Wednesday, January 11, 2017

போகி -பொங்கல் -மாட்டுப் பொங்கல்

போகி பண்டிகை என்பது மார்கழிமாதம் முடிந்து தைமாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். 

அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது. போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. 
முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில்லை.  எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை. எனவே, போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. 
பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பது அவசியமல்லவா? எனவேதான் போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். தை முதல் நாள் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.


உழவர் திருநாள்!
இந்தப் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில் இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது. சூரியசக்திதான் பூமியில் அனைத்து வளர்ச்சிக்குமான அடிப்படை. தாவரங்கள் வளரவேண்டும் என்றாலோ, மனிதனின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி மேம்பட வேண்டும் என்றாலோ சூரிய சக்தி மிகவும் அவசியம். சூரியனின் தன்மையில் மாறுபாடு காரணமாக தை மாதம் பீடை தொலைந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்தக் காலத்தில் சூரிய சக்தியை தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளும் பொருளோ, மனிதனோ வளர்ச்சியை உற்சாகத்தை உருவாக்க முடியும். இதனால் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் தேவையான உணவு உற்பத்தியும் பெருகும். வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர முடியும். 
உணவை ஒரு பொருளாக நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது நமது உயிர், வாழ்தலுக்கான இன்றியமையாத சக்தியாகும். உணவு கிடைக்காதபோதுதான் நமக்கு இந்த உண்மை புரியும். எனவே உணவு உற்பத்திக்கும் பயிர்கள் வளர்வதற்கும் காரணமான சூரியனுக்கு நன்றி தெரிவித்து அர்ப்பணம் செய்ய விரும்புகிறோம். குறிப்பாக விவசாய குடும்பத்தில் உள்ளவர்கள் இதை உணர்வுபூர்வமாக செய்வார்கள். தை முதல் தேதி அதாவது ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடைவதால் அதை சூரியனுக்கு அர்ப்பணிக்கும் நாளாகவும் அமைகிறது. 
நாம் உண்ணும் உணவு உயிருக்கு ஊட்டம் வழங்குவதால் அதற்கு காரணமான மண்ணுக்கு, உணவைக் கொடுக்கின்ற விவசாயிக்கு, அதை சமைத்து வழங்கும் தாய்மார்களுக்கு, உற்பத்திக்கு உதவியாக இருக்கின்ற கால்நடைகள் குறிப்பாக மாடுகளுக்கு, மேலும் சுற்றுச் சூழலுக்கு அனைத்திற்கும் மூலமாக இருக்கின்ற சூரியனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பதை உணர்த்துவதுதான் பொங்கல் கொண்டாட்டம். வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர முடியும். போகிப் பண்டிகை பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் ஆகிய திருவிழாக்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றழைக்கப்படும் தை முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுவதால் இதைத் தமிழர் திருநாள்என்றும் விவசாயக் குடும்பங்களில் இந்நாளை அறுவடைத் திருநாள் என்று கொண்டாடப்படுவதால் உழவர் திருநாள்என்றும் அழைக்கிறோம்.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
print this in PDF Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms