Friday, February 26, 2016

பயணமும் நீராடலும் பாகம்-02

இன்றுதான் (22.02.2016 திங்கட்கிழமை)  தீர்த்தவாரி திருவிழா. காலையில் இருந்தே கூட்டம். நேற்றைய முடிவு எது இன்றைய தொடக்கம் எதுவென்று அறியாமல் பக்தர்களின் வருகை தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது. நாங்கள் வீட்டிலேயே குளித்து முடிந்து சிற்றுண்டியை முடித்து விட்டு தீர்த்தவாரிக்காக தயாராய் இருந்தோம்.மணி பத்தை தாண்டியதும் ஒவ்வொரு சுவாமியும் குளக்கரைக்கு தீர்த்தவாரி திருவிழாக்காக வரத் தொடங்கினார்கள்.

ரிஷப வாகனத்தில் கும்பேஸ்வரர்

அருள்மிகு காசி விஸ்வநாதர் ,கும்பேஸ்வரர் ,நாகேஸ்வரர் , சோமேஸ்வரர், கோடீஸ்வரர் ,காளஹஸ்தீஸ்வரர் , கௌதமேஸ் வரர்,அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர், அபிமுகேஸ்வரர்,கம்பட்ட  விஸ்வநாதர் ,  ஏகாம்பரேஸ்வரர்  என அனைவரும் வருகையிட மணி 10.50ஐ தாண்டியது. தீர்த்தவாரிகளே குளக்கரைக்கு வந்தபிறகு நாங்கள் மட்டும் வீட்டிலேயே இருக்கலாமா?
 
தீர்த்தவாரியின் போது சுவாமிகளின் வருகைகள்
நான்,என்மனைவி,என் இருமகன்கள்(பரத்-சரத்), சகலை திரு.ரவி யின்  மனைவி மகன்கள்(பிரசன்னா ஹரிபிரசாத்) ,  இன்னொரு சகலை திரு.ரமேஷ் அவரது மனைவி,மகன் ராகுல் என் மனைவியின் அக்காளும் அவரது மகன் கார்த்திக்கும், மைத்துனர்கள் திரு சீனிவாசன் அவரது மனைவி திரு.சுரேஷ் அவரது மனைவி, என ஒரு குழுவாய் மகாமக குளத்தில் தீர்த்தவாரிக்காக புறப்பட்டோம்.என் சகலைகளின் வீட்டுக்கும் குளத்திற்கும் இருநூறு அடி தூரம்தான். மைத்துனர் திரு.சுரேஷ் குடிதண்ணீர் பாட்டில் வாங்கி வெய்யிலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு இலவச விநியோகம்(நீர் தானம்) செய்தார்.

நாங்கள் குளத்தில் இறங்கியபோது மணி பதினொன்றை ஆகியது இன்னும் சிறிது நேரத்தில் தீர்த்தவாரி நடைபெறப் போகிறது கிழக்கு கரையில் ஆதிகும்பேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்து அருளினார்.
 
தீர்த்தவாரி நடைப்பெற்ற போது
கொம்பு ,தாள வாத்திய ஒலியுடன்  நாதஸ்வரம், மேளதாளத்துடன்  இசைக்கலைஞர்களின் வாத்திய இசை கச்சேரி உற்சாகத்துடன் நடந்துக் கொண்டிருக்க பக்தர்களின் நமசிவாய பஞ்சாட்சர ஒலி விண்ணை பிளக்க குளக்கரையே சன்னதியாய் அருள் பொங்க,மனம் இளகி,கரம் கூப்பி பக்தி சரணமாய் குளத்திலும் கரையிலும் மக்கள் வெள்ளம் பரவசத்துடன் நின்றக் கோலம்,இதை வார்த்தைகளால் சொன்னால் போதாது.காண வேண்டும். அவ் விழாவில் கலந்து ஆதிகும்பேஸ்வரரின் பரிபூரண ஆசியை பெற வேண்டும்.கரையில் வேத விற்பனர்களின் மந்திர ஒலி தொடர வானில் சூரியபகவான் உச்சமிட மேகம் கறுத்து நிழலிட   ஐந்து கருடன்கள் வானில்   வட்டமிட்டது. பச்சைக் கிளிகள்  குறுக்கும் நெடுக்கும் கீ கீ ஓலியுடன் பறந்தது. அபிமுகேஸ்வரர் கோயிலின் முதல் தளத்தில் இருந்து இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சி ஒளிபதிவாளர்கள் காணொளிப் பதிவை பதிந்துக் கொண்டிருந்தனர்.
அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 12:10 மணிக்கு ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நாயகர் அருள்மிகு. ஆதிகும்பேஸ்வரர் அருள தீர்த்தவாரி நடைப்பெற்றது.நாங்களும் நீராடினோம்.
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவ தேவனை, செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே


எங்கோ சுந்தரர் பாடிய பதிகவரிகள் காற்றில் ஒலிக்க மனம் முழவதும் சிவனே என்று இன்புற்று இருக்க தீர்த்தவாரி நீராடி கரையடைந்தோம். வீட்டிற்கு வந்தபோது லெமன் சாதமும், தயிர் சாதமும் நான்கு பொட்டலங்கள் நண்பர் திரு.சீனிவாசனிடம் இருந்து வந்து காத்து இருந்தது.


தீர்த்தாதிநாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே
ஸ்ரீமந்த்ரபீடேஸ்வரி வல்லபாய
ஸ்ரீகும்பலிங்காய நமஸ் ஸிவாய
பொருள்: கும்பகோணத்திலுள்ள அனைத்து தீர்த்தங்களுக்கு அதிபராக விளங்குபவரே, தீர்த்தத்தில் நீராடும் புண்ணிய பலன்களை அளிப்பவரே, கும்பேஸ்வரா, நமஸ்காரம். நற்பலன்களின் உருவாக இருப்பவரே, கோரிய வரங்களைத் தரும் அற்புதமானவரே, மந்த்ரபீடேஸ்வரியான மங்களாம்பிகையின் மணாளனே, கும்பேஸ்வரா,  ஈசா, நமஸ்காரம்.

துயர் நீக்கி
துன்பமெல்லாம் துடைத்து
துவளும் சோர்வின்றி
தூய வாழ்வினை
அருள்வாய் திருவே.
மாலை ஆறு மணியாகியது.அப்போதும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை.மக்கள் சாரைசாரையாக வந்தவண்ணம் இருந்தனர். நண்பர் திரு.சீனிவாசனிடம் போன் செய்து நன்றி தெரிவித்துவிட்டு சென்னைக்கு கிளம்ப உள்ளதையும் தெரிவித்து விடைப்பெற்றேன். எங்களுக்கு சென்னைக்கு எட்டரை மணிக்கு மீண்டும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து.ஆனால்  பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்து. சென்னைக்கு கிளம்ப தயாராக மாற்றுடையணிந்து வாசலில் நின்று மக்கள் வெள்ளத்தை பார்த்துக் கொண்டே இருக்க மணி ஏழரையை கடந்தது. டிபன் ரெடியாம்மா என மனைவியிடம்  கேட்டுக்கொண்டே நான் மக்கள் வெள்ளத்தை நோக்க சிரித்த முகத்தோடு  சாமி வணக்கம் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது மாறி என்று கூறிக்கொண்டே அருகில் வந்து நின்றார் கனிமுத்து எனும் நண்பர் தன் துணைவியுடன்.
 
தீர்த்தவாரிக்கு பிறகும் மக்கள் கூட்டம்
எப்படியாவது உங்களை இங்கே பாப்பேன்னு நெனைச்சிக்கிடே வந்தேன் சாமி,உங்கள பாத்துட்டேன் என்று புளாங்கிதமடைந்தார் கனிமுத்து.

எப்ப சென்னைல இருந்து கிளம்பினிங்க என நான் கனிமுத்துவை விசாரித்தேன். அவரும் தான் வந்ததையும் காரை செட்டிமண்டபம் எனும் இடத்தில் பார்க் செய்துள்ளதையும் கூறினார்.

நாங்க வந்து ரெண்டு நாளாச்சி இன்னிக்கி நைட்டு எட்டரை மணிக்கு வண்டி இப்போவே கிளம்பினாத்தான் பஸ் ஸ்டாண்டுக்கு போகமுடியும் என்று கூறிக்கொண்டே அவருக்கும் அவர் துணைவிக்கும் தண்ணீர் பாட்டிலை கொடுத்தேன்.

உடனே கனிமுத்து சாமி எங்கக் கூட வந்துடுங்க சாமி. என்றார்.

நான் நாங்க நாலுபேரு, கார்லே இடம் பத்துமா என்றேன்.
தவேரா கார்தாங் சாமி. எய்ட் பிளஸ் ஒன்னு தாரளாமா போலாம் சாமி என்று பெருமையுடன் கனிமுத்து கூறினார்.
நான் புன்னைகையுடன், பரவாயில்லே  நாங்க பஸ்ல போய்க்கிறோம் என்றவுடன்  கனிமுத்து கோபித்துக்கொண்டார்.
நான் அவரை தேற்றிவிட்டு என் மனைவியிடம் உத்தரவு பெற்று சரி நீங்க நீராடிவிட்டு  வாங்க போலாம் என்றேன்.

அவர் கிளம்பியதும் என் மூத்த மகன் டிக்கேட் கேன்சல் செய்ய தன் மொபைலை கிளுக்க ஆரம்பித்தான்.


முதல் நாள் தேரோட்டத்தில் அ/கு அபிமுகேஸ்வரர்
தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கு விசிறி வீசும் பெரியவர்
முன்நாள் இரவில் காமாட்சி வீதியுலா
கனிமுத்துவும் அவர் துணைவியும் மணி ஒன்பதரைக்கு வந்து சேர்ந்தார்கள் சகலை வீட்டில் கனிமுத்துவும் அவர் துணைவி மற்றும் நாங்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு எல்லாரிடமும் ப்ரியாவிடைப்பெற்று நடையாய் விஸ்வநாதன் வீதி வடக்கு முனைக்கு வந்தோம்.ஆட்டோ பிடித்து கார் நிறுத்தி வைத்த செட்டிமண்டபம் வந்தோம். கனிமுத்துவின் காரில் அனைவரும் அமர்ந்து கொள்ள சென்னை நோக்கி மீண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்க கனிமுத்து காரை திருப்பினார்.மணி பத்து ஐம்பது என எனது செல்போன் காட்டியது

நீண்ட நேர தூரப்பயணத்திற்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள புதுப்பட்டினத்தில்  அடுப்பாங்கரை எனும் உணவகத்தின் முன் கார் நிறுத்தி நானும் கனிமுத்துவும் தேநீர் அருந்திவிட்டு சிறிது ஆசுவாசத்திற்கு பிறகு மீண்டும் பயணித்து திருவான்மியூர் வந்தடைந்தோம். கனிமுத்துவும் அவரது துணைவியாரிடமும் நன்றி கலந்த வணக்கத்துடன் விடைபெற்றோம். மணி அதிகாலை மூன்றையாகியது.

PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Dr B Jambulingam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இத்துடன் நான் ஐந்து மகாமகங்களைப் பார்த்துள்ளேன். இந்த மகாமகத்திற்காக நான் குடும்பத்துடன் இரு முறையும் (முதல் நாள், நிறைவு நாள்) தனியாக இரண்டாம் நாளும் கும்பகோணத்திற்கு மகாமக விழாவின்போது சென்றேன். தங்களது இப்பதிவு விழா நிகழும் நேரத்தில் எங்களை கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்றது. நாங்கள் காலை 7.00 மணிவாக்கில் மகாமகக்குளத்திற்குச் சென்றோம். பின்னர் தீர்த்தவாரிக்கு வந்த பல உற்சவமூர்த்திகளைக் கண்டோம். நிறைவான பயணம். தங்களது பகிர்வுக்கு நன்றி.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms