தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள நாட்டுப்புற காவல் தெய்வங்களில் மிகவும் புகழ்பெற்றது அய்யனார்.அவரது வாகனமான குதிரை
வித்தியாசமாக கிராமத்தின் எல்லையில் வைத்து வழிபடுவது பிரசித்தம். பாண்டிய
சோழ மன்னர்களின் காலத்தில் இந்த அய்யனார் வழிபாடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாண்டிய சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லை கிராமங்களில் மிக நெடுங்காலமாக அய்யனார் வழிபாடு பின்பற்றி வந்துள்ளது. அவைகளில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் முன்பு 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குதிரை சிலை ஆசியவிலேயே உயரமான குதிரை சிலை என்ற புகழ் பெற்றது. பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பரந்து விரிந்த இடப்பரப்பில் அமைந்துள்ளது.கீரமங்கலம் வழியாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அறந்தாங்கியில் இருந்து 12-வது கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது.
இக்கோயிலின் வாசலில் தென்திசை நோக்கி தாவும் விதமாக அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலையானது சுமார் 33 அடி உயரமுடையது. இந்தக் குதிரைக்கும், அங்குள்ள சுயம்பு அய்யனாருக்கும் நீண்ட வரலாறு உள்ளது.
அய்யனார் கோயில் அமைந்துள்ள பகுதியில், ஒரு காலத்தில் காரைச் செடிகள் நிறைந்திருந்தன. அந்த இடத்தில் ஆடு, மாடு மேய்த்த சிறுவர்கள் விளையாட்டாக வில்லுனி ஆற்றில் இருந்து களிமண் எடுத்து வந்து கோயில் கட்டியுள்ளனர். அதன்பிறகு குதிரை, யானை ஆகியவற்றின் சிலைகளைச் செய்து அங்கு வைத்துள்ளனர்.
களிமண்ணால் செய்த அரிவாளைக் கொண்டு ஒருநாள் ஒரு ஆட்டுக்கிடாவை விளையாட்டாக வெட்டியபோது அந்த ஆடு துண்டானது. யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதன்பிறகு, ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து யானை, குதிரை ஆகிய சிலைகளோடு சுமார் 1574-
ம் ஆண்டில் கோயில் கட்டியுள்ளனர். மிகவும் சிதிலமடைந்திருந்த சிறப்புக்குரிய இக்கோயில் மற்றும் குதிரையைப் பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ள முடிவெடுத்து கடந்த 2003-ல் திருப்பணி தொடங்கி 2010-ல் கும்பாபிஷேகம் நடந்தது.
ஒரு முறை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் கோயிலில் இருந்த யானை சிலை தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது. ஆனால், குதிரை சிலை பத்திரமாக இருந்தது.
கேட்டால் கேட்டதைக் கொடுப்பார், கேட்காவிட்டால் தன்னையே கொடுப்பார் என்பதற்கு ஏற்ப வேண்டுதலை நிறைவேற்றுவதால்தான் வருடாவருடம் குதிரைக்கு அணிவிக்கப்படும் ஜிகினா மாலைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
இந்த கோயிலின் திருவிழா மாசிமகத்தில்(22.02.2016)
இரண்டு நாட்கள் நடக்கிறது. மாசிமகத் திருவிழாவுக்கு வர இயலாதவர்கள் பங்குனி உத்திரத்துக்கு வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பெரிய குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பது தான். இந்த நிகழ்ச்சி மாசிமகத்தின் முதல் நாள் காலை முதலே தொடங்கிவிட்டது. தமிழகம் பல மாவட்டங்களில் இருந்தும் நேர்த்திக் கடன் செய்து கொண்ட பக்தர்கள் காகிதப் பூ மாலைகளை லாரி, மினிலாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்ற அணிவித்தனர்.
காகிதப் பூ மாலை மட்டுமின்றி பழங்களால் கட்டப்பட்ட மாலையும், பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. சில பக்தர்கள் நாட்டிய குதிரைகளின் நாட்டியத்துடன் வந்து மாலைகள் அணிவித்தனர்.
பல்வேறு வாகனங்களில் மாலைகளை கொண்டு வந்தாலும் ஒரு பக்தர் ஒவ்வொரு ஆண்டும் கூடையில் மாலையை வைத்து தலையில் சுமந்து கொண்டு கால்நடையாகவே கொண்டு வந்து குதிரைக்கு அணிவித்தார்.
இந்த திருவிழாவிற்கு பக்கத்து கிராமங்களில் இருந்து முன்பு கால் நடையாகவும் மாட்டு வண்டியிலும் வந்து தங்கி இருந்து தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். அந்த பழமை மாறக் கூடாது என்பதற்காக பலர் ஒவ்வொரு ஆண்டும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்து தங்கி இருந்தனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம்,
கொத்தமங்கலம், ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்காக சிறப்பு சிகிச்சைப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
திருவிழா காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அன்னதான செய்தனர். நேற்று முன்தினத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இன்று நடக்கும் தெப்ப திருவிழா வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

2 கருத்துரைகள்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் முன்பு 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குதிரை சிலை ஆசியவிலேயே உயரமான குதிரை சிலை//
நல்ல தகவல்.
https://kovaikkavi.wordpress.com/
இச்சிலையை நான் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளேன். கம்பீரமாக, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். புதுக்கோட்டைக்குச் சென்றபோது நண்பர்களிடம் விசாரித்ததில் இச்சிலையைப் பற்றியோ, அது இருக்கும் இடம் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் பல இடங்களில் விசாரித்துவிட்டு பேருந்தில் சென்று சற்றே இடம் மாறி சுமார் 3 கிமீ நடந்து சென்று பின்னர் பார்த்தோம். மறக்க முடியாத அனுபவம்.
Post a Comment