திருவான்மியூர் அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயிலில் தர்மகர்த்தா திரு கணேசன், திரு சந்திரசேகர் அவர்களின் வேண்டுதலில் நண்பர் திரு.கண்ணன் அவர்களின் உபயத்துடன் சப்தக்கன்னிகள் திருவுருவங்கள் வைக்க முற்பட்ட போது கூடவே பிள்ளையார், முருகர் திருவுரு வங்களையும் வைக்க தீர்மானித்தார்கள்.
திரு.கண்ணன் மூலமாக எனது ஆலோசனைகளுக்காக அழைப்பு வந்ததும் நான் பிள்ளையார்,முருகர் சப்தக்கன்னிகள் திருவுருவங்கள் எங்கே? எப்படி? எப்போது? வைக்க வேண்டும் என்பதை கூறினேன்.
அப்போது தர்மகர்த்தாகளின் வீட்டில் வைத்து வழிப்பட்ட அம்பாளை செல்லியம்மன் கோயிலிலேயே மேற்கு முகமாய் ஒரு சிமென்ட் தகடு கூரையிட்டு வைத்து இருந்தனர்.அந்த அம்பாளை பார்த்ததும் நான் “ஆதி செல்லியம்மன்” என பெயர் வைத்தேன். கோயிலில் உள்ள மூலவர் செல்லியம்மன்தான். அதனால் இந்த அம்பாளை குறிக்க ஆதி செல்லியம்மன் என அழைத்தேன். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பின் பிள்ளையார்,முருகர் திருவுருவங்களை காண நவதானியங்களில் இருந்த முருகரை பார்த்ததும் “செல்வ முத்துகுமாரசாமி” என நான் சொல்ல செல்வமுத்துகுமாரசாமி ஆனார் முருகர். அப்போது தர்மகர்த்தா திரு சந்திரசேகர் பிள்ளையாரை அவரே “பாலசந்திரகணபதி” என சொல்லி காட்டினார்.
செல்லியம்மன் கோயிலில் 13.03.2016
அன்று எனது முன்னேற்பாட்டில் வராஹி ஹோமம் நடைப்பெற்றது.அப்போது குடந்தை ஹனுமத் உபாசகர் திரு.ஸ்ரீனிவாசன் பிள்ளையார்,முருகர் சப்தக்கன்னிகள் திருவுருவங்களை பார்த்தபோது ஆதி செல்லியம்மன், செல்வமுத்துகுமாரசாமி, பாலசந்திர கணபதி என பெயர்களை தர்மகர்த்தா திரு சந்திரசேகர் சொன்னவுடன் “அது என்ன பாலசந்திர கணபதி? முப்பத்தியிரண்டு கணபதி பெயர்களில் இந்த சந்திர கணபதியை நான் கேள்வியே பட்டதில்லையே ?” என்றார். “இருக்கு” என கீழ்கண்ட கதை விளக்கத்தை
தந்தார் தர்மகர்த்தா திரு சந்திரசேகர்.
திரிலோக சஞ்சாரி நாரத மகரிஷி மாங்கனியுடன் கைலாயம்
சென்றபோது அங்கே குடும்ப சகிதிமாய் சிவபெருமான்
வீற்றிருக்க மாங்கனியை அளித்தார்
நாரதர். அதை யாருக்கு தரவேண்டுமென சிவபெருமான் நாரதரிடம் கேட்க நாரதர் இளையவர்
முருகருக்கு தரவேண்டுமென்றார். உடன் இருந்த கணபதி நாரதர் மேல் கோபம் கொள்ள உடனே
நாரதர் கணபதியிடம் மன்றாடி மன்னிப்பை கேட்டார். அச்சபையில் இருந்த சந்திரன் சிறுபிள்ளையான
கணபதியிடம் மன்னித்து அருள மன்றாடிய நாரதரை பார்த்துப் பரிகசித்துச் சிரித்தான்.
கேலி செய்தான்.
கணபதியின் கோபம் நாரதரின் மேல் தணிந்து சந்திரன் மேல்
திரும்பியது.கணபதி சந்திரனை நோக்கி, “சந்திரா, உன்னுடைய ஒளியானது உண்மை
அல்லவே? சூரியனிடம் ஒளியைக் கடன் அல்லவோ வாங்கிக் கொண்டு
பிரகாசிக்கின்றாய்? நீ குளுமையான பால் போன்ற ஒளியைக் கொடுப்பது உன் சொந்த
முயற்சியால் அல்லவே. மேலும் ஏற்கெனவே உன்னுடைய சொந்த மாமனாரிடம் நீ சாபம் வேறு
வாங்கிக் கொண்டு பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின்னர்
பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வருகின்றாய். அப்படி இருக்கையிலேயே உனக்கு இத்தனை
கர்வம் தேவையா?” என்று சொன்னார்.
ஆனால் சந்திரன் மீண்டும் சிரித்தான். கோபம் கொண்ட கணபதி, “இனி யாருமே சந்திரனைப் பார்க்கக் கூடாது, பார்க்கவும் முடியாது. அப்படி யாரேனும் உன்னைப் பார்த்தாலோ
களங்கம் உள்ள மனதுள்ள உன்னைப் பார்த்த அவர்களும் களங்கத்தால் பீடிக்கப்
படுவார்கள். உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கும், அபவாதத்துக்கும், மித்திரத் துரோகத்துக்கும் ஆளாவார்கள்.” என்று சபித்தார். கணபதியிடம் சாபம் பெற்ற சந்திரன் அவமானம்
மேலோங்க, சமுத்திரத்தினுள் சென்று மறைந்தான்.
சந்திர ஒளியிலே மட்டுமே அமுதம் சுரக்கும்,மூலிகைகள்
வளரும்..நிலவொளி இல்லாமல் மூலிகைகள் வளரவில்லை. வைத்தியர்கள் வைத்தியம் செய்ய
முடியவில்லை. உலகிலே எங்கே பார்த்தாலும் நோய், நொடி
பரவி, அதைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்தனர். சூரிய ஒளி எவ்வாறு
முக்கியமோ அதே போல் சந்திரனும் முக்கியம் என்பதை அறிந்த தேவர்கள் பிரம்மாவிடம் சென்று
அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள்.
பிரம்மாவோ மஹாகணபதியின் வாக்குக்கு மறுவாக்கு நான் சொல்ல
முடியுமா? நீங்கள் அனைவரும் சாபம் நீங்க அவரையே வழிபடுங்கள். அவர்
ஆவிர்ப்பவித்த திதியான சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விசேஷ வழிபாடுகள் செய்து
அவருக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, அவர் மனதை மகிழ்ச்சியில்
ஆழ்த்துங்கள். மனம் உருகப் பிரார்த்தித்து உலக க்ஷேமத்துக்காக வேண்டி சந்திரனின்
தோற்றமும், ஒளியும் தேவை என்று கேளுங்கள்.” என்று வழிகாட்டினார்.
தேவர்கள் அனைவரும் சமுத்திரத்துக்குள்ளே ஒளிந்து
கொண்டிருந்த சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து, “நீயும்
சேர்ந்து கணபதியிடம் மன்னிப்புக் கேட்டு வழிபாடுகள் நடத்தினாலொழிய இந்தக் காரியம்
பூர்த்தி அடையாது.“ என்று கூப்பிட, ஏற்கெனவே தான் செய்த தவறை
எண்ணி வருந்திய சந்திரனும் உடனே வந்தான்.
சந்திரனும், தேவர்களும் வேண்டி வழிபட்டு
முடிக்கும் வேளையில் கணபதி பிரசன்னமாகி, தான் கொடுத்த சாபத்தைத்
திரும்ப வாங்க முடியாது என்றும், அதில் கொஞ்சம் மாறுதல்
செய்வதாயும் கூறி, சுக்கில பட்ச சதுர்த்தி திதிகளில் உதிக்கும் நாலாம் பிறைச்
சந்திரனைப் பார்க்கின்றவர்களுக்கே அபவாதம் ஏற்படும். ஆகவே அன்றைய நாள் மட்டும்
யாரும் சந்திரனைப் பார்க்க வேண்டாம். மீறினால் அபவாதம், வீண்பழிக்கு ஆளாவார்கள். இதன் மூலம் யாருக்கும் தன் அழகிலோ, அறிவிலோ கர்வம் ஏற்படாமல், யாரையும் யாரும் புண்படுத்தும்
செயல்களையும் செய்யாமல் இருப்பார்கள். ஆகவே நான் சொன்னதில் சிறு மாற்றத்தோடு சந்திரனுக்கு, சாபத்திலிருந்து விடுதலை அளிக்கின்றேன்.” என்று கூறினார்.
தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லவா? இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே
என்பதையும் காட்டுகின்றது அல்லவா? அதோடு இல்லாமல் மேலும்
சந்திரனுக்கு உதவி செய்யும் வண்ணமாய் கணபதி, பெளர்ணமி கழிந்த
கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து கணபதியை பூஜித்து வழிபாடுகள்
செய்து அன்று தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டு சந்திரனையும்
வழிபடுகின்றவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களையும் நான் போக்குவேன்.” என்று சொல்லி சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்படவும் வழி
செய்தார் கணபதி.
பின்னர் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட சந்திரனை எல்லோரும் அறியவும்
கவுரவிக்கவும் பிறைச் சந்திரனைத் தன்
சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் கணபதி.
அன்று முதல் கணபதி “பாலசந்திரகணபதி” ஆனார்.
மேலும் கணபதியை போற்றும் பதினாறு சிறப்பு துதிகளில் “பால சந்த்ராயை நமஹ” வும் இடம்பெற்றது. (பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன்
நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப்
படுகின்றது. அல்லது PHALA
CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப்
பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து
வைத்துக் கொண்டிருப்பார் பால சந்திரன் Bhala Chandran என்றாலே
பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே.)

2 கருத்துரைகள்:
மிக நன்று அருமை.
https://kovaikkavi.wordpress.com/
தங்களின் ஈடுபாட்டிற்கு வாழ்த்துகள். பணி தொடரட்டும்.
Post a Comment