Tuesday, December 20, 2016

குளிர்கால மழைக்கால காய்ச்சலை தவிர்ப்பது எப்படி?

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க... எல்லா பக்கமும் `டெங்குவாம், `சிக்குன்குனியாவாம்... ஏதோ மர்மக் காய்ச்சலாம்!எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா... என விதவிதமான பரிந்துரைகள். 

காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?


* காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக் கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் - கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும். 

* இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்! 

* ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்... என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள். 
*  மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது. 

* காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்... இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள். 

* ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம். 

* இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது! 

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் 
Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms