Saturday, December 10, 2016

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு

லண்டனைச் சேர்ந்த மார்ட்டின் எனப்படும் பல் மருத்துவரின் கதை மிக சுவாரஸ்யமானது. அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங் செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735-ல் இறந்துபோனார். அவரது உயிலில், ‘என்னைப் புதைக்காமல் இருக்கும்வரை... எனது சொத்துக்களை, எனது கணவர் அனுபவிக்க உரிமை உண்டுஎன எழுதி இருந்தார். மார்ட்டினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது, மற்றொரு பல் மருத்துவ நண்பரான வில்லியம் ஹண்டர் அவருக்கு உதவ முன்வந்தார். அவருடைய உதவியால், தனது மனைவியின் உடலைப் பதப்படுத்தி தன் மருத்துவமனை வாசலில் காட்சிக்கு வைத்தார். அதனால் மனிதருக்கு கிடைத்தது டபுள் தமாக்கா! ஒரு பக்கம், இந்தக் காட்சியைப் பார்க்கவந்த மக்களால்... இவரது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது மனைவியின் உடல், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்டதால் அவரால் அத்தனை நாட்களும் அவரது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க முடிந்தது.


இறந்த ஒருவரின் உடலைப் பதப்படுத்தி பாதுகாப்பது எகிப்திய நாகரிகம் தொடங்கியே... நடைமுறையில் இருந்தாலும் மேலே சொன்ன வரலாற்றில் வரும் வில்லியம் ஹண்டர் என்னும் மருத்துவர்தான் அதனை அறிவியல் கலையாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, உலகப் போர் சமயங்களில் இதே பிணச் சீரமைப்பு போர் முனையிலிருந்து உடலை உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க உதவியது. அதன் பின்னர், பல முக்கியத் தலைவர்களின் உடல்களைப் பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்க இதே முறையைப் பின்பற்றினார்கள். இன்றும் ரஷ்ய அருங்காட்சியகத்தில் பிணச் சீரமைப்பு செய்யப்பட்ட லெனின் உடலைக் காணலாம். தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில், ராமானுஜரின் உடலை பதப்படுத்தி வைத்திருப்பது அந்தக்கால பிணச் சீரமைப்பு முறைக்கு நல்ல உதாரணம்.

பிணச் சீரமைப்பு எப்படிச் செய்யப்படுகிறது
முந்தைய காலத்தில், இறந்துபோன உடலில் ஆர்செனிக் எனப்படும் அமிலம் செலுத்தப்பட்டு, உடல் பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆர்செனிக் அமிலத்தில் மண்ணை விஷமாக்கும் வாய்ப்பு இருப்பதாலும்... அப்படிப் பதப்படுத்தப்பட்ட உடல் பிற்காலத்தில் ஆர்செனிக் விஷம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாலும் அந்த முறையை உபயோகிப்பதை நிறுத்திக்கொண்டனர் மருத்துவர்கள். அதன் பிறகு, ஃபார்மால்டிஹைட் அல்லது ஃபார்மலின் எனப்படும் வேதிப் பொருள் பதனிட உபயோகப்படுத்தப்பட்டது.

பிணச் சீரமைப்பின் வகைகள் யாவை?
நாளங்கள் வழியாகச் செய்யப்படும் எம்பாமிங், வேதிப் பொருட்களை உள்ளே செலுத்துவதில் ஒருவகையாகும். இவை, உள்ளே போகும் அதே நேரம்... உள்ளிருக்கும் ரத்தம் உள்ளிட்ட திரவங்களை வெளியேற்றும். சீரமைப்புச் செய்வதற்கு முன் இறந்த உடலை மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் திரவம் சீராகப் பரவும்.
பற்களின் கேவிட்டிக்கள் வழியாகச் சீரமைப்பு செய்வது மற்றொரு வகை. இதன்மூலம், தொப்புளின் வழியாக திரவம் செலுத்தப்பட்டு... நெஞ்சகம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தேவையற்ற திரவங்களை வெளியேற்றி, உள்ளே வேறு ஒரு திரவத்தை நிரப்புவதாகும்.

மேல்சரும எம்பாமிங் முறையில் உடல் சீரமைப்பு ஒழுங்காய் நடைபெறாத பகுதிகளில் மட்டும் ஊசி கொண்டு எம்பாமிங் செய்யப்படும்.

மொத்தமாக மேலோட்டமாகச் செய்யப்படும் எம்பாமிங் முறையில், தோல் மக்கிப் போகாதவாறு இருக்க மட்டும் கெமிக்கல் செலுத்தப்படும்.

நீண்டநாட்கள் பதப்படுத்த வேண்டும் என்கிற நிலையில்... உடலில் பல இடங்களில் ஊசி போட வேண்டும்.
மொத்தத்தில் எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு முறையில், பல்வேறு ரசாயனம் மற்றும் உப்புகள் கொண்டு சீரமைப்பு செய்யப்படுவதால் உடலின் நிறம் பாதுகாக்கப்படும். பிணத்தின் கை, கால் பகுதிகளை நாம் நினைத்தது மாதிரி மாற்ற முடியும். உடலில் ஏற்கெனவே தங்கி இருக்கும் மருந்துகளால் உண்டாகும் தேவையற்ற துர்நாற்றத்தை அது கட்டுப்படுத்த உதவும்.

நன்றி :விகடன் 

 Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms