முன்பொரு காலத்தில் கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார்.
அவர் சிவபெருமானிடம் பெரும் பக்தி பூண்டவர். பல தலங்களைத் தரிசித்து கொண்டு
தில்லையில் திருநடனங்கண்டு களித்துப் பின் சீர்காழியை அடைந்தார். அங்கு பஞ்சம்
வந்தது. முனிவர் மனமிரங்கி பஞ்சம் நீங்கும் வரையில் அங்கேயே தங்கி எல்லோருக்கும்
அன்னதானம் செய்து மகிழ்ந்திருந்தார். 12 ஆண்டுகள் கழிந்தன. இவ்வாறு உணவு அளித்து வரும்போது உண்ட
வீட்டுக்கு இரண்டகம் செய்ய எண்ணிய சிலர் தம் மாயையால் ஒரு பசுவை உண்டாக்கி அதனை
கௌதம முனிவரிடம் அனுப்பினர். பஞ்சத்தால் இளைத்திருந்த பசுவினை கௌதம முனிவர்
தடவிக்கொடுக்க அப்பசு கீழே விழுந்து இறந்தது. அம்முனிவருக்குப் பசுக்கொலையாகிய
தீவினை வந்ததென்று உடனிருந்தோர் கூறினர். முனிவருக்கு அது சூழ்ச்சி என புரிந்தது.
சீர்காழியைவிட்டு மயிலாடுதுறையை வந்தடைந்தார். அங்கு துருவாச முனிவரைக் கண்டார்.
தமக்குச் சீர்காழியில் நேர்ந்ததைக் கூறினார். துருவாச முனிவரும் பசு வதையினும்
பாதகர் உறவு பொல்லாதது. அப்பாதக நிவர்த்திக்கு உடனே முயலவேண்டும் என்று கூறி
"நீர் குடந்தை அடைந்து காவிரியாடி மகாமகக்குளத்தின்தென்மேற்கு மூலையில்
எழுந்தருளி இருக்கும் உபவீதேசர் பெருமானை தரிசித்துப் பூசித்து வந்தால் பாதகம்
நீங்கும்" என்றார். அவ்வாறே கௌதம முனிவரும் குடந்தையை அடைந்து காவிரியில்
நீராடி இறைவனை வணங்கினார். இக்கோயிலின் பின்புறம் ஒரு தீர்த்தம் அமைத்து அதில்
தினமும் நீராடி வழிபட்டு வரும் நாளில் இறைவன் காட்சியளித்தார். இத்திருக்கோயிலில்
பூணூல் அணிவது மிகவும் விசேடமானது. அமிர்தக்கலசம் சிவபெருமானால் சிதைக்கப்பட்டபோது
கும்பத்திலிருந்து விழுந்த பூணூல் விழுந்த இடம் இத்தலமாகும்.
பூணூலில் இருந்து தோன்றியவர். இக்கோயிலின் தீர்த்தம் கௌதம
தீர்த்தம் ஆகும். இறைவன் கௌதமேசர், கௌதம
முனிவருக்கு அருள் புரிந்ததால் கௌதமேசுவரர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு
உபவீதேசர் என்ற பெயரும் உண்டு. இறைவி சௌந்தரநாயகி. திருக்கோயிலின் திருச்சுற்றில்
தென்மேற்கில் கௌதம முனிவரது திருமேனி சிலையாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம்.
முனிவர் திருவடியில் அவர் தம் இல்லத்தரசியார் நன்னீராட்டி வழிபடுவதை இப்படிமம்
வடித்த சிற்பி அழகுடன் காட்டியுள்ளமை கண்டு மகிழத்தக்கதாய் உள்ளது.
--
8.சாக்கோட்டை
அமிர்தகலசநாதர் கோயில்
அமிர்தகலசநாதர் கோயிலும், மகாமகத் தீர்த்தவாரி கோயிலாகும்.
சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் சாலையில் கும்பகோணம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலத்தில் உள்ள இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி. ஊழிக்காலத்தில் உயிர்களை உள்ளடக்கிய அமிர்தகலசம் இத்திருத்தலத்தில் தங்கியதால் திருக்கலயநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலை கோட்டைச் சிவன் கோயிலை என்றும் வழங்குகின்றனர். சாக்கியர்கள் எனப்படும் பௌத்தர்கள் வாழ்ந்ததால் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். கோட்டை சிவன் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர்.
9.கும்பகோணம் பாணபுரீஸ்வரர்
கோயில்
கும்பகோணம்
நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே
சென்றோம். திருப்பணிகண்ட கொடிமரம் மிகவும் அழகாக இருக்கும். முன்மண்டபத்தைக்
கடந்து உள்ளே சென்றால் கருவறையில்
பாணபுரீஸ்வரரைக் தரிசிக்கலாம்
மகாபிரளயத்தின்போது
மிதந்து வந்த அமுதக் கும்பத்தினை எம்பெருமான் உடைக்கத் திருவுளம் கொண்டபோது
இவ்விடத்திலிருந்துதான் கும்பத்தின்மீது பாணத்தைத் தொடுத்ததாகவும், பாணம்
தொடுத்த இடமாதலால் பாணாதுறை என்று அழைக்கப்படுவதாகவும், அதன்
காரணமாகவே இறைவன் பாணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோயில்
திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30, மாலை 4.00 முதல்
இரவு 8.30
10.கும்பகோணம்
அபிமுகேஸ்வரர் கோயில்
முன்பொரு காலத்தில் சிவன் வேட உருவம்
தாங்கி அமுதக்கலசத்தை உடைத்துச் சிதைத்தபோது அதிலிருந்து ஒரு தேங்காய் விழுந்த
இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியதாகவும் அதனடியில் ஒரு சிவலிங்கம் தோன்றியதாகவும்
அதனால் இத்தலம் நாளிக்கேச்சரம் என்று கூறப்படுவதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஆதலால்
இறைவனை நாளிக்கேசன் என்றும் அழைக்கின்றனர்.
மகாமகக்குளத்தின் கீழ்க்கரையில் இக்கோயில்
அமைந்துள்ளது.
இக்கோயிலின்
அருகே இருந்து, மகாமகக்குளத்தினை காணலாம்
ராஜ கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் சென்று . கொடிக்கம்பத்தைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் அபிமுகேசரைக் தரிசனம் செய்யலாம்.
அபிமுகேசரைக்
அடுத்து இறைவி
அமுதவல்லியை தரிசனம் செய்யலாம்
11.கம்பட்ட
விஸ்வநாதர் கோயில்
தஞ்சாவூர்
கும்பகோணம் சாலையில் கும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென்மேற்கு திசையில், மௌனசுவாமி
மட வளைவுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே
சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தியைக்
காணமுடியும்.
அதற்கு
அடுத்து உள்ளே செல்லும்போது அழகான ராஜகோபுரத்தைக் காணலாம். ராஜகோபுரத்திற்கு
அடுத்துள்ள மண்டப முகப்பில் இறைவன், இறைவியும்
காளையின் முன்பாக அமர்ந்த கோலத்தில் உள்ளனர். அருகே விநாயகரும் முருகனும் உள்ளனர்.
பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இங்கு விழுந்ததால் இத்தலத்தை
மாலதிவனம் என்றழைக்கின்றனர். முகப்பின்கீழே மாலதி வனம் என்று எழுதப்பட்டிருக்கும்.
தஞ்சாவூரையும், பழையாறையையும்
சோழர்கள் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சிசெய்த காலத்தில் இங்கு பொற்காசு அடிக்கும்
நிலையங்கள் (கம்பட்டம் என்றால் பொன், வெள்ளி
நாணயங்கள் அடிக்குமிடம் என்று பொருள்) இருந்ததால் மூலவரை கம்பட்ட விஸ்வநாதர்
என்றழைக்கப்படுகிறது
இக்கோயில்
திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30
12.ஏகாம்பரேஸ்வரர்
கோயில்
கும்பகோணம் நகரில் பழைய பேருந்து நிலையத்திற்குச்
செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மிக அருகில் தீர்த்தவாரி
கோயில்களில் ஒன்றான, மிகப்பழமை வாய்ந்த நாகேஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில்
ராகுகால காளியம்மன் சன்னதி உள்ளது. அந்நிலையில் ராகுகாலக்காளியம்மன் கோயில்
என்றாலே பலருக்கு இக்கோயிலைப் பற்றித் தெரியும்.
இக்கோயிலிலுள்ள மூலவர் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.
கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தைக் கடந்து
கருவறைக்குச் செல்லும்போது வாயிலில் விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். இறைவன் சன்னதியிலிருந்தே அம்மனை
தரிசிக்க முடியும்.
இச்சன்னதியில் ராகுகால வேளைகளில் சிறப்பு பூசை நடைபெறுவதாகவும்
அதிகமான எண்ணிக்கையில் வேண்டுதலுக்காகவும், வேண்டுதலை நிறைவேற்றவும் பக்தர்கள் வருவார்கள்.
நிறைவுற்றது.
****************************************************************
பதிவுக்கான செய்திகள் கோயில் விபரங்கள் : |
---|
முனைவர் திரு.ஜம்பு லிங்கம் |
கண்காணிப்பாளர் |
தமிழ் பல்கலைக் கழகம் |
தஞ்சாவூர். |
www.http://drbjambulingam.blogspot.com/ |

2 கருத்துரைகள்:
எனது வலைப்பூவிலிருந்து கட்டுரைகளை வெளியிட்டமையறிந்து மகிழ்ச்சி. தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.
மிக நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .
நன்றி.
(வேதாவின் வலை)
Post a Comment