுள். அவரது நாமத்தையே உச்சரிப்பேன்என்று பிடிவாதமாக இருந்தான் பிரகலாதன். அதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.

அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் எரிந்து ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் அக்னியில் இருந்து வெளிப்பட்டான். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ்   கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.

ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலிஎன்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

 print this in PDF Print Friendly and PDF

Monday, March 6, 2017

சூனியக்காரக் கிழவி

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.

தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.

நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே”.

கேள்வி :ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு, விடை சொன்னால்தான், நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்).

தோற்ற மன்னன், பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.

கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள் : விடை சொல்கிறேன். அதனால், அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும் ,உனக்கு உன் நாடு கிடைக்கும்.
ஆனால் எனக்கு என்ன கிடைக்கும் ?

அவன் சொன்னான்,"என்ன கேட்டாலும் தருகிறேன்”.

சூனியக்காரக் கிழவி, விடையைச் சொன்னாள்,
  
"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே,
ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.

இப்பதிலை அவன் அவனை ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.


அவள் கேட்டாள் "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்,ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் போது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம் ?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்

"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் , முடிவு நீ தான் எடுக்க வேண்டும் என்று,

அவள் சொன்னாள்,"முடிவை என்னிடம் விட்டு விட்டதால்,நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!என்றாள்.

*ஆம்! பெண், அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள். முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.


நன்றி : வாட்ஸ்அப்பில் பகிர்வு : திருமதி ரதி விக்னேஷ்

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

print this in PDF Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms