Sunday, December 18, 2016

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த 30 வயது விவேக் ராமசாமி

முப்பது வயதில் எந்த வேலையும் கிடைக்கமாட்டேன் என்கிறது என்பதும், கிடைத்த வேலையில் திருப்தி இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு மத்தியில் முப்பதே தில் நூறு கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் விவேக் ராமசாமி. இவருடைய வளர்ச்சி போர்ப்ஸ் பத்திரிக்கையில் இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பிடிக்க வைத்து இருக்கிறது. 


இவர் அமெரிக்காவில் ரொய்வன்ட் சயின்ஸ் என்று நிறுவனத்தை தொடங்கி அதில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவரது நிறுவன பெயரை கேட்டாலேயே பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிலியும், சிறிய பயோடெக்னாலஜி, பார்மா நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இதற்குக் காரணம், 'பல மருந்துகளைக் கால ஓட்டத்தில் மறந்து விட்டோம் அல்லது அந்த மருந்துகளைத் தயாரிக்க முதலீடு செய்யாமல் இருந்து விட்டோம். பெரிய பார்மா நிறுவனங்கள் மட்டுமே அனைத்திற்கும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது அல்ல. மிகச்சிறிய நிறுவனம் கூட மிகப்பெரிய மருந்தினை கண்டுப்பிடிக்க வேண்டும். அந்தச் சிறிய நிறுவனங்களை அடையாளங்காணுவதே பெரிய வேலை' என்கிறார் விவேக். 

தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பிற்காக இடம்பெயர்ந்தவர்கள் இவருடைய பெற்றோர்கள். அப்பா ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாளர். அம்மா முதியோர் மனநல மருத்துவர். விவேக் பயாலஜி மூலம் உலகை மாற்ற முடியும் என்று நம்பி பயாலஜி படித்து இருக்கிறார். பள்ளியிலும், கல்லூரியிலும் அதிக நாட்கள் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்தவர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார். இப்படி ஆரம்பித்து உலகம் எந்த மருத்து பொருளை தேடி ஓடுகிறது என்பதைக் கணித்து அதனைத் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறார். 

அல்சைமர் நோய் மறதிநோய் அமெரிக்காவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் முதியோர்களுக்கு இந்த நோய் வாட்டி எடுக்க தொடங்கி இருப்பதை நூல் பிடித்தவர், புதிய நிறுவனத்திற்கு அசோவன்ட் என்று பெயரிட்டு மருந்து தயாரிப்பிலும் இறங்கி விட்டார். மொத்த பணியாளர்கள் 12 பேர் மட்டுமே. அதிலும் இவரது அம்மாவும், சகோதரரும் அடங்கும். இவருடைய நிறுவனத்தில் கல்லூரி படித்து முடித்தவர்கள் சில பேரையும், இரண்டு பயோடெக்னாலஜி ஜாம்பவான்களை வேலைக்கு வைத்திருக்கிறார். இந்த இரண்டு ஜாம்பவான்கள் ஏற்கனவே ஆராய்ச்சி துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
அசோவன்ட் நிறுவனம் தொடங்கி ஒரே வருடத்தில் 360 மில்லியன் டாலர் முதலீட்டை எட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தை வாங்க கிளக்சோஸ்மித் கிளைன் முயற்சி செய்ய அதன் பின்பு இந்த நிறுவனத்தின் மதிப்பு கடகடவென ஐந்து பில்லியன் டாலர் வரை மதிப்பு உயர்ந்து இருக்கிறது. கிளக்சோஸ்மித் நிறுவனம் வாங்கும் முயற்சி தோல்வியில் முடிய அசோவன்ட் நிறுவனம் பெரிய நிறுவனமே அல்ல; மொத்தம் 12 பேரை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டது. ஆனால் பங்கு விலை சரிந்ததே தவிர, விவேக்கின் வளர்ச்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

கிளக்சோஸ்மித் கிளைன் கற்றுக்கொடுத்த பாடத்தை வைத்தும், அசோவன்ட் நிறுவனத்தின் லாபத்தை வைத்தும் தனியார் (ஹெச் ஃபண்ட்) முதலீட்டு நிறுவனத்தை ரொய்வன்ட் என்ற பெயரில் ஆரம்பித்திருக்கிறார் விவேக். இந்த நிறுவனம் பயோடெக்னாலஜி நிறுவனங்களுக்கும், பார்மா நிறுவனங்களுக்கும் முதலீட்டு உதவி செய்யும். குறிப்பாக, அரிதான நோய்களுக்கு மருந்து தயாரிக்கும் சிறு நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார். இதன் மூலம் பார்மா துறை வளர்ச்சி அடையும் போது பெருமளவில் வருமானம் கிடைக்கும். 2008 -ம் ஆண்டு பார்மாசெட் என்ற நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கிறார். பார்மாசெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 5 டாலர். 2011 ம் ஆண்டு அதே பங்கின் விலை 137 டாலர். மூன்று வருடத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். இதைப்போலவே பல சிறிய பார்மா நிறுவனங்களில் முதலீடு செய்து மூன்றே வருடத்தில் பில்லியனர் ஆகி இருக்கிறார். இதன் மூலம் இவர் மிகவும் இளம் வயதில் பில்லியனர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். போர்ப்ஸ் நிறுவனம் ரொய்வன்ட் நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் என மதிப்பிட்டு இருக்கிறது. 

இவருடைய வளர்ச்சியின் போதே ஐந்து வருடத்தில் நியூயார்க் பங்கு சந்தையில் பயோ டெக்னாலஜி இன்டெக்ஸ் 300% உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் நாஸ்டாக் இன்டெக்ஸ் 100% உயர்ந்திருக்கிறது. S & P 500 பங்குகள் இன்டெக்ஸ் 70% மட்டுமே உயர்ந்திருக்கிறது. கேன்சருக்கு மருந்து தயாரிப்பு, ஹெபடைடிஸ் சி-க்கான மருந்துகள், ஜீன் குறைபாட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எனப் பல விதமான முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. மேலும், அரசு அதிக விலைக்கான மருந்துகளை நிறுத்திக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் தயாரிப்பு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் விவேக் ராமசாமி நிறுவனத்திற்கு உதவியாக இருக்கிறது. 

இவர் ஸ்டெம் செல் உருவாக்கத்தில் மனிதன் மற்றும் விலங்குகளில் இருந்து எடுத்துக் கையாளப்படுவதற்கு முயற்சியில் இறங்கி இருக்கிறார். மருந்து தயாரிப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர், ஹெபடைடிஸ் சி, ரத்த செல் நுரையீரல் வைரஸ் போன்றவற்றிற்கு மருந்து தயாரிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு நோய்களும் முப்பது லட்சம் அமெரிக்கர்களுக்குப் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கண்டறிந்த சிறிய நிறுவனம் டவுன்சின்ட்ரோம் பாதிப்பிற்கு மருத்துவ முறைகளைக் கண்டறிந்து இருக்கிறது .

இந்திரா நூயி உள்ளிட்ட பல பிரபலங்கள் 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேளையில்இப்போது போர்ப்ஸ் நிறுவனத்தின் இளம் தொழில்முனைவோர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் விவேக். விரைவில் உலக அளவில் மிகப்பெரிய பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராகவும், அறிவுசார் அனுபவத்திலும் உலக அளவில் இடம்பிடிப்பார் என்கிறார் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த யேல் பல்கலைக்கழக பேராசிரியர். விவேகமாக முதலீடு அவரை இன்னும் பல உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள் விவேக் ராமசாமி. 

நன்றி : தி இந்து(தமிழ்) ,விகடன்
--Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms