Sunday, November 8, 2015

தீபாவளி பூஜைகள்

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்றைய தினம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடு கின்றனர். தீமைகள் இல்லாதொழிந்து மக்கள் வாழ்வில் ஒளிமயமான புதுவாழ்வு ஆரம்பமாக வேண்டுமென்பதே தீபத் திருநாளின் அர்த்தமாகும். தீங்குகள் மாத்திரமன்றி மக்கள் உள்ளங்களில் உள்ள இருளும் அகல வேண்டுமென்பதை தீபாவளியின் பிரார்த்தனையாக நாம் ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.

இந்து சமயம் ஆதியும் அந்தமும் இல்லாததென ஆன்றோர் கூறுகின்றனர். இந்து மதம் கூறுகின்ற தத்துவங்களுக்குள் அடங்கியுள்ள அர்த்தங்களை ஆராய்ந்து நோக்குமிடத்து அம்மதத்தின் தொன்மையையும் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்து சமயம் சார்ந்த பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளி விளங்குகிறது. இத்திருநாளை வெறுமனே களியாட்டக் கொண்டாட்டத் துக்குரிய பண்டிகையாக நோக்குவது தவறு.

மனித உள்ளங்களில் குடிகொண்டுள்ள கொடிய குணங்கள், இருள், அகங்காரம், அறியாமை, அஞ்ஞானம் போன்ற வேண்டத்தகாதவை யாவும் அகன்று உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டுமென்ற பெரும் தத்துவத்தைக் கூறுவ தாலேயே தீபாவளித் திருநாள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.


இன்றைய தீபத்திருநாளின் தத்துவங்களை இந்து மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருத்தல் முக்கியம். சமய நம்பிக்கைகள் தொடர்பாக நம் அனை வரிடமும் ஒரேவிதமான நிலைப்பாடு இருப்பதில்லை. எனினும் சமயம் கூறும் தத்துவங்களில் ஏராளமான உண்மைகள் பொதிந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

மகாலட்சுமி பூஜை
கங்கா ஸ்நானம் முடிந்தபின் பூஜையறையில் மகாலட்சுமி விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் விளக்கேற்றி, இனிப்புப் பண்டம் வைத்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழவேண்டும். இதனால் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் கைகூடும். பிள்ளைப்பேறு கிட்டும். சுமங்கலிகள் மேன்மையடைவார்கள்.

லட்சுமி குபேர பூஜை
தீபாவளிக்கு மறுநாள் செய்யலாம். இப்பூஜையில் குபேர படத்துடன் மகாலட்சுமி படம் வைத்துப் பூஜிக்கவேண்டும். "சுக்லாம் பரதரம்' என்று கணபதி பூஜை ஆரம்பித்து, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை குங்கும அர்ச்சனை செய்து, "ஓம் குபேராய நம, ஓம் மஹாலட்சுமியே நம' எனக் கூறி பூஜை செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்கவேண்டும். சென்னை அருகிலுள்ள ரத்தினமங்களத்தில் லட்சுமி குபேரனுக்கு தனி ஆலயம் உள்ளது. இங்கு தீபாவளிக்கு மறுநாள் மிக சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

குலதெய்வ வழிபாடு
நம் வீட்டு குலதெய்வத்தை- குறிப்பாக பெண் தெய்வங்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்த உடை, நிவேதனங்களுடன் வணங்கவேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மேலும் சிறப்பாகும்.

முன்னோர் வழிபாடு
நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களுக்குப் பிரியமானவற்றைப் படைத்து அவர்கள் ஆசியைப் பெறவேண்டும். இதனால் நம் குடும் பத்திற்கும் வம்சத்திற்கும் நன்மை கிடைக்கும்.

கேதாரகௌரி நோன்பு
இவ்விரதத்தை ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் பெண்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பினை பார்வதிதேவி கடைப்பிடித்து ஈசனின் பாதி உடலைப் பெற்றாள். இப்பூஜை செய்வதால் கணவருடன் இணைபிரியாது வாழலாம்.

நோன்பு நோற்கும் முறை: பூஜையறையில் சுவாமி படத்தின்முன் 21 இழை மஞ்சள் சரடு வைத்து, 21 அதிரசம் வைத்து கௌரி பூஜை செய்து, பின்னர் கணவனை வணங்கி சரடு கட்டிக்கொள்ளவேண்டும். மாங்கல்ய பலம் கூடுவதுடன் கணவனின் ஆயுளும் விருத்தியடையும்.

காஞ்சி அருகே உத்திரமேரூரில் உள்ள கேதார கௌரீஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏராளமான பெண்கள் இந்த நோன்பினை மேற்கொள்வர். ஆலய லிங்கத்தின்மீது சரடுகளை வைத்து அர்ச்சகர் பூஜித்துக் கொடுக்க, பெண்கள் 21 அதிரசம் வைத்துப் படைத்துவிட்டு அந்த சரடைப் பெற்றுக்கொண்டு இல்லம் வந்து, கணவன் காலடியில் நமஸ் காரம் செய்தபின் சரடைக் கட்டிக்கொள்வார்கள்.
 
காசியில் தீபாவளி
காசியில் உள்ளோர் நிஜமாகவே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு அன்னபூரணியை வழிபடுவார்கள். அன்று அன்னை தங்கமயமாக ஜொலிப்பதை முழுமையாக தரிசிக்கலாம். அன்றிரவு, தங்க அன்னபூரணி லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் ஊர்வலம் வருவாள். அவளுக்குமுன் தங்க காலபைரவர் வலம்வருவார். இவரை கருவூலப் பெட்டகத்திலிருந்து எடுத்து வந்து ஊர்வலம் நடத்துவார்கள். முடிந்தபின் மீண்டும் கருவூலப் பெட்டகத்திலேயே பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். ஊர்வலம் முடிந்தபின் லட்டுத் தேர் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

அன்னலிங்கம்
இதை தென்னாட்டவர்கள் காசியில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள். காசி கங்கைக்கரையில் மீராகாட் பகுதியை தூய்மை செய்து கோலமிட்டு, தலைவாழை இலையைப் பரப்பி, அதன்மீது சுத்த அன்னத்தால் அன்னலிங்கம் அமைப்பார்கள். மூன்று சதுர அடி பரப்பில் இரண்டு அடி உயரத்தில் லிங்கம் அமைத்து, அதன்முன் சிறிய அன்ன நந்தி அமைப்பர்.
அன்னலிங்கத்தை லட்டு, வடை, பலகாரங்கள், காய்கறிகளால் அலங்கரித்து பூமாலையும், ருத்திராட்ச மாலையும் அணிவிப்பார்கள். பின் 11 மணிக்கு யாத்ரீகர் முன்னிலையில் பூஜை செய்து, பின் 200 பிச்சைக்காரர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பார்கள். பின் 31 ரூபாய் தட்சணை தருவார்கள். இது தீபாவளியன்று நடைபெறும். முன்பெல்லாம் பிராமணர்களுக்குத் தந்த விருந்தை இப்போது பிச்சைக்காரர்களுக்குத் தருகின்றனர்.

துளசி கல்யாணம்
தீபாவளிக்குப்பின் வரும் துவாதசியன்று துளசி கல்யாணம் செய்வார்கள். மணப்பெண் துளசி; மணமகன் நெல்லிக்கொம்பு. (திருமால்). அன்று துளசி மாடத்திற்கு செம்மண் இட்டு, செடிக்கு மாலை போட்டு, மாடத்தின்முன் கோலமிட்டு விளக்கேற்றி, துளசிக்கும் நெல்லிக் கொம்பிற்கும் ஆடை அலங்கரித்து பெண்கள் பூஜை செய்வார்கள். இதனால் சுமங்கலி பாக்கியம் கூடும் என்பர்.

ரங்கன் பெறும் சீர்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மாமனார் பெரியாழ்வார்; ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. இவரிடம் தீபாவளியன்று ரங்கர் சீர் பெற்றுக்கொள்வார்.

கோவில் சிப்பந்திகளுக்கு கோவில் சார்பில் முதல் நாள் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் கொடுப்பார்கள். மறுநாள் தீபாவளியன்று நீராடியபின் ஆலயம் வருவார்கள். அங்கு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள். அத்துடன் ஆலயத்திலுள்ள ஆழ்வார்கள் சந்நிதிகளில் திருமஞ்சனம் செய்வித்து புத்தாடை அணிவிப்பார்கள்.

அதன்பின் அனைவரும் கிளிமண்டபத்திற்கு வந்துசேர்வார்கள். ரங்கநாதர் திருமஞ்சனமானபின் புத்தாடை அலங்காரத்துடன் சந்தன மண்டபம் வந்தடைவார். அங்கு மாமனார் சீர்வரிசை தரகாத்துக்கொண்டிருப்பார். ரங்கர் வந்ததும், 1,000 ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புத்தாடைகளில் கட்டி ரங்கனின் காலடியில் வைப்பார்கள். மாமனாரிடம் சீர்பெற்றபின் ரங்கர் ஒரு ரூபாய் நாணயத்தை பக்தர்களுக்குத் தருவார். இதைக் காண்பவர்களும் பெறுபவர்களும் பணத்தட்டுப்பாடின்றி நன்கு வாழ்வார்கள்.

சிரார்த்தம் செய்யும் சாரங்கன்
ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் குடந்தை சாரங்கபாணி கோவிலில் ஆராவமுதன் வலது மோதிர விரலில் பவித்திரம் அணிந்து, அர்ச்சகர் கையில் தர்ப்பை அளித்து சிரார்த்தம் செய்ய உத்தரவிடும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமிக்கு அன்று சிரார்த்த சமையல்தான் நிவேதனம் செய்யப்படும். பின் இரண்டு பிராமணர்களுக்கு சிரார்த்த திதி போஜனம் அளிப்பார்கள்.

சாரங்கபாணி கோவிலுக்கு 140 அடி உயர ராஜகோபுரம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் லட்சுமி நாராயணன் எனும் பக்தர். பலரிடமும் உதவிபெற்று செய்து முடித்தார். இதற்காக அவர் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. ஒரு தீபாவளியன்று அவர் பரமபதம் சேர்ந்தார். பிள்ளையில்லாத அந்த பக்தருக்காகவே சாரங்கபாணி சிரார்த்தம் கொடுக்கிறார்.

தீபாவளியன்று நடந்தவை
 ஆதிசங்கரர் ஞானபீடம் நிறுவினார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பிய நாள். விக்ரமாதித்தன், மகாபலி, நரகாசுரன் மகன் பகதத்தன் ஆகியோர் முடிசூட்டிக் கொண்டு அரியணை ஏறிய நாள். ஜைனகுரு மகாவீரர், சீக்கியகுரு குருநானக், ஆரிய சமாஜ தயானந்த சரஸ்வதி ஆகியோர் முக்திபெற்ற தினமும் தீபாவளிதான். பாண்டவர்கள் வனவாசம் முடித்து இந்திரப் பிரஸ்தம் திரும்பிய நாளும் இதுதான்.

பாற்கடல் கடைந்தபோது லட்சுமி தேவி தோன்றினாள். தோன்றிய அன்றே திருமாலை மணந்துகொண்டாள். குபேரன் தான் இழந்த தன் நிதிகளை திரும்பப் பெற்றதும் தீபாவளி தினத்தில்தான்.
வரலாற்றில் தீபாவளி மதுரை மாநகரில் திருமலைநாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது என்பர்.

கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னன், தன் கன்னட கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளிப் பரிசு தந்ததாக குறிப்புகள் உள்ளன. தென்னிந்திய தீபாவளியின் முதல் குறிப்பு இதுதான். குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டில் தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜை செய்ய மானியம் அளித்த தகவல் உள்ளது.

அதுபோல காளஹஸ்தி ஆலயத்திலுள்ள கல்வெட்டில் தீபாவளியன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது குறிக்கப்பட்டுள்ளது. 

மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து சமபந்தி போஜன முறை செய்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும், காமசூத்ராவில் கூராத்திரி என்றும், காலவிவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்களில் தீபாவளியை சுக்ராத்திரி எனவும் கூறியுள்ளனர்.

தஞ்சை சரஸ்வதி மகாலிலுள்ள ஆகாச பைரவர் ஜல்பம் என்ற ஓலைச் சுவடியில் வாண வேடிக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. 

தீபாவளி பட்டாசு வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப என்ற உருதுச் சொல்லே மத்தாப்பு ஆனது.

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

5 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nice article many things like ரங்கன் பெறும் சீர்!,சிரார்த்தம் செய்யும் சாரங்கன், துளசி கல்யாணம் அன்னலிங்கம் and some listed in தீபாவளியன்று நடந்தவை are new things ,hearing for first time
-Anand

‘தளிர்’ சுரேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தீபாவளியைப் பற்றிய சுவாரஸ்யமான சிறப்பான தகவல்கள்! பூஜைகளை பற்றி சொன்னது பலருக்கும் பயனளிக்கும். நத்தம் வாலீஸ்வரர் ஆலயத்திலும் கேதார நோன்பன்று மாலையில் பக்தர்கள் கூடி அதிரசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவர். நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக அருமையான பதிவு.
மிக்க நன்றி ஆய்விற்கு.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
vETHA.lANGATHILAKAM
dENMARK

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms