உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை 3.50
மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்பட்டது.
முன்னதாக, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பரணி தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலில் உள்ள தங்கக் கொடி மரம் எதிரே உள்ள சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்க, சுமார் 2 ஆயிரத்து 668
அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தி முழக்கங்களை எழுப்பி, தரிசனம் செய்தனர். மேலும், கோயில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மகா தீபத்தை முன்னிட்டு, 5 அடி உயரத்துடன், 200 கிலோ எடை கொண்ட புதிய மகாதீப கொப்பரை தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆயிரம் மீட்டர் திரி மற்றும் 3 அயிரத்து 500
கிலோ நெய் ஆகியவை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முக்கியமாக கொடிமரம் எதிரே குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்தனர்.
மகா தீபத்தின்போது, காலை முதலே பெய்த பரவலான மழை காரணமாக, மலையைச் சுற்றிலும், மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், பக்தர்களால், மகா தீபத்தை சரியாக தரிசிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மகா தீபம், இன்றிலிருந்து 11 நாள்கள் மலை மீது தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கும்.
மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், இதர வாகனங்களில் பஞ்ச மூர்த்தியர் தேரோட்டமும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக நேற்று முதலே, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.
Email :sanakrarrow@gmail.com 
0 கருத்துரைகள்:
Post a Comment