குடமூக்கு, குடந்தை என்று
போற்றப்படும் அழைக்கப்படுகின்ற கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகராகும். 2016 பிப்ரவரி 13 முதல்
22
வரை நிகழவுள்ள மகாமகத்தை முன்னிட்டு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி
காணும் சைவக்கோயில்கள், காவிரியாற்றில்
தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்கள் பற்றிய
சிறிய தொகுப்பே இது.
முனைவர் திரு.ஜம்பு லிங்கம் அவர்களின் அனுமதி பெற்று அவரின் வலைபூவிலிருந்து எடுத்து தொகுக்க பட்ட தொகுப்பு இது. இந்த தொகுப்பில் புகைப்படங்களும் அவரது வலைப்பூவிலிருந்தே எடுக்கப்பட்டதாகும்.
மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்
1.காசி விஸ்வநாதர் கோயில் (நவ கன்னியர் அருள் பாலிக்கும் இடம்)
2.கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
3.நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
4.சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
5.கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
6.காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
7.கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
8.அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
9.பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
10.அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
11.கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
12.ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
-
1.கும்பகோணம் காசி விசுவநாதர் கோயில்
பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் முதல் கோயில் இது
இக்கோயில் மகாமகக்குளத்தின் வட கரையில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும்போது முதலில் கோயிலின் நுழைவாயில் காணப்படுகிறது.
பின்னர் கோயில் வாயிலின் ராஜகோபுரத்தை அடுத்து நந்தி, பலிபீடம், கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது.
முன் மண்டபத்தை அடுத்து உள்ளே செல்லும்போது உள் மண்டபத்தில் வலப்புறம் வள்ளிதேவசேனாவுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. இடப்புறம் கணபதி, சோமாஸ்கந்தர் சன்னதிகளும், நவகன்னியருக்கான உற்சவர் சன்னதியும் உள்ளன.
இதே மண்டபத்தில் வலப்புறம் சரயு, கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, யமுனா, கங்கா ஆகிய நவகன்னியருக்கான சன்னதி உள்ளது.
நவகன்னியர் சன்னதியை அடுத்து பள்ளியறையும், நடராஜர் சன்னதியும் உள்ளன. வெளிச்சுற்றில் ஷேத்திர மகாலிங்கம் எனப்படும் லிங்க பானம் உள்ளது.
மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கா, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி உள்ளனர். கருவறையின் வலப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. மூலவரும் தேவியும் உள்ள மண்டபத்தின் கருவறையைச் சுற்றிவரும்போது பின்புறம் பைரவர், சூரியன், சனீஸ்வரன், சந்திரன், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் குடமுழுக்கு 9.2.2014இல் நடைபெற்றது.
இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30
2.கும்பேஸ்வரர் கோயில்
மகாமகத்திற்காக தீர்த்தவாரி காணும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
மூன்றாம் பிரகாரத்தில் வன்னி மரம், முன்பாக விநாயகர். இப்பிரகாரத்தில் கும்ப முனிவர், விநாயகர். இரண்டாம் பிரகாரம் செல்லும் முன்பாக முற்றவெளி விநாயகர், பாலதண்டாயுதபாணி சன்னதி. நுழைந்ததும் வலப்புறம் லட்சுமிநாராயணப் பெருமாள் சன்னதி. கொடி மரம், நந்தி, பலிபீடம். அடுத்த கோபுரம் வாயிலாகச் செல்லும்போது நிலைக்காலில் பௌத்தம் இப்பகுதியில் தழைத்திருந்தமைக்கான கல்வெட்டு. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர். தொடர்ந்து நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர் உள்ளிட்ட பலர் உள்ளனர். தென்மேற்குப் பகுதியில் வலஞ்சுழி விநாயகர், பிட்சாடனர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர். அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, சரசுவதி. வடக்குப் பிரகாரத்தில் மங்களாம்பிகை சன்னதி. வாயிலின் இரு புறமும் ஜெயா, விஜயா. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சட்டநாதர் சன்னதி.
மூலவராக கும்பேஸ்வரர் உள்ள இக்கோயிலில் உறையும் இறைவி மங்களாம்பிகை. இக்கோயில் குடமுழுக்கு 5.6.2009 அன்று நடைபெற்றுள்ள நிலையில் மகாமகத்திற்காக குடமுழுக்கு நடைபெறும் கோயில் பட்டியிலில் இக்கோயில் இடம்பெறவில்லை. ஆங்காகே சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
3.நாகேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சார்ங்கபாணிகோயில் அழகான கோபுரத்திற்கும், ராமசாமி கோயில் அழகான சிற்ப மண்டபத்திற்கும், ராமாயண ஓவியங்களும் பெயர் பெற்றுள்ள நிலையில் இக்கோயில் தேர் வடிவில் அமைந்துள்ள நடராசர் மண்டபம், கருவறையைச் சிறிய அழகான சிற்பங்கள், அழகான கருவறையுடன் கூடிய விமானம் என்ற நிலையில் சிறப்பைப் பெற்று கட்டடக்கலையிலும் சிற்பக்கலையிலும் முதன்மையான இடத்தைப் பெறுகிறது.
மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ் வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன.
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 27ஆவது தலமாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாக இருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்தசோழனால் கற்கோயிலாக வடிவம் பெற்ற பெருமையுடையது இக்கோயில். நாகராஜனும், சூரியனும் பூசித்த பெருமை பெற்றது இக்கோயில். இத்தலத்து இறைவனை நாகேசப்பெருமான் என்றும், தலத்தினை நாகேஸ்வரம் என்றும் அழைப்பர். பாஸ்கர சேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலம் சான்றாக உள்ளது. இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் சூரிய கிரகணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனியின்மீது நேராக விழுகின்ற அரிய காட்சியைக் காணமுடியும். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைப் போற்றிப்பாடும்போது இத்தலத்தினைக் குடந்தைக்கீழ்க்கோட்டம் என்கிறார்.
ஐந்து நிலைகளுடன் உள்ள ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. உள்ளே செல்லும்போது வலப்புறம் அம்பிகையின் சன்னதி உள்ளது. இடப்புறம் சிங்கக்கிணறு உள்ளது. அடுத்து இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு 1923இல் குடமுழுக்கு செய்த பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுக்கான தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இரு புறமும் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது கொடி மரம், பலிபீடம் காணப்படுகின்றன. இடப்புறம் பதினாறு கால் மண்டபமும், வலப்புறமும் நடராஜர் சன்னதியும் உள்ளன.
நடராஜர் சன்னதி நகர்ந்து செல்லும் தேர் வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் இரு புறங்களிலும் கல்லால் ஆன சக்கரங்கள் உள்ளன.
இரு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுத்துச் செல்லும் நிலையில் இம்மண்டபம் அமைந்துள்ளது. சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன.
இக்கோயிலின் உள் மண்டபத்தில் படைவெட்டி மாரியம்மன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி வரும்போது கருவறைக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் வீதிவிடங்கர் (திருவாரூர்), சோளிங்கநாதர் (திருக்குவளை), கண்ணாயிரநாதர் (திருக்காரவாயில்), வாய்மூர்நாதர் (திருவாய்மூர்), மறைகாட்சி மணாளநாதர் (வேதாரண்யம்), தர்பாரண்யேஸ்வரர் (திருநள்ளாறு) ஆகியோரைக் குறிக்கும் லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி காணப்படுகின்றனர்.
திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி, சூரியன் சன்னதி, சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராசர் சன்னதியும் அருகேயுள்ளன. சூரியன் சன்னதி வடகிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.
கருவறையில் லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் நாகேஸ்வரர் என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின் வெளியே கோஷ்டத்திற்குக் கீழே அதிட்டானப்பகுதியில் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இராமாயணச்சிற்பங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை போன்ற சிற்பங்களை திருப்புறம்பியத்திலும், புள்ளமங்கையிலும் காணமுடியும்.
பெரியநாயகி என்றும் பிரகந்நாயகி என்றும் அழைக்கப்படும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் தனியாக அமைந்துள்ளது. இச்சன்னதியில் ஆடிப்பூர அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. அருகே பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றிவரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.
இக்கோயிலில் உள்ள சன்னதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற மற்றொரு சன்னதியான நாகர் சன்னதி வெளிச்சுற்றில் உள்ளது. இங்குள்ள நாக கன்னி அம்மன் சன்னதியைச் சுற்றி அதிகமான நாக சிற்பங்கள் காணப்படுகின்றன.
4.சோமேஸ்வரர் கோயில்
குடந்தைக் காரோணம் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது.
அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம், சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2009இல் இக்கோயிலின் குட்முழுக்கு நடைபெற்றது. மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இக்கோயிலில் நவம்பர் 2, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. 29 ஜனவரி 2016 அன்று கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதுள்ளது கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அருகே நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரையிலும் இக்கோயிலின் நடை திறந்திருக்கும்.
5.கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்
அமிர்தத்துளிகள் விழுந்த இடம் என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான்தானே என்று நாவுக்கரசர் இத்தல இறைவனைப் போற்றுகின்றார்.
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியை ஆகியவை காணப்படுகின்றன. தொடர்ந்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலப்புறம் நால்வரும் ஆத்ரேய மகரிஷியும் உள்ளனர். திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஏரண்ட முனிவர் (ஆத்ரேய மகரிஷி) இங்கு வந்ததாகவும், ஏரண்டம் எனப்படும் கொட்டைச்செடியின்கீழிருந்து தவம் செய்ததால் அவர் அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையில் லிங்கத்திருமேனியாக கோடீஸ்வரர் உள்ளார்.
ஒரு காலத்தில் இவ்வூர் ஆமணக்கங்காடாக இருந்ததாகவும், இறைவன் ஆமணக்கின் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் கொட்டையூர் என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடிலிங்கமாகத் தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலைக்கு கோடீச்சரம் என்றழைக்கின்றனர். இறைவனுக்கு கோடீஸ்வரர் என்றும், விநாயகருக்கு கோடி விநாயகர் என்றும், சுப்பிரமணியருக்கு கோடி சுப்பிரமணியர் என்றும், சண்டிகேஸ்வரருக்கு கோடி சண்டிகேஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு.
கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டீஸ்வரர் சன்னதி உள்ளது.
திருச்சுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமிக்கான சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள இறைவி பந்தாடுநாயகி ஆவார். மகாமகத்திற்காக குடமுழுக்கு கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று நிறைவுற்றது.
6.கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
காவிரியாற்றில் தென் கரையில் அமைந்துள்ள இக்கோயில், பெரிய மடத்திற்கு சற்று முன்னதாக உள்ளது.
காளத்தி என்றால் நம் நினைவிற்கு வருவது தேவார மூவரால் பாடப்பெற்ற, கண்ணப்பர் வழிபட்டு பேறுபெற்ற, திருக்காளத்தி எனப்படும் காளஹஸ்தியாகும். அவ்வாறான பெயரில் கும்பகோணத்தில் ஒரு கோயில் உள்ள ஒரு கோயில் இதுவாகும்.
அழகான ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் ஒரு மண்டபம் இருக்கும். மண்டப முகப்பில் நடராஜர் சிலை மிகவும் அழகாக அமைந்திருக்கும்.
கொடி மரத்தைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் காளஹஸ்தீஸ்வரரைக் கருவறையில் தரிசிக்கலாம்
தொடர்ந்து இறைவியின் சன்னதியில் ஞானாம்பிகை அம்மனை தரிசிக்கலாம் .திருச்சுற்றில் வலம் வரும்போது கும்பாபிஷேகம் ஆன கருவறை விமானங்களைக் காணலாம். இக்கோயிலுக்கு காமாட்சி ஜோசியர் தெருவின் வழியாகவும் வரலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30, மாலை 4.00-இரவு 8.30 வரை.
*******************************************************************************
மேலும் 6 சைவக்கோயில்கள் அடுத்த பதிவில் ,......
*******************************************************************************
*******************************************************************************
மேலும் 6 சைவக்கோயில்கள் அடுத்த பதிவில் ,......
*******************************************************************************
பதிவுக்கான செய்திகள் - கோயில் விபரங்கள் : |
---|
முனைவர் திரு.ஜம்பு லிங்கம் |
கண்காணிப்பாளர் |
தமிழ் பல்கலைக் கழகம் |
தஞ்சாவூர். |
www.http://drbjambulingam.blogspot.com/ |

1 கருத்துரைகள்:
மிக நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .
நன்றி.
(வேதாவின் வலை)
Post a Comment