வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, June 24, 2015

ஜுன் 21 - உலக யோகா தினம் இணைப்பு


சர்வதேச யோகா தினம் 21.06.2015 அன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் யோகா என்னும் அரிய கலையை உலகுக்கு தந்த நாடு இந்தியா.
அந்த கலையை கவுரவிக்கும் வகையிலும், அது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தும் விதத்திலும் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, 177 நாடுகளின் ஆதரவுடன், ஜூன் 21–ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி அறிவித்தது.
அந்த வகையில் முதலாவது சர்வதேச யோகா தினம், நேற்று உலகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி வாழ்த்து
முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர்சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டார்.
அதில் அவர், ‘‘முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி உலக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். யோகாவை நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற நாம் உறுதி மேற்கொள்வோம்’’ என குறிப்பிட்டிருந்தார்.
டெல்லியில் கொண்டாட்டம்
தலைநகர் டெல்லியில் ராஜபாதை, வழக்கமாக குடியரசு தின கொண்டாட்டத்தில் களை கட்டும். நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டியும், அது களைகட்டியது. ராஜபாதையே, யோகா பாதையாக மாறியது.
சர்வதேச யோகா தின கொண்டாட்டம், பயிற்சியில் பங்கேற்பதற்காக நள்ளிரவில் இருந்தே அனைவரும் வந்து குவிய தொடங்கினர். பிரதமர் நரேந்திர மோடி காலை 6.40 மணிக்கு அங்கு வந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன், யோகா குரு பாபா ராம்தேவ், மத தலைவர்கள், யோகா ஆசிரியர்கள் அமர்ந்தனர்.
36 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பிரதமர் திரு.மோடி அவர்கள் மாணவர்கள் மற்றும் யோகா பயிற்சி யாளர்களுடன்





















ராஜாபாதையில் யோகா செய்யும்போது
சியாச்சின் மலையில் இந்திய இராணுவ வீரர்கள்

ஜூன், 21 - 2015 அன்று டெல்லி ராஜாப்பாதையில் நடைபெற்ற யோகா சாதனையை பதிவு செய்ய வந்த கின்னஸ் சாதனை பதிவாளர்கள் திரு மார்கே ப்ரிகட்டா மற்றும் விக்டோரியா ஜூலி டீவீடி (ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 35000க்கும் மேற்பட்டவர்கள் யோகாசனம் செய்ததை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது)


அப்போது அவர் கூறியதாவது:
இந்த ராஜபாதை, யோகா பாதையாக மாறும் என யாரேனும் கற்பனை செய்தது உண்டா? நாம் ஒரு (சிறப்பு) நாளை கொண்டாடவில்லை. அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட ஒரு புதிய சகாப்தத்தை தொடங்குவதற்கு மனித மனங்களை பயிற்றுவிக்கிறோம்.
பெரும்பாலான மக்களுக்கு யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டும்தான். இது மிகப்பெரிய தவறு. அப்படியென்றால், சர்க்கஸ்களில் வேலை செய்கிற குழந்தைகளை நாம் யோகிகள் என அழைக்க முடியும். எனவே யோகா என்பது உடலை வளைப்பது மட்டுமல்ல.
ஐ.நா. சபைக்கு நன்றி
யோகா என்பது உடல் உறுப்புகளின் அசைவு மட்டுமல்ல. உடலும், மனமும், ஆன்மாவும் முழுமையாக ஒன்றிணைகிற ஒரு நிலைதான் யோகா. யோகா, வாழ்வில் ஒவ்வொரு நாளின் அங்கம்.
உலகின் எந்த பகுதியும் இன்றைக்கு யோகா இல்லாமல் இல்லை.
இந்த நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததற்காக ஐ.நா. சபைக்கும், தீர்மானத்துக்கு ஆதரவாக நின்ற நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதயம், மனம், உடல், ஆன்மா இணக்கமாக வேலை செய்ய வேண்டும்.
பதற்றமில்லா உலகம் காண யோகா வழிநடத்துகிறது. நல்லிணக்கத்தின் செய்தியை அது பரப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி யோகாசனம் செய்து எல்லோரையும் கவர்ந்தார்

நடிகை கரீனா கபூர்

நடிகை லாரா தத்தா

பாப் பாடகி மடோனா
 திமுக தலைவர் கருணாநிதி தான் மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யோகா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் யோகாதினத்தைப் பற்றியும், பல ஆண்டுகளாக தான் மேற்கொண்டு வரும் யோகா பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், ஜூன் 21ம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மனித குலத்தின் சிறந்த உடல்நலத்திற்கு வழி அமைத்துக் கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பணியில் முக்கிய வெற்றியாகவே கருத வேண்டும்.

பிரான்ஸ்- ஈபில் டவர் அருகில்
ஆப்கானிஸ்தானில்
மலேஷியாவில்

சவுத் கொரியாவில்
தைவானில்
சீனாவில்

Print Friendly and PDF

Tuesday, June 16, 2015

ஜுன் 21 - உலக யோகா தினம்


ஜுன் 21 - உலக யோகா தினம்

ஒரு உயர்ந்த குறிக்கோளை நோக்கி அடியெடுத்து வைக்க முதலில் அதற்க்கான வழி முறைகளை அறிந்து,அதனை செயல் படுத்த, அதனை அடைய தேவையான சிந்தனை தேவை. அதேபோல் மனிதன் பிறந்ததே வாழத்தான். அதற்கு அவனுக்கு நீண்ட ஆயுள் தேவை. அதனால் அவன் அந்த ஆயுளை அதிகரிக்க அவனது உடலையும் உயிரையும்  அழிவிலிருந்து காப்பாற்றி கொள்ள உணவு, உறைவிடம், உடை,உடற்பயிற்சி, மருத்துவம், மருந்து என பல முறைகளில் செயல்பட முதலில் எடுத்துக் கொண்டது உணவுக்கு பிறகு  உடல்-பயிற்சியைத்தான். அதில் முதன்மையானது சிறுசிறு மூச்சுப் பயிற்சிதான்.  இவையே பின் பல முறையாய் பயின்று உடல் பயிற்சியோடு கூடி யோகா என மாறியது.

யோகம் என்ற பதம் யுஜ்என்ற வேர்ச்சொல்லில் இருந்து வருவது. யுஜ் என்றால் இணைவது. மனிதன் எவற்றோடு இணைய வேண்டும் என்பதில்தான் அடிப்படை  உள்ளது.

நான்கு வகையான மனிதர்கள் உள்ளதாக உளவியல் ஆராய்ச்சியாளர்கள் வகுத்து உள்ளனர்

எதையும் ஆராய்பவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள், எதையும் மனதால் பார்ப்பவர்கள்,செயல்புரிபவர்கள். இந்த நான்கு வகை மனிதர்கள் பின் பற்றும் வழி முறைகள் பலவாக இருப்பினும் கீழ் காணும் இந்த நான்கு யோகம்களில் எல்லாமே அடங்குகிறது.

காரியங்களை சுயநலமின்றி பொது நலத்துக்காகச் செய்தால் அது கர்ம யோகம்.

நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஒருசேரத் திரட்டி, ஓர் இஷ்டதெய்வத்திடம் குவித்து, அவருக்காகவே நம் ஐம்புலன்களின் காரியங்களைத் திருப்புவதே பக்தி யோகம்.

நாம் நமது உடல்ரீதியான, மனரீதியான, புத்திரீதியான வாழ்க்கையை மட்டும், அவை தரும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பற்றிக்கொண்டு மட்டும் வாழாமல் அதற்கு மேல் அல்லது அதன் அடி ஆழத்தில் உள்ள ஞானப் பெட்டகமாக உள்ள நம் உண்மை நிலையை   அறிய வைப்பது ஞான யோகம்.

அந்த உண்மை நிலையை உடல் தவம், மனத்தவம் செய்து மூச்சுக் காற்றான பிராணனை அடக்கி அதன்மூலம் ஆன்மாதான் நாம் என்பதை உணர்த்துவது ராஜ யோகம்.


மனிதன்  தனக்குத் தானே இணக்கமாக இருக்க வேண்டும். அவனது அறிவு ஒன்றாகவும், மனது வேறொன்றாகவும் செயல் படும்போதுதான் அவன் தவறுகளைச் செய்கிறான். தான் செய்வது தான் சரி என்று வாதாடுகிறான். அப்படிப்பட்ட மனிதன், தானே தனக்கு எதிரியாக, தன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறான். அடுத்து, மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் மனிதன் இணக்கமின்றி இருக்கிறான்.மேலும் வாழ்க்கையில் எந்த உயர் நோக்கமும் இல்லாதவனாக, தனக்குத் தானே ஒரு சுமையாக இருந்து மறைகிறான்.


இம்மனிதன் தன் உடலை,மனதை கட்டுபடுத்த இந்த யோகா தேவையானதாக இருக்கிறது. இது வெறும் ஆன்மீகம், மதம், மூடநம்பிக்கை எனும் ஒருவழிப்பாதை அல்ல. மனிதன் மனிதத் தன்மைக் கொள்ளவும், தன் இனம் தவறு அற்று செயல்படவும் யோகா அவசியமே.


Print Friendly and PDF

Wednesday, May 27, 2015

மனிதாபிமானத்தின் முன்


சிறுவயதில் திருவான்மியூரில் கலாஷேத்ராவின் தென்னைதமரத் தோட்டம் உள்ளது. அதில் விடுமுறை நாட்களில் நான் எனது நண்பர்களுடன் விளையாடி பொழுது கழிப்பது வழக்கம். அதேபோல் அன்றும் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பேட்டிங் செய்த பையன் பந்தை ஓங்கி விளாச பந்து கொஞ்சம் தூரத்தில் சென்று  செடிகள் நிறைந்த அடர்ந்த பொந்தில் விழ அதை நண்பன் ராஜன் தேடப் போக சற்று நேரத்தில் அவனது அலறல் கேட்க அனைவரும் அவனை நோக்கி சென்றோம். அவன் வலது காலை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தான். அப்பொழுது தான் நாங்கள் அவனை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால் உடனே என்ன செய்யவேண்டும் என்பதை விட பாம்பின் அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனோம்.

சற்று தூரத்தில் இருந்து திரு கிருஷ்ணய்யர் எங்களை நோக்கி வந்தார். வந்தவர் பாம்பு கடித்து இருப்பதும் அதனால் ராஜன் வலியால் துடிப்பதும் உடனே உணர்ந்தவர் எங்களிடம் ஒரு கயிறை தேடித் தர சொன்னார். ஆனால் அது எதற்க்காக என்பது புரியவில்லை,நாங்கள் பாம்பை எண்ணி அனைவரும் கயிறை தேட நான் உள்பட முற்படவில்லை.

அவர் அவசரம்! சீக்கிரம்! என்று கத்திக்கொண்டே இருந்தார்.சிலர் அவர் கத்தியதால் தேடுவதுப் போல் மெல்ல தப்பிக்க எண்ணி சம்பவ இடத்தை விட்டு நகர்ந்தனர்.

திரு கிருஷ்ணய்யர் (எப்போதும் சட்டையணியாதவர்) அப்போது டக்கென்று தனது பூணூலை கழற்றி ராஜனது காலில் பாம்பு கடிக்கு சற்று மேலே இறுக்கிக் கட்டி்னார். பயப்படாதே ஏதோ தண்ணிப் பாம்புதான் கடிச்சி இருக்கு,வா ஆஸ்பிட்டலுக்கு போலாம்.என்று அழைத்து சென்றார்.

நாங்களும் (எஞ்சி இருந்தவர்கள்) கூடவே சென்றோம்.

அது ஒரு சின்ன க்ளினிக்.நாங்கள் அவசரமாக வருவதைக் கண்டு நோயாளிகள் விலக திரு.கிருஷ்ணய்யர் முதலில் உள்ளே நுழைய
டாக்டரும் அவசரத்தை உணர்ந்து எங்களை எதிர்க்கொண்டார்.

டாக்டரிடம் விபரங்களை திரு.கிருஷ்ணய்யர் தெரிவித்தார். ராஜனை சிகிச்சை படுக்கையில் படுக்க வைத்து டாக்டர் அவன் காலை கவனித்து அவனது பாம்புக்கடிக்கு மேலே பூணூலால் கட்டியிருப்பதை பார்த்து  திரும்பி திரு.கிருஷ்ணய்யரை நோக்கி வெரிகுட் நல்ல வேலை செஞ்சிங்கே மிஸ்டர் கிருஷ்ணய்யர். இந்த பையனோட உயிரை காப்பாத்த உங்களடோ பூணூலையே தந்து இருக்கீங்கஎன்றார். அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது  திரு.கிருஷ்ணய்யர் கயிறுக்கு பதிலாக அவர் தனது பூணூலை கட்டி பாம்புக் கடியின் விஷம் பரவாமல் தடுத்து இருக்கிறார்.

அதற்குள் விஷயம் ராஜனது அப்பா அம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் கேள்விப்பட்டு வந்து விட்டனர். டாக்டர் அவர்களிடம் திரு.கிருஷ்ணய்யர் அவர்களின் சமயோசித வேலையை சொல்ல அனைவரும் பாராட்டினர். திரு.கிருஷ்ணய்யர் பெருமிதத்துடன் வெட்கப்பட்டார்.

அய்யர் சாதியினருக்கு பூணூல் எவ்வளவு முக்கியம், புனிதாமானது என்பதை நாம் அறிவோம்.

அன்று பேஸ்புக்,வாட்ஸ்அப், ஈமெயில்,செல்போன் எல்லாம் இல்லை  ஆனால் கேட்டவர்கள் எல்லாம் திரு.கிருஷ்ணய்யரை  பாராட்டினர். இது நடந்தது 1978 ம் வருடம்.

மனிதாபிமானத்தின் முன் மதமும் மதச் சின்னங்களும் ஒன்றும் பெரியதல்ல என்பதை உணர்த்தியது இந்த செயல்.

அதேப் போல் இன்று,

நியூசிலாந்ததில் சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது. 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில் இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர்.

ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் ஹர்மன் சிங் படுப்பதையும் அறிந்தனர். உடனே, வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையை தொடர்பு கொண்டு, லாரி நிறைய வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும், கொண்டு வர செய்து, தங்களுடைய அன்பளிப்பாக வழங்கினர்.சில தினங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை காண சென்ற ஹர்மன் சிங்குக்கு, சிறுவனின் பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

ஹர்மன் சிங்கின் செயல் குறித்த செய்தி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், ஆயிரக்கணக்கானோர் பாராட்டிஉள்ளனர்.

மனிதாபிமானத்தின் முன் மதம் முக்கியமில்லை நல்மனம்தான் சிறந்தது என்பதை மீண்டும் அறிவுறித்திய நிகழ்ச்சி இது.


Print Friendly and PDF

Thursday, May 14, 2015

பத்தாவது ரத்தினம்


ஒற்றுமையாய் இருந்த ஒன்பது ரத்தினங்களுக்குள் ஒருநாள் “நம்மில் யார் பெரியவன்? என்ற சண்டை வந்தது.
 
GEMS
நானே பெரியவன் என்றது வைரம்.

இல்லை நானே பெரியவன் என்றது வைடூரியம்

அட கடவுளே! இந்த சண்டையை தீர்த்து வைக்க ஒரு வழியும் இல்லையா? என்றது கோமேதகம்.

இருக்கிறது என்றது மரகதம்.

என்ன? என்றது நீலம்

நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம்,அந்த போட்டியில் எவன் வெற்றியடைகிறானோ அவனே பெரியவன் என்று நாம் ஒப்புக்கொள்வோம்! என்றது மரகதம்.

என்ன போட்டி அது? என்று எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து கேட்டது வைரம்.

பேராசை பிடித்த மனிதனை,நம்மில் எவன் போதும்! போதும்! என்று சொல்ல வைக்கிறானோ, அவனே நமக்கெல்லாம் பெரியவன் .என்ன சொல்கிறீர்கள், நீங்கள்?என்று கேட்டுவிட்டு எல்லாவற்றையும் சேர்ந்தாற்போல் ஒரு பார்வை பார்த்து வைத்தது மரகதம்.

சரியான யோசனை! சரியான யோசனை! என்று எல்லா ரத்தினங்களும் ஏககாலத்தில் தலையை ஆட்டின.

சரி நீ போ முதலில்! என்றது மரகதம் வைரத்தை நோக்கி.

வைரம் சென்றது; ஆனால் வாட்டத்துடன் திரும்பி வந்தது.

என்ன? என்று கேட்டது மரகதம்.
முடியவில்லை!, அப்பனே முடியவில்லை!, அவனை திருப்தி செய்ய முடியவில்லை என்று கையை விரித்தது வைரம்.

சரி நீ போ இரண்டாவதாக! என்றது மரகதம் வைடூரியத்தை நோக்கி.

வைடூரியம் சென்றது; ஆனால் அதுவும் வாட்டத்துடன் திரும்பி வந்தது.

என்ன? என்று கேட்டது மரகதம்.

முடியவில்லை அப்பனே முடியவில்லை, அவனை திருப்தி செய்ய முடியவில்லை! என்று  வைடூரியமும் கையை விரித்தது.

இப்படியே ஒன்பது ரத்தினங்களும் சென்று தோல்வியுற்று திரும்பிய பிறகு நான் திருப்திப் படுத்துகிறேன் அவனை! என்றது ஒரு குரல்.

அது யாரப்பா அது ? என்று எல்லா ரத்தினங்களுமே குரல் வந்த திசையை நோக்கின திரும்பின.

நான்தான் பத்தாவது ரத்தினம் அப்பா! என்றது அது.

பத்தாவது ரத்தினமா, பைத்தியம் பிடித்த ரத்தினமா? என்று மரகதம் கேட்டது.

வீண் பேச்சு எதற்கு? வேண்டுமானால் என்னை அனுப்பி பார் என்றது அது.

சரி வா போவோம்! என்றது மரகதம்.

நீங்களும் என்னுடன் வருகிறீர்களா என்ன? என்று கேட்டது அது.

ஆமாம், உன்னுடைய லட்சணத்தை பார்க்க வேண்டாமா? என்றது கோமேதகம்.

சரி வாருங்கள்! என்று பத்தாவது ரத்தினம் கிளம்ப மற்ற ஒன்பது ரத்தினங்களும் அதை பின் தொடர்ந்தன.

பாவம் மனிதன் பத்தாவது ரத்தினம் அவனுக்கு முன்னால் இருந்த இலையில் கொட்டு! கொட்டு என்று கொடியதும்தான் தாமதம், போதும், போதும்! என்று அலறவே ஆரம்பித்து விட்டான்.

தேவலையே! உன் பெயர் என்னப்பா? என்று தன் உடம்பை குறுக்கிக் கொண்டு கேட்டது மரகதம்.

ஜீவரத்தினம்! அரிசி என்றும் அன்னம் என்றும் அடியேனை அழைப்பதுண்டு! என்றது அது.

RICE 

Print Friendly and PDF

Saturday, April 11, 2015

எறும்பு-தூக்கணாங்குருவி-காக்கை


சில நாட்ககளுக்கு முன் எனது நண்பர் திரு.ராஜவேல் மூலமாக ஆசாரக்கோவை எனும் புத்தகம் கிடைத்தது. நான் அவரிடம் சின்னவயசில் பள்ளி பாடங்களில் படித்ததை இப்போ எதற்கு என்று கேட்டேன். நானும் படித்து விட்டேன்.என்னிடம் சும்மாவே கிடக்குது நீங்க தமிழ் புத்தகங்கள சேத்து(சேர்த்து) வைக்கீறிங்க.அதனாலே உங்களுக்கு தேவ்ப்படுமேன்னு கொடுத்தேன்’’ என்றார். உண்மைதான் நான் என் வீட்டில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை சேர்த்து வைத்து உள்ளேன்.அதில் இந்த கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை புத்தகமும் இப்போது வந்து சேர்ந்தது.


ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். மற்றும் ஒழுக்கங்களின் வரிசை என்றும் பொருள் கொள்ளலாம்.   
ஆசாரம் என்பதுச்சாரம் என்றவாறே உச்சரிக்கப் படுகிறது. தமிழில் சாரம் என்றால் ஒன்றை சார்ந்தோ அல்லது அதற்கு தேவையான ஒன்றாகவோ கருதப்படுகிறது. உதாரணமாக கட்டிடம் கட்ட உயரமான பகுதியில் வேலை செய்ய மரம் அல்லது இரும்பு சட்டங்களால் கட்டி அதன் மேலே நின்று வேலை செய்வர். அதேப் போல் கட்டிடத்தில் சில இடங்களில் வளைவுகள், கண்ணாடி பதிவுகள் செய்யும் போது சாரங்களை கட்டி நிலையாகவே வைத்து விடுவர். இது வெளிப்பகுதியில் தெரியாது ஆனால் இது இல்லாமல் வளைவுகள்,கண்ணாடி பதிவுகள் நிற்காது. அதுப் போல் மனித வாழ்வில் இந்த சாரங்களைப் போல் பல ஒழுக்கங்கள் தேவை. அது மறைந்து நின்றாலும் அல்லது தேவையானப் போது பயன் படுத்தினாலும் வாழ்க்கை முறை நன்றாக இருக்கும். இந்த ஒழுக்கம் அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும் தேவையானது.அதனை மிகுதியாக ஆசிரியர் இந்த ஆசாரக்கோவையில் தந்துள்ளார்.
'ஆசார வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் இதில் எனக்கு பிடித்த 96வது செய்யுள் இது


எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்

நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,

தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்

அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்

எப் பெற்றியானும் படும். 96

(நந்து எறும்பு - ஆக்கமுள்ள எறும்பும்
தூக்கணம்புள் தூக்கணாங்குருவியும்)

     
எறும்பு, தூக்கணாங் குருவி, காக்கை, ஆகியவற்றின் குணங்களைப் போல செய்பவர்க்கு எப்போதும் சிறப்பு உண்டாகும் என்பதை அழகாக ஆசாரக்கோவையில் ஒழுக்கநெறியை கூறியுள்ளார் இதன் ஆசிரியர்.

எறும்பு : எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சுமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன், சுறுசுறுப்பு மற்றும் உழைப்பு போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. 

காக்கை : இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப் படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக  சுற்றுப்புறச் சூழல்பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.

தூக்கணாங்குருவி : வீடுகட்ட மனிதன் சிமிண்ட் அல்லது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவது போல், அவற்றை பசையாக்கி புல், வைக்கோல், இலைகள் ஆகியவற்றை இணைத்து வலுவான உறுதியான கூட்டினைக் கட்டுகிறது. தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு கட்டி அதில் வாழ்கிறது.



Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms