Thursday, February 18, 2016

மாசிமகமும் மற்ற கோயில்களும்

மாசி மாதம் மகத்துவம் மிகுந்த மாதமாகும். அதிலும் மாசிமகம் சிவ பக்தர்களுக்கும் பெருமாள் பக்தர்களுக்கும் சிறப்புவாய்ந்த நாளாகும். நீருக்கடியில் ஒளிக்கப்பட்ட பூமியை, திருமால் வராக அவதாரமெடுத்து மீட்டுவந்தது ஒரு மாசிமக நாளில்தான். செல்வத்துக்கு அதிபதியாய் பேசப்படும் குபேரன், தான் இழந்த செல்வமனைத்தையும் மீளப்பெற்றது மாசிமகத்தில்தான்.

மாசிமகத்தன்று காந்தசக்தி மிகுந்த புதிய நீரூற்றுகள் தோன்றி கடலில் கலக்கும். எனவே அன்றைய தினம் கடலில் நீராடும்போது, அந்த காந்தசக்தி உடலில் கலந்து உடலையும் மனதையும் புத்துயிர்ப்பு கொள்ளச்செய்யும். இதை மனதில் கொண்டே நம் முன்னோர் மாசிமகத்தன்று கடல் நீராடுவதை ஆன்மிகச் சடங்காக வைத்திருக்கின்றனர்.

மாசிமகம் என்றாலே கும்பகோணம்தான் நினைவுக்கு வரும். இது ஆண்டுதோறும் நடந்தாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் உலகப் புகழ்பெற்ற விழாவாகும். அந்தநாளில் மகாமகக்குளத்தில் பன்னிரண்டு சிவாலய மூர்த்திகள் நீராடுவர். காவிரிக் கரையோரங்களில் ஐந்து விஷ்ணு ஆலய மூர்த்திகள் நீராடுவர்.

புண்ணிய நதிகளில் நீராட பாவம் தொலையும் என்பது நமது ஐதீகம். புண்ணிய நதிகளுள் கங்கை தனிப்பெருஞ் சிறப்புடையது. பாவம் தொலைப்பதற்கென்றே கங்கைக் கரையிலுள்ள காசியைத் தேடிச்செல்பவர்கள் அநேகம். அத்தகைய காசி நகரத்தவரும் தேடி வந்து நீராடி பாவம் போக்கிக்கொள்ளுமிடம் கும்பகோணம் மகாமகக் குளம். குடந்தையின் மகாமகக் குளத்தில் நீராட பாவமெல்லாம் தொலையும் என புராணங்கள் கூறுகின்றன. அதிலும் மாசி மகத்தன்று இங்கு ஸ்நானம் செய்தால் கங்கையில் நூறு முறை நீராடிய பலன் கிட்டும்; கூடவே அனைத்துப் புண்ணிய நதிகளிலும் பத்தாண்டுகள் நீராடிய பலனும் கிடைக்கும் என்பர். இரண்டு முறை மாசிமகக் குளத்தில் நீராடியவருக்கு வீடுபேறே கிடைத்துவிடும்.

 ஆண்டுதோறும் மாசிமகத்தன்று சிவ, விஷ்ணு ஆலயங்களில் உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரி காண்பார்கள். சக்கரத்தாழ்வார், அஸ்திரதேவர் போன்றோரும் உடன்சென்று தீர்த்தவாரி கண்டு திரும்புவர். ஹரியும் ஹரனும் இவ்வாறு கடலாடுவதற்குப் பின்புலமாய்ச் சொல்லப்படும் புராணக் கதைகளைக் காண்போம்.

ஒருசமயம் உமையவள் மீனவப் பெண்ணாக அவதரித்தாள். அவளை மணம்செய்ய விரும்பிய ஈசன் ராட்சத மீனொன்றை சிருஷ்டித்து மீனவர்களை அச்சுறுத்தினார். பின்பு தானே வல்லமைமிகு மீனவனாக வந்து அந்த மீனை வென்றடக்கி, வெற்றிப் பரிசாக மீனவத் தலைவனின் மகளான உமையை மணந்துகொண்டார். இருவரும் மீனவர்களுக்கு சிவசக்தியாக காட்சி தந்தருளினர்.

மீனவர் தலைவன், அகிலத்துக்கெல்லாம் அன்னையான பார்வதியே தன் மகளாக வந்ததில் பேருவகை அடைந்தாலும், பேணி வளர்த்த தன் பெண்ணைப் பிரிவதையெண்ணி துயரம் கொண்டார். அவரது துயராற்றும் முகமாக ஈசன், “”யாம் ஆண்டுக்கொருமுறை மாசிமகத்தன்று கடலாட வருவோம்; கண்டுமகிழலாம்என கூறினார்.

இந்நிகழ்வு திருவேட்டக்குடியில் நிகழ்ந்ததாக நம்பப்படுவதால், மாசிமகத்தன்று ஈசனும் உமையும் மீனவப் பெண்ணாகவும் மீனவனாகவும் திருவேட்டக்குடி கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அச்சமயம் கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அகரம்பேட்டை மீனவர்கள் ஒன்றுகூடி, தங்கள்குலப் பெண்ணை மணந்த ஈசனை மாப்ளே, மாப்ளேஎன கூவியழைத்து சொந்தம் கொண்டாடி, தீர்த்தவாரி மேற்கொள்வர்.

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப் போடப்பட்டிருந்தார். வருண பகவானது செயல்பாடுகள் இன்றி அனைவரும் துன்புற்றனர். வருண பகவானை விடுவிக்கும்படி தேவர் கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவரும் வருண பகவானை விடுவித்தார். அன்றைய தினம் மாசி மக நாள். தோஷம் நீங்கப் பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தம் ஆடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலனைப் பெற அருள வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்.

அமுதம் வேண்டி திருபாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதனால் விஷ்ணு சமுத்திரராஜனின் மருமகன் ஆனார்.

மகாவிஷ்ணு தன் மகளை மணந்து கொண்டு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் அவரை எப்படி அவர்களை தரிசிப்பது என சமுத்திரராஜன் வருந்தினார். தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள். திருமால் ஆண்டிற்கு ஒரு முறை மாசிமகம் தினம் தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் அருளினார்

அதற்காகவே ஆண்டு தோறும் மாசிமகம் தினமன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார்.


நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர். மாசி மகத்தையொட்டி இத்தல சௌம்ய நாராயணப் பெருமாள் கோவிலில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். இவ்விழாவை ஜோசியர் தெப்பவிழா என்பர்.

கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குளத்தில் முதல்நாள் முட்டுத்தள்ளுதல் விழா நடைபெறும். அன்று அதிகாலையிலேயே சந்தான கோபாலகிருஷ்ணன் வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் எழுந்தருளி, முட்டுத்தள்ளு வெள்ளோட்டம் கண்டு மாலைவரை குளக்கரை மண்டபத்தில் காட்சி தருவார்.

இரண்டாம் நாள் ஊரக மெல்லணையான் குளக்கரை எழுந்தருளி, காலை ஒருமுறையும் இரவு இரண்டு முறையும் தெப்பத்தில் உலாவருவார். மூன்றாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இவ்விழா நாட்களில் பக்தர்கள் குளக்கரையில் ஆயிரக்கணக்கில் விளக்குகளை ஏற்றிவைத்து பிரார்த்தனை செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத் தெப்பக்குளத்தில், மாசிமகத்தன்று அப்பரை தெப்பத்தில் எழுந்தருளச் செய்து உலாவரச் செய்வார்கள். அதனால் இதற்கு அப்பர் தெப்பமென்றே பெயர்.

திருவாஞ்சியம் தீர்த்தக்குளத்திற்கு குப்தகங்கை என்று பெயர். கங்கை தன் 999 கலைகளை இக்குளத்தில் கரைத்துவிட்டு மீதி ஒரு கலையைத்தான் கங்கை நதியில் கரைத்தாளாம். இத்தகைய சிறப்புமிகுந்த தெப்பக்குளத்தில் வாஞ்சிநாதர் தெப்பவிழா கண்டபின் எமவாகனத்தில் உலாவருவார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் வள்ளாள மகாராஜாவுக்கு நீத்தார் கடன் செய்யும் சடங்கு மாசிமகத்தன்று நடைபெறும். பிள்ளைப் பேறில்லாத மகாராஜாவுக்கு ஈசனே மகனாக எழுந்தருளி, மேளதாளமில்லாமல் பள்ளிகொண்டாபட்டிலுள்ள கௌதம நதிக் கரைக்குச் சென்று இந்தக் கடன்களை நிறைவு செய்துவருவது வழக்கம்.

திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் காமதகன நிகழ்ச்சியே மாசிமக சிறப்பாகும்.அன்றைய தினம் ஈசன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுவர்.

குபேரன் திருத்தண்டிகை சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வரரை வழிபட்டு தான் இழந்த செல்வமனைத்தையும் ஒரு மாசி மகத்தன்று மீண்டும் அடைந்தான். அதனை நினைவுகூரும் விதத்தில் இங்கு மாசிமக விழா நடைபெறும்.

தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ தேர்த் திருவிழா பிரபலமானதாகும். விழாவுக்கு முதல் நாள் தடம்பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில், இவ்விழாவை தொடங்கிவைத்த பராக்கிரம பாண்டியனின் உருவச் சிலையை நான்கு வீதிகளிலும் உலாவரச் செய்து, வீதிகள் சரியாக உள்ளனவா என உறுதி செய்தபின் மறுநாள் தேரோட்டம் நடைபெறும்.

நல்லூர் கல்யாணசுந்தரர் ஆலயத்தின் பின்புறமுள்ள குளத்திற்கு சப்தசாகர தீர்த்தம் எனப் பெயர். கர்ணனின் தாயான குந்தி, தன் மகனை பெட்டியில் வைத்து ஆற்றில்விட்ட பாவம் தொலைப்பதற்காக, ஏழு கடல்களின் நீர் இக்குளத்தில் பொங்கிவரவேண்டுமென ஈசனிடம் வேண்டினாள். அதனையேற்று ஈசனும் அவ்வாறே அருள குந்தி இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி புண்ணியம் பெற்றாள். இந்த தெப்பக்குளம் ஈசன் அருளால் சப்தசாகர தீர்த்தமானது ஒரு மாசிமக நன்னாளில்தான். குந்தி மட்டுமல்ல; நாமும் அதில் நீராடிப் பலன் பெறலாம்.

புதுச்சேரி வைத்திக்குப்ப கடற்கரையில், மாசிமகத்தன்று உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அணிவகுத்து வந்து தீர்த்தவாரி காண்பர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இவ்விழாவில் சிவன், விஷ்ணு ஆகியோரோடு தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மயிலம் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், புதுவை மணக்குள விநாயகர், அங்காளம்மன் போன்றோரும் இடம்பெறுவர்.

மக நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாகும். அன்று விரதமிருந்து முருகனை வழிபடுபவர்களின் பிறவிப்பிணி தீரும். மாசிமகத்தன்று நடை பெறும் பூண்டி முருகன் தேர்த்திருவிழா பிரசித்தமானது.

முருகப்பெருமான் தந்தைக்கு உபதேசம்செய்ததும் மாசிமக நாளில்தான். சுவாமிமலையில் மாசிமகத்தன்று இந்நிகழ்வு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் வள்ளியை மணந்துகொண்டது மாசிமாத பூச நட்சத்திர நாளில். அதனால் மாசி மாதம் மாங்கல்ய மாதமாக-திருமணத்திற்கு உகந்ததாகத் திகழ்கிறது.

இதேபோன்று மாசி மாத சங்கடஹர சதுர்த்தியும் விசேஷமானது. அன்று கணபதியை வழிபட வினையெல்லாம் விலகும். மறுநாள் மாசிமாத சுக்ல பஞ்சமியாகும். அன்று ஞானதேவதையான சரஸ்வதியை நறுமண மலர்களால் அர்ச்சித்து, தூபதீப நைவேத்தியம் செய்து வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும்.

கடலூர் தேவானம்பட்டினம் கடற்கரையில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாசிமகத்தன்று காந்தசக்தி மிகுந்த புதிய நீரூற்றுகள் தோன்றி கடலில் கலக்கும். எனவே அன்றைய தினம் கடலில் நீராடும்போது, அந்த காந்தசக்தி உடலில் கலந்து உடலையும் மனதையும் புத்துயிர்ப்பு கொள்ளச்செய்யும். இதை மனதில் கொண்டே நம் முன்னோர் மாசிமகத்தன்று கடல் நீராடுவதை ஆன்மிகச் சடங்காக வைத்திருக்கின்றனர்.//
மிக அருமை.
https://kovaikkavi.wordpress.com/

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms