Monday, December 19, 2016

வர்தா புயலால் நாம் கற்றுக்கொண்ட பாடம்!

அண்மையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட 'வர்தா' புயல் தாக்கத்தினால், மரங்கள் வேரோடு சாய்ந்தன.


நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் ஒன்றுகூட விழாமல் வெளிநாட்டு மரங்கள் மட்டுமே விழுந்தன.அவைகளை அகற்ற முடியாமல் குப்பை குளமாய் மாறி சென்னையே அழுக்காய் ஆனது. இது ஒருபுறம் இருந்தாலும் உயிர்பலி சேதாரம் முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிதும் தவிர்க்கப் பட்டது.

'வர்தா' புயலால் வீதியில் சாய்ந்த மரங்களை முற்றிலுமாக அகற்றும் அளவுக்கு, போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், காவல் துறையினருடன் தன்னார்வ தொண்டர்களும் விடியவிடிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தந்தப் பகுதி இளைஞர்களே நேரடியாகக் களத்தில் இறங்கி மரங்களை அகற்றிய இளைஞர்கள் பலரும், "நம்ம ஊரு அரச மரமும், வேப்ப மரமும் சாயவே இல்லைங்க. விழுந்து கிடந்தது எல்லாமே வெளிநாட்டு மரங்கள்தான்" என்று சொல்லிச் சொல்லி வியக்கின்றனர். அந்த இளைஞர்களின் வியப்பே சமூக ஊடகங்களிலும் பரவி மிகவும் வைரலானது. பெருங்கொன்றை, தைல மரம், இயல்வாகை, சவுக்கு, கருவேலம் போன்ற மரங்களின் வீழ்ச்சியையும் அவர்கள் அதிகளவு கண்டுள்ளனர்.

அம்மரங்களில் ஒன்றுகூட நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் இல்லை' என்ற செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நம்மூர் உள்நாட்டு மரங்களுக்கு என்றுமே தனிமவுசு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.

வர்தா புயலால், உள்நாட்டு மரங்கள் பெரிய அளவில் பாதிப்படையவில்லை. எந்தப் புயலையும் எதிர்கொண்டு கம்பீரத்துடன் நம்மூர் மரங்கள் நிற்பதைப் பார்க்கும்போது, சொந்த மண்ணில் நம் பலமே தனிதான் என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இந்த உண்மையை மனிதர்களுக்கு முன்பே பறவைகள் கற்றுக் கொண்டன எனலாம். அதன் காரணமாகவே, நம்மூர் மரங்களில் மட்டுமே பறவைகள் கூடுகட்டி வசித்து வந்துள்ளன. இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வைக் கொண்டுள்ள பறவைகளும், அவற்றின் கூடுகளும் 'வர்தாவின்' கோரப்பிடியில் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன. பறவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதோடு, அவற்றின் கூடுகளில் இருந்த வாரிசுகளும் தப்பித்துள்ளன.

மரங்கள், நிலச்சரிவைக் கட்டுப்படுத்தி, மண் அரிப்பைத் தடுக்கின்றன. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும்தன்மை மரங்களுக்கு உண்டு. புவியின் தட்பவெப்பநிலையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன. இந்தியாவில் 33 சதவீதம் அளவுக்கு இருந்த காடுகளின் பரப்பளவு மெல்ல குறைந்து, தற்போது 22 சதவீதமாகியுள்ளது. ஏற்கனவே குறைந்துள்ள 11 சதவீதத்தை மீண்டும் எட்டவேண்டுமானால், சுமார் 54 கோடி மரங்களை நட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். காடுகள் அழிவால் கடல்நீர் மட்டம் உயர்வு, புவி வெப்பமயமாதல் அதிகரித்தல் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களிலும் அதிக மழையும், வேறு சில இடங்களிலும் மிகுந்த வறட்சியும் ஏற்பட காடுகளின் சமநிலையின்மை காரணமாக அமைந்து விடுகிறது.

கடலோரங்களில் மரங்கள் வளர்க்கப்படுவதால், இயற்கைப் பேரிடர் ஏற்படும் நேரங்களில் அந்த மரங்கள் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தடுக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு ஈடாக புதிதாக மரங்கள் நடப்படுகின்றனவா என்றால், இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக அமையும். அப்படியே மரங்கள் நடப்பட்டாலும், அவை முழுமையாகப் பராமரிக்கபடாமல் விடப்படுகின்றன.

எனவே. இந்த புயலின் தாக்குதலில் இருந்து நாம்  பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!.இனி பாரம்பரிய தாய் மண் மரங்களை வளர்ப்போம். இயற்கையை காப்போம்



 Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms