காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்கள்
1.கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில்
ராஜகோபாலசுவாமி கோயில் என்றாம் நம் நினைவிற்கு வருவது மன்னார்குடியே. கும்பகோணத்தில் இரு ராஜகோபாலசுவாமி கோயில்கள் உள்ளன. மகாமகத் தீர்த்தவாரியின்போது காவிரியில் தீர்த்தவாரி பெறும் கோயில்களில் ஒன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயில். இக்கோயில் கடைத்தெருவில் கடைகளின் இடையே இருப்பதால் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமே.
முனைவர் திரு.ஜம்பு லிங்கம் அவர்களின் அனுமதி பெற்று அவரின் வலைபூவிலிருந்து எடுத்து தொகுக்க பட்ட தொகுப்பு இது. இந்த தொகுப்பில் புகைப்படங்களும் அவரது வலைப்பூவிலிருந்தே எடுக்கப்பட்டதாகும்.
நெடிய வாயிலை கடந்து உள்ளே வரும் நம்மை இரு புறமும் சுதையாலான
சிலைகளும், யானைகளும்
வரவேற்கின்றன. முன்மண்டபத்தில் புதுப்பிக்கப்பட்ட கொடி மரம் மிக அருமையாக உள்ளது.
ராஜகோபாலர், செங்கமலவல்லித்தாயார் உறையும் இக்கோயிலின் கருவறை விமானம்
திருப்பணிக்குப் பின் அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையைச் சுற்றி வரும்போது
அங்கிருந்து கம்பீரமாக உள்ள ராஜகோபுரத்தை காணலாம். இக்கோயிலில் நடைபெறும்
விழாக்களில் கருடசேவையும் ஒன்றாகும்.
ராமசாமி கோயிலிலிருந்து கிளம்பி பெரியக்கடைத்தெருவில் சென்றால் வரிசையாக அனுமார் கோயில், சரநாராயணப்பெருமாள் கோயில், கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலசுவாமி கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் என்று வரிசையாக கோயில்கள் உள்ளதைக் காணமுடியும். அதே பாதையில் சென்றால் சக்கரபாணி கோயிலைச் சென்றடையலாம்.கும்பகோணத்தில் நேர்கோட்டில் அதிகமான கோயில்கள் உள்ள இடங்களில் பெரியக்கடைத்தெருவும் ஒன்றாகும். 19 சூன் 2015இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
தோப்புத்தெருவில்
இன்னொரு ராஜகோபாலசுவாமி கோயில்
கும்பகோணம் தோப்புத்தெருவில், கருவறையில் ஒரே கல்லில் சீதைராமரையும்,
அருகில் லட்சுமணரையும் கொண்டுள்ள ராஜகோபாலசுவாமிகோயில் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது.
2.கும்பகோணம் சார்ங்கபாணி கோயில்
சார்ங்கம் என்னும் வில்லுடன் பெருமாள்
விமானத்தில குடந்தை வந்து கோமளவல்லியை ஏற்றுக்கொண்டதாகக் கூறுவர். அதனால் அவரை
சார்ங்கபாணி என்றழைப்பர். சிலர் தவறாக சாரங்கபாணி என்று கூறுகின்றனர்.
நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தைத்
தொகுக்கக் காரணமாக இருந்த பெருமாள் இவரே
உயர்ந்த அழகான ராஜகோபுரம்.
திருவரங்கம், திருவில்லிப்புத்தூரை அடுத்து
அமைந்துள்ள பெரிய கோபுரம். பார்க்கப் பார்க்க பார்த்துககொண்டே இருக்கலாம். கருவறை
மண்டபம் தேர் போன்ற வடிவில் கண்கொள்ளாக் காட்சி. சயனக்கோலத்தில் பெருமாளின்
அழகிற்கு ஈடு இணையில்லை. இக்கோயிலிலுள்ள சித்திரைத்தேர் தமிழகத்தின் மிகப் பெரிய
தேர்களில் ஒன்றாகும். இந்தத் தேரை திருமங்கையாழ்வாரே இறைவனுக்கு அர்ப்பணித்ததாகக்
கூறுவர்.
திருமழிசையாழ்வார் இப்பெருமாளை நோக்கி இலங்கைக்கு நடந்த வருத்தத்தால் கால்கள் நொந்து களைத்துப் போய் படுத்துள்ளீரோ, உலகைத் தாங்கிய களைப்போ என்று கேட்டுக் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு கேசவனே என்று பாடியதும், சற்றே எழுகின்ற கோலத்தில் புஜத்தைச் சாய்த்து எழுந்திருக்க முயல்வதுபோல் காட்சி தந்தாராம். இன்றும் இதுபோல் சாய்ந்தவாறே எழுந்திருக்க முயலும் கோலத்தில்தான் காட்சிதருகிறார் (சாய்ந்து எழ முயலும் திருக்கோலம்) இருக்கிறார்.
இக்கோயிலில்
பெருமாள் கருவறையைச் தேர் போன்ற வடிவில் யானை இழுத்துச் செல்லும்
அந்த அரிய காட்சி மிக
அழகாக இருக்கும்.
3.இராமசுவாமி கோயில்,
கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில்
கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில்
பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். வடக்கு
நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில்.
இக்கோயிலில் உள்ள மூலவரின் சிறப்பு பட்டாபிசேக நிலையில் இராம பிரான் காட்சி தருவதேயாகும். இராமர், சீதாபிராட்டியார், லட்சுமணர், பரதன், சத்ருகனன்,ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைவருடைய சிற்பங்களை கருவறையில் காணமுடியும். இவர்களுடைய திருமேனிகள் அழகே உருவெடுத்தாற்போல விளங்குகின்றன. ஆஞ்சநேயர் வீணையுடனும், இராமாயண பாராயணத்துடனும் இருக்கும் நிலையில் அபூர்வமாகக் காட்சி தருகிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதைப்பிராட்டியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருகன் சாமரம் வீச, இலக்குமணம் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து இராமச்சந்திரமூர்த்தியின் ஆணையை எதிர்பார்ப்பதுபோல காட்சி தருகிறார். [1] லட்சுமணரே, ராமரின் வில்லையும் சேர்த்துப் பிடித்தபடி இருப்பது வேறு திருத்தலங்களில் காண முடியாத அரிய அமைப்பு.
இக்கோயில் ஒரு சிற்பக்கூடமாகத்
திகழ்கின்றது. முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் நல்ல வேலைப்பாடுகள் உள்ள
சிற்பங்கள் திருமாலின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் நிலையில் உள்ளன. இந்த முன்
மண்டபம் ஒரு சிற்பக் கலைக்கூடம் என்றால் அது மிகையாகாது. இம்மண்டபத்தின் ஒவ்வொரு
தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிற்பக் கலை மிளிர்கிறது. ஒவ்வொன்றும் வரலாற்றுக்
காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ரதி
மன்மதன் சிலைகளையும் இவற்றில் வடித்திருப்பது காண்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன.
இக்கோயிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும். இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம்.
இக்கோயிலில் 13.7.2015 அன்று கொடி
மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரத்தின்
அடிப்பாகம் சேதமடைந்ததால், அக்கொடி மரம் நீக்கப்பட்டு 20 அடி உயரத்தில்
நாட்டு தேக்கு மரத்தினால் வடிவமைக்கப்பட்டு அமைக்கப்பட்டதுள்ளது.
--
4.கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்.
காவிரியில்
தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.
கும்பகோணம்
கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதி வழியாகச் சென்று கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி
வழியாக காவிரியாற்றை நோக்கிச் செல்லும் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது.
சக்கரபாணி கோயிலுக்குத் தென்மேற்கே அமைந்துள்ள இக்கோயிலின் அருகே
வராகக்குளம் உள்ளது. பல ஆண்டுகளாக மண் மேடாகக் காணப்பட்ட இக்குளம் தற்போது
மகாமகத்தை முன்னிட்டு தூர்வாரப்பட்டுவருகிறது. இக்கோயிலுக்கு அருகே கரும்பாயிரம்
விநாயகர் கோயில் உள்ளது.கோயிலின் முகப்பில் ஆதிவராகப்பெருமாள் தேவியருடன்
காணப்படும் சுதைச்சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
மகாமகத்தின்போது
தீர்த்தவாரி காணுகின்ற ஐந்து வைணவக் கோயில்களில் இக்கோயிலும் இராஜகோபாலஸ்வாமி
கோயிலுமே சிறிய கோயில்களாகும். முகப்பைக் கடந்து உள்ளே வரும்போது அழகான கொடிமரம்
காணப்படுகிறது. அடுத்து அமைந்துள்ள மண்டபத்தினை அடுத்து கருவறையில் மூலவர்
வராகப்பெருமாள் காணப்படுகிறார். வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் இவர்
வராகப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார்.
திருச்சுற்றில்
சுற்றிவரும்போது அழகான சிறிய விமானத்தினை கருவறையின்மீதாகக் காணமுடியும்.
ஒரு சமயம் ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு பாதாளத்தில் ஒளிந்துகொண்டதாகவும், வானவர்கள்
திருமாலிடம் இதுபற்றி முறையிட திருமால் வராக உருவெடுத்து பாதாளத்தில் புகுந்து
அவருடன் போரிட்டு ஒரு கொம்பினால் அவனையும் அவனுடைய சுற்றத்தாரையும் அழித்ததாகவும்
மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிகொண்டு மேலே வந்து பூமியை முன்போல நிலைபெறச்
செய்ததாகவும் கூறுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் நிலையில் பெருமாள் பூமிதேமியை
தமது இடது மடியில் வீற்றிருக்கும் நிலையில் காணப்படுகின்றார்.
இக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இக்கோயிலின் நடை காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் பின்னர் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
5. சக்கரபாணி கோயில்
இந்த கோயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை.
ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
ஒளியிழந்த சூரியன்
தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி
மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று
கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து
ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என
இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில்
நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.
இத்தலத்தில் உள்ள
மூலவர் சக்கரபாணி எனப்படுகிறார். தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும்
அழைக்கப்படுகிறார்.
கோவில் அதன் அழகிய
தூண்களுக்காக பிரசித்தி பெற்றதாகும். மூலவர், சக்கரபாணி சுவாமிக்கு 8 கைகள் உள்ளன.
ராஜா சரபோஜின் நோய் இந்த கோவிலின் உள்ள கடவுளின் கிருபையால் குணப்படுத்த கூறப்படுகிறது, அதன் காரணமாக
ஒரு வெண்கல படம் இங்கு உள்ளது.
பதிவுக்கான செய்திகள் கோயில் விபரங்கள் : |
---|
முனைவர் திரு.ஜம்பு லிங்கம் |
கண்காணிப்பாளர் |
தமிழ் பல்கலைக் கழகம் |
தஞ்சாவூர். |
www.http://drbjambulingam.blogspot.com/ |

4 கருத்துரைகள்:
எனது வலைப்பூவிலிருந்து கட்டுரைகளை வெளியிட்டமையறிந்து மகிழ்ச்சி. சக்கரபாணி கோயில் பற்றி எனது வலைப்பூவில் இன்னும் நான் எழுதவில்லை. தாங்கள் எழுதியறிந்து பாராட்டுகள். தங்களது முயற்சி சிறக்க என் உதவி என்றும் உண்டு. நன்றி.
மிக நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .
நன்றி.
(வேதாவின் வலை)
@Dr B Jambulingamசக்கரபாணி கோயில் பற்றி உங்களது பதிவில் தேடினேன் கிடைக்கவில்லை.எனது உறவினர் திரு.ரவி மூலமாக அறிந்தேன்.வெளியிட்டேன்.நன்றி சார்
@kovaikkavi நன்றி மேடம்
Post a Comment