Sunday, November 17, 2013

பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து!


தோஷங்களாகிய வாத, பித்த கபங்களின் சம்பந்தமில்லாமல் எந்தவித காய்ச்சலாகட்டும், நோய்களாகட்டும் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
வெயிலில் பறக்கும் பறவை, தன் நிழலைப் பார்த்து "நீ மேற்கே போ, நான் தெற்கே போகிறேன்' என்று எவ்வாறு கூற இயலாதோ, அதைப் போலவே, நோய்கள் எத்தனை வகையானாலும், மூன்று தோஷங்களின் சேர்க்கை இல்லாமல் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த வகையில் பன்றிக்காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்தே தோஷங்களின் சீற்றத்தை ஊகித்தறிந்து வைத்தியம் செய்தோமேயானால், நோய் விரைவில் விலகிவிடும்.
எச்.என். வைரஸ், உடலில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோஷங்களின் உள்ளே ஊடுருவும்போது, தோஷங்கள் தம் கட்டுப்பாடுகளை இழந்து சீற்றம் கொள்கின்றன. இருமல், தும்மல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, வாந்தி, நாக்கு சுவையற்றுப்போதல், சோம்பல், நாவறட்சி, கொதிப்புடன் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவை வாத கப தோஷங்களின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவர் அருகில் சென்று பேசுவதை தவிர்க்க வேண்டும். தும்முவது, இருமுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நபருக்கு வெந்நீர் பருகச் செய்வது மிகவும் நல்லது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால் பித்த தோஷத்தின் "சரம்' எனும் மலத்தை இளக்கும் குணம் சீற்றமடைந்திருப்பதைத் தெரிவிக்கிறது. அந்த நிலையில் சாதாரண வெந்நீரைவிட கோரைக்கிழங்கு, பர்பாடகம், வெட்டிவேர், சந்தனம், நன்னாரி, சுக்கு ஆகிய மூலிகைகளைச் சம அளவில் மொத்தமாக பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, வடிகட்டி, சூடு ஆறியதும் சிறுகச் சிறுகப் பருகச் செய்ய வேண்டும். இதற்கு "ஷடங்க பாநீயம்' என்று பெயராகும்.
இந்த இருவகை நீரும் செரிமானத்தைத் தூண்டி உடலில் உணவுச் சத்து, இரத்தம் பரவும் வழிகள், வியர்வை தோன்றும் வழிகள் ஆகியவற்றைத் தூய்மையடையச் செய்யும். உடலுக்கு வலுவைக் கூட்டும். சுவையுண்டாக்கும். உடலை வியர்க்கச் செய்யும். பன்றிக் காய்ச்சல் ஏற்படாதிருக்கவும் இந்த ஷடங்க பாநீயம் எனும் நீரை யாவரும் பருகலாம். வியாக்ரயாதி கஷாயம் 15 மிலி எடுத்து 60 மிலி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து சிட்டிகை தாளீசபத்ராதிசூரணத்துடன் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது.
முன் குறிப்பிட்ட அறிகுறிகளுடன் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சளியில் ரத்தம் கலந்திருத்தல், மயக்கம், ரத்த அழுத்தம் குறைந்து விடுதல், நகங்கள் நீல நிறமாக மாறுதல், கோழை, பித்தம் அதிகமாக வெளியேறுதல், வாய் குழ குழத்தல், வாய்க்கசப்பு, தூங்கி வழிதல் போன்றவை காணப்பட்டால் கபத்துடன் பித்தம் சீற்றமாகியுள்ளதாக அறியலாம்.
ஒரு வில்வாதி குளிகையை, 15 மிலி குடூச்யாதி கஷாயத்துடன் சேர்க்கப்பட்ட 60 மிலி தண்ணீரில் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, காய்ச்சலுடன் கூடிய மேற்கூறிய அறிகுறிகள் மறைந்து விடும். ஆய்வகப் பரிசோதனையில் நோயாளிக்கு எச்.என்.வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டால் ஆஸ்பத்திரி அல்லது வீட்டில் தனி அறையில் ஓய்வெடுத்து மருந்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.
வாத பித்த தோஷங்களின் சீற்றத்தால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் தலைவலி, விரல் கணுக்கள் சிதைந்து போவது போன்ற துன்பம், உடல் கொதித்தல், மயிர்க்கூச்செரிதல், தொண்டையும் வாயும் வறண்டு போதல், வாந்தி, நாவறட்சி, மயக்கம், மூர்ச்சை, நாக்கு சுவையற்றுப் போதல், தூக்கமின்மை, அதிகமாகப் பேசுதல், கொட்டாவி போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்துகாந்தம் கஷாயம் 15 மிலி, 60 மிலி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, ஒரு ஸ்வர்ண முக்தாதி மாத்திரையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பன்றிக் காய்ச்சல் இருமல், தும்மல், சளி அதிகமிருந்தால் சீதச் ஜுராரி எனும் கஷாயம், துளசி மற்றும் மிளகு ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. அதை காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இது போன்ற அறிகுறிகள் குறைவதுடன் மற்றவர்களுக்குப் பரவும் தன்மையும் குறைந்துவிடும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms