Friday, November 20, 2015

மாமா மாப்ளே,...

வாங்க மாப்ளே வாங்க என்று முகம் முழுவதும் சிரிப்புடன் வரவேற்றார் அந்த உறவினர். கும்பகோணத்தில் (26.10.2015) உள்ள என் சகலையின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியின் போது வீட்டு வாசலில் நின்று என்னை வரவேற்றார் அந்த உறவினர்.


வாங்க மாமா வாங்க என்று அவரை எதிர்க்கொண்டேன்.

எப்போ வந்தீங்க மாப்ளே என்று மேலும் குசலம் விசாரித்தார் அவர்.

நான் நேத்தே வந்துட்டேன்.விடியற்காலை மூணு மணிக்கு அய்யர் வந்துட்டார் அப்பவே வந்து ஹோமத்துலே கலந்துக்கிட்டு டிபன் எல்லாம் முடிச்சுட்டு ரூமுக்கு போய்ட்டேன்.அசதியா இருந்தது கொஞ்சம் தூங்கி எழுந்துட்டு வந்தேன்என்றேன் நான்.

ஆமாம் ஆமாம் நான் அப்பவே மச்சான்கிட்டே கேட்டேன். சொன்னாரு என்று பதில் சொன்ன அந்த உறவினர்,வாங்க இங்கே உட்காருங்க என்று புது வீட்டு வாசலில் போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை காட்டினார் அவர்.

கிரக பிரவேச நிகழ்ச்சிக்காக வீட்டு வாசலில் சாமியானா போடப்பட்டு கலர்கலராய் பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசையாய் போடப்பட்டு இருந்தது.முன் வரிசையில் அவருக்கு அருகில்  அந்த உறவினர் உட்கார சொன்னார்.

அந்த உறவினர் எனது சகலையின் மைத்துனர் ஆவார். உறவினர்க்கு உறவினர் என்றால் எனக்கும் உறவினர் தானே. அதனால் வீட்டு விசேங்கள்,கல்யாண சுப நிகழ்ச்சியின் போது சந்திக்கும்போதெல்லாம் குசலம் விசாரித்து கொள்வோம்.அந்த வழக்கத்தில் அவர் என்னை மாப்ளே என்றும் நான் அவரை மாமா (என்னை விட வயதில் மூத்தவர்) என்றும் அழைத்துக் கொள்வோம்.

மேலும் அவரே தொடர்ந்தார்.அப்புறம் வீட்லே ,பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க என்ன பண்றாங்க.” என்றார்

எல்லோரும் இங்கே வந்துருக்காங்க.” என்றேன். மற்ற சுக சௌக்கிய விபரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக் கொண்டோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவர் பேச்சை வேறுபக்கம் திருப்பினார்.

மாப்ளே மணி பதினொன்றை ஆவுது.எப்படியும் ஒரு மணிக்குதான் சாப்பாடும் வரும்.அதுவரைக்கும் இங்கே நம்ம என்ன செய்ய போறோம் வாங்க கடை தெருவு வரைக்கும் போயிட்டு வரலாம்.”என்றார்.

மாமா காபி டீ ஏதாவது சாப்பிடலாமா? என்றேன் நான்.

அவர் சிரித்தார்.ஆமாம் மாப்ளே பெரிய டீ சாப்பிடலாம் வாங்க.” என்றார்.

எனக்கு அவர் சொன்ன பெரிய டீ என்னவென்று புரிந்தது. எனக்கு பழக்கம் இல்லேயே,..” என்றேன்.

மாப்ளே எனக்கு யாரையும் கட்டாயப்படுத்தி பழக்கமில்லே,சும்மா கம்பேனி கொடுங்க.” என்றார்.

சரி என்று அவருடன் அவருடைய மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம்.

அவருடைய மோட்டார் சைக்கிள் சில பல தெரு சந்துக்களை கடந்து கும்பேஸ்வரர் கோயில் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்றது.

அவரே ஆரம்பித்தார். என்ன மாப்ளே மெட்ராஸ்ல இருந்துட்டுப் பழக்கமில்லேன்னு சொன்ன எப்படி.ஒரு பீர் (பெரிய டீ) மட்டும் சாப்பிடுங்க. என்று கெஞ்சினார்.

மாமா கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான் நான் யாரையும் கட்டாயப்படுத்தி பழக்கமில்லேன்னீங்க,... என்று நான் ஞாபகமூட்டியவுடன் அவர், இல்லே  மாப்ளே நான் மட்டும் சாப்பிடும்போது நீங்க சும்மா இருந்தா நல்லா இருக்காது இல்லே என்று உபசரித்தார்.

பரவாயில்லே நான் வேண்ணா சைடிஷ் சாப்பிட்டுக்கிறேன் என்றேன்.

சரியென்று ஆமோதித்ததுப் போல் டாஸ்மாக் கடைக்கு ஒட்டி இருந்த பாருக்குள்ளே அழைத்துக் கொண்டுப் போனார்.

குப்பென்று மதுவுடன் கலந்த அசைவ உணவு வாடை வந்தது. ஒரு மெல்லிய புகை இருளும் எங்களை ஆட்கொண்டது.

ஒரு எக்சாஸ்ட் பேன் இர்ர்ர்ர்... என்ற சத்தத்துடன் சுற்றிக் கொண்டிருக்க அதன் கீழ்  சிவப்பு கலரில் ஒரு பெரிய ப்ரிட்ஜ். அதன் கதவின் கண்ணாடியிலேயே பல பீரும் சில கூல்டிரிங்ஸ் பாட்டிலும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. அதன் பக்கத்தில் சின்ன மர டேபிளும்(கல்லாப்பெட்டி) நீலவண்ண டர்கி டவலால் மூடப்பட்டு இருந்த மெத்தை சுழல்நாற்காலியில் வெள்ளைச் சட்டை, கரை வேஷ்டி அணிந்த ஒருவர் எடுப்பாய் மேல் பட்டன் கழற்றிவிட்டு தங்க சங்கிலி தெரிய உட்கார்ந்து இருந்தார். அவர் எங்களை பார்த்ததும் ஒரு மெல்லிய புன்னகை பூத்தார். என் உறவினர் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னார்.என் பக்கம் திரும்பி பார் ஓனரூ என்றார்.


ஒரு பக்கம் சிறிய சிமென்ட் மேசை மேல் பம்ப் ஸ்டவ் மீது தோசைக்கல்லில் ஆம்லேட் வெந்து கொண்டிருந்தது. அதை புரட்டி போட கருப்பு கலர் டீ சர்ட்டும் கலர் பூப்போட்ட லுங்கியும் அணிந்த வேர்வையுடன் கொஞ்சம் அழுக்காய் இருந்த ஒருவன் தயாராய் நின்றிருந்தான். இன்னொரு கடாயில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்க மெல்லிய கனத்துடன் வட்டவட்டமாக வெட்டப்பட்ட மீன் மிளகாய் பொடியில் ஊறி ஒரு தட்டில் வைக்கபட்டிருந்தது. அருகிலேயே பல அசைவ அயிட்டங்கள் ஒரு பேசினில் மசாலாவில் ஊறி சிவப்பாய் வறுக்க தயாராக இருக்க, அதன் மேல் பூச்சி,ஈக்கள் வராமல் இருக்க வலை குடை ஒன்றை சார்த்தி இருக்க அதனுள் சில ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் தோரணமாய் பாலிதீன் பாக்கெட்டில் வறுத்த பருப்பு வகைகள் தொங்கி கொண்டிருந்தது. வேகவைத்த மூக்கடலை, வேர்க்கடலை ஆயில் பளப்பளப்புடன் கொஞ்சம் கொஞ்சமாக சிறு பிளாஸ்டிக் கப்புகளில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இன்னொரு பக்கம் நான்கைந்து ஸ்டீல் மேசைகளின் இருபுறமும் ஆட்கள் சரக்கும் கையுமாக அமர்ந்தும் நின்றும் குடித்தும் கொண்டிருந்தனர். சிலர் புகையாற்றியும் கொண்டிருந்தனர். மதுவின் வாடையும் சிகரெட்டின் புகையும்,அடுப்பின் புகையும் சேர்த்து கொஞ்சம் என் குடலை புரட்டியது. எங்களை மீறி சிலர் ஊராய்ந்தும் வருவோரும் போவோரும்  சென்னை  சைதாபேட் மார்கெட்டை ஞாபகம் மூட்டியது. அந்த உள்கடையை கடந்து அவர் என்னை அழைத்து செல்ல எதிரில் ஒருவன் அவருக்கு வணக்கம் வைத்தார். இவரும் எதிர் வணக்கம் வைத்து விட்டு இன்னும் கடந்து கண்ணாடி கதவுள்ள அறைக்கு என்னை சைகை காட்டி அழைத்து சென்றார்.


ஏசி பார்.கொஞ்சம் புகை குறைந்து இருந்தது.ஆனால் அந்த கெட்ட வாடை மெல்லியதாய் இங்கேயும் தொடர்ந்தது.அந்த அறையிலும் நான்கைந்து ஸ்டீல் மேசைகள் இருந்தது. ஒரு புளுஸ்டார் ஏசி இருபத்திரண்டு டிகிரி காட்டியது. ஒரு சீலிங்க் பேன் மெல்ல சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு சிலரே இருந்தனர்.

என்னை பார்த்த அந்த உறவினர், ஏசி பார்தான் பெஸ்ட் மாப்ளே  எந்த தலவலியும் இருக்காது என்று ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து அதன் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை எதிர் நாற்காலியில் அமர சொன்னார். இந்த அறைக்கு வரும்முன் வணக்கம் வைத்தவன் அந்த உறவினர் அருகில் வந்தான்.

மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, என்ன தலைவரே ஆப்பா,கோட்ரா,..என்றான். அந்த உறவினர் இந்த பாருக்கு ரெகுலர் கஸ்டமர் என்பது எனக்கு புரிந்தது.

இல்லே செல்வம் மெட்ராஸ்ல இருந்து மாப்ளே வந்து இருக்கார்,அவருக்கு இதெல்லாம் பழக்கமில்லே,எனக்கு கம்பேனி தரத்துக்கு கூட வந்திருக்கார். என்று என்னை அவனிடம் அறிமுகம் செய்தார்.அவன் எனக்கும் ஒரு சின்ன வணக்கம் வைத்தான். ஆனால் என்னை ஒரு ஜெந்து போல பார்த்தான். பத்து இருபது நாள் தாடி அவன் முகத்தை தீவாய் ஆக்கிமிரத்து இருக்க,மேலும் அவன் முகம் சிலபல கட்டிங்கில் வீங்கி இருந்தது. ஒருவித சிராய்ப்பு இடது கன்னத்தில் ஏற்பட்டிருந்தது. மேலிரண்டு பட்டன்கள் இல்லாத பழைய வெள்ளை சட்டையும் மங்கலான வெள்ளை வேஷ்டியும் அணிந்து இருந்தான்.

அந்த ஒரு உறவினரே மீண்டும் செல்வத்திடம்  தொடர்ந்தார். ஹாட்ல்லாம் வேண்டாம், ஒரு கேஎப் பீர்,கூட புரூட் சேலட் ரெண்டு என்று சொல்லிக்கொண்டே என்னை அவர் பார்க்க நானும் சரியென்பது போல் தலையசைக்க   அவன் பணத்திற்க்கு  அந்த உறவினரிடம் கையை நீட்ட அந்த உறவினர் சாப்பிட்ட பிறகு தரேன் என்று சொல்ல நான் உடனே ஐநூறு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத்து போய் எடுத்தாங்க என்றேன்.

உடனே அந்த உறவினர் என்ன மாப்ளே, எங்க ஊர்லே வந்து நீங்க பணம் தர்றதா என சின்னதாய் பொய்கோபம் காட்டி செல்வத்திடம், பணம் கொடுத்தா உடனே வாங்கிறதா, அவர்ட்டே கொடு நான் தர்றேன் என்று அதட்டினார்.

நானே தொடர்ந்தேன், இதிலே என்ன இருக்கு மாமா நான் செலவு செய்யக்கூடாதா என சொல்ல, அந்த உறவினர் இல்லே மாப்ளே அது வந்து,... என வழிய செல்வம் கொஞ்சம் முழிக்க,நான் பரவாயில்லே போப்பா சீக்கிரம் கொண்டு வா என ஆணையிட அவன் நகர்ந்தான்.

செல்வம் பீரும் டிஸ்போஸ் பிளாஸ்டிக் கிளாசும் மற்றும் ரெண்டு புரூட் சேலட்டும் கொண்டு வந்து டேபிளில் வைத்தான்.

இன்னும் ஏதாவது வேணும்னா கொரல் கொடு தலவரே என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் செல்வம்.

பீரை ஒப்பன் செய்து நுரை வராதவாறு பிளாஸ்டிக் கிளாஸ் முழுக்க நேர்த்தியாக ஊற்றினார் அந்த உறவினர். ரொம்பநாள் அனுபவம் போலிருக்கிறது.

அந்த உறவினர் ஒரு சிப் பீரை குடித்துவிட்டு புரூட் சேலட் இருந்த கப்பிலிருந்த அன்னாசி பழத்துண்டை கையில் எடுத்துக் கொண்டு எடுத்துக்கங்க மாப்ளே என்று எனது புரூட் சேலட் கப்பை காட்டினார். மேலும் கேஎப் பீர் மாதிரி எந்த பீரும் வராது மாப்ளே.சும்மா சுமூத்தா இருக்குது.என்றார்.

நான் ஒரு துண்டு பழத்தை வாயில் போட்டுக் கொண்டே அவரை கேட்டேன். ஏன் மாமா,கடையிலே பீரை விக்காம பார்ல வைச்சி விக்குறாங்க என்றேன்.

அவர் இன்னொரு சிப்பில் டம்ளரில் உள்ள பீரை முழுவதும் குடித்துவிட்டு எனக்கு பதிலளிக்க தயாரானார்.

மாப்ளே கடை கவர்மேண்டுது, பார் தனியார்து. பீரை கடையிலே வைச்சி வித்தா பீர் சாப்டறவன் பாருக்கு வரமாட்டான். அதுவில்லாம கூலா கிடைக்கினும்னா எக்ஸ்ட்ரா காசு வைச்சி பார்காரன் விப்பான்.என்று விளக்கம் சொல்லிவிட்டு பீரை கிளாசில் ஊற்ற ஆரம்பித்தார் அவர்.

அப்ப பார்ல உள்வியாபாரம் நடக்குது,மறைமுகமா தனிப்பட்ட ஆளு டாஸ்மாக் கடைய நிர்வாகம் பண்றாங்க என்றேன் நான்.

அத விடு மாப்ளே, பீர் சில்லுன்னு வேணும்னா பார்ல கிடைக்கும், அப்படியே வேணும்னா கடையிலே வாங்க வேண்டியதுதான். என்றார் அவர்.

மீண்டும் ஒரு சிப் ஒரு பழத்துண்டு என பீரை தொடர்ந்தார் அவர்.

நான் தொடர்ந்தேன். மாமா இங்கே எதுவும் சுத்தமா இல்லே,மீனு கோழி கறியெல்லாம் எப்ப வாங்கினதும் தெரியலே.வெளியே ஒருத்தன் குடிச்சிட்டு சைட்ல துப்புறான். ஒருத்தன் சிகரெட்ட புடிச்சி புகையா உட்றான். மீன் வறுக்குற வாடை மூக்ல முள்ளா குத்துது. என்னவோ ஒரு நாத்தம் குடலை பொரட்டுது.இங்கே வந்து இந்த கருமத்த குடிக்குனுமா.

அவர் இப்ப ஏதோ தயாரானதுப் போலே சிலிர்ப்பி ஆரம்பித்தார்.
மாப்ளே உங்கள மாதிரி பெரிய ஆளுங்க பெரிய கிளப்புக்கு போய் இங்கே கருமமா இருக்குறத அங்கே மர்மமா சாப்ட்டு சும்மா ராசா மாதிரி யாருக்கும் தெரியாம நைசா இருந்துடுவீங்க. நம்மள மாதிரி ஆளுங்க அன்னாடம் சாப்ட்றதுக்கு இதுதான் எங்களுக்கு சொர்க்கம் .என்று ஏதோ பெரிய வியாக்கியானம் சொன்னார்.

பீர் தீர்ந்தது. அவர் சாலட்டும் தீர்ந்தது. என் சாலட் அப்படியே இருந்தது.

சொல்லிவைத்தார் போல் செல்வம் வந்தான். என்ன தலைவரே வேற ஏதாவது,.... என்று இழுத்தான்.

இன்னொரு கேஎப் சில்லுன்னு என்றார் அந்த உறவினர்.

பீர் ஒப்பன் செய்தபடி கொண்டு வந்து வைத்தான் செல்வம்.

மீண்டும் பீரை  நுரை வராதவாறு பிளாஸ்டிக் கிளாசில் ஊற்றினார் அந்த உறவினர். இந்த முறை கொஞ்சம் நுரையானது. போதை ஏறி இருக்க வேண்டும்.

குடித்துக்கொண்டே என் சாலட்டை எடுக்க ஆரம்பித்தார். கிளாசில் இருந்த பீர் காணவில்லை.டக்கென்று குடித்து இருந்தார்.

இன்னொரு முறை கிளாசில் பீரை ஊற்றினார். இந்த முறை நுரை வழிந்தது. போதை தெரிந்தது.

செல்வத்தை கூப்பிட்டு மூக்கடல கொடுப்பா என்றார்.அவன் ஒரு கப் கொண்டு வந்தான். பீர் காலியானது.

போலாமா மாப்ளே என்றார் அவர். செல்வம் வந்தான்.ஏதோ கணக்கு சொல்லி போக மீதி நூறு ரூபாய் என்னிடம் திருப்பி தந்தான்.(பீர் -2 – ரூ.280 + சாலட் -2 –ரூ.50 +  பிளாஸ்டிக் கிளாஸ்-ரூ.10 + மூக்கடல - ரூ.10. ஏசி சார்ஜ் - ரூ.50 ஆக ரூ.400/-)

கிளம்ப தயாரான போது, நில்லு செல்வம் என்று கூறி  பாக்கெட்டில் கையை துழாவி பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் தந்தார் அந்த உறவினர்.

டிப்சு என்றார் என்னை பார்த்து. செல்வம் நோட்டை டக்கென வாங்கி யாரோ அழைக்க மறைந்தான்.

(உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
- “Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்)

டாஸ்மாக்கில் நான் கண்டதும் நெருடல்களையும் கீழே வரிசைப் படுத்தி உள்ளேன்
1.டாஸ்மாக்கில் பார் என்ற பெயரில் தனியாரின் அதிகாரம் செயல்படுகிறது.

2.பொருளின்(சரக்குகளின்) விலையில் இருபது முப்பது சதவீதம் தனியாருக்கு மறைமுகமாக போகிறது.(டாஸ்மாக்கின் சிஸ்டர் கான்சர்னாக பார்கள் செயல் படுகின்றன)

3.ஏழையின் வருமானம் இதன் மூலமாக சுரண்டபடுகிறது.

4.நோய் தொற்று இங்கே இருந்தும் பரவுகிறது.

5.சோம்பேறிகள்,குற்றங்கள் ஏற்பட வழியாகிறது.

மொத்தத்தில் பலவகையில் இழப்புகளும்,அவமானங்களும், தொந்தரவுகளும்  ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக்கை மூட அரசு தயாராக வேண்டும்.
Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாசித்தேன்.
மிக நீட்டுவது போல நீட்டியதாக
தங்கள் வழமைப் பாணி காணாமல் பொனதாக ஒரு உணர்வு.
ஆயினும் அரசுக்கு வேண்டுகோள் நல்ல செயல்
வேதாவின் வலை

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms