மௌனக் கதைகள் -
வான்மீகீயூர் L.L.சங்கரின் ‘மௌனக் கதைகள் ‘ தொகுப்பிலிருந்து
ஒருவன் தினந்தோறும் கடவுளிடம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வழிபாடு செய்து வந்தான். ஒரு நாள் இரவு வந்த கனவில் அவன் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று வழிகாட்டுவது போலவும் அதணால் அவனுக்கு வாழ்வின் இலட்சியம் விளங்குவதாகவும் தோன்றியது.
மறு நாளே தான் வசித்த இடத்திலிருந்து கிளம்பி பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றான். பல மணி நேரம் அலைந்து திரிந்தும் அவனுக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.
களைப்புற்று போனவன் கடைசியாக ஒய்வெடுப்பதற்காக ஒரிடத்தில் அமர்ந்தான். கொஞ்சம் தூரத்தில் நிழலாக தெரிந்த இடத்தில் இரண்டு பாறைகளுக்கு நடுவில் நரி ஒன்று படுத்திருந்தது. அதற்கு கால்கள் எதுவுமே இல்லை.
அதைப் பார்த்து வியந்தவன், எப்படி கால்களற்ற நரி உயிர் பிழைத்து வாழ்கிறது என்பதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து, அங்கேயே அமர்ந்து கவனிக்கலானான்.
வெகு நேரம் கழித்து சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் புலி ஒன்று அங்கு வந்தது, தான் உன்னும் இறைச்சியில் கொஞ்சம் நரிக்கு முன்னால் வைத்து விட்டுச் சென்றது.
"ஆ! இப்பொழுது புரிந்து விட்டது" என்று கூறியவன், "கடவுளை முழுமையாக நம்பி ஒப்படைப்பதே வெற்றியின் இரகசியம், நான் இனி எதையும் செய்யத் தேவை இல்லை, கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இரண்டு வாரங்கள் கழித்து, பசி மயக்கத்தோடு உடலில் தெம்பில்லாமல் இருந்த போது இன்னொரு கனவு வந்தது அதில் "முட்டாளே, நரியைப் போல் இருக்காதே! புலியைப் போல் இரு" என்று யாரோ சொல்வது போல் கேட்டது.

0 கருத்துரைகள்:
Post a Comment