Wednesday, February 3, 2016

ஜிகா வைரஸ்

அமெரிக்க கண்டத்தில் வேகமாக பரவி பரவும் ஜிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்
இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு ஜிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரஸும் பரவுகிறது.

இந்த வைரஸ் பாதித்த கர்ப்பினிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் தலை சிறியதாக உள்ளது. ஜிகா வைரஸ் ஒருவருக்குப் பரவினால் காய்ச்சல் மட்டும் இன்றி மூட்டு இணைப்புகளில் வலி ஏற்படும். மேலும், கடுமையான தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறது 'உலக சுகாதார நிறுவனம்.'

ஜிகா வைரஸ் குறித்த உலக சுகாதார மையத்தின் அவசரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்பு ஸிகா வைரஸ் காரணமாக சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரை காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ காரணமாக 3 மூன்று முறை சர்வதேச அவசர நிலையை சுகாதார மையம் பிரகடனம் செய்திருந்தது. தற்போது ஸிகா வைரஸ் காரணமாக 4-வது முறையாக அவசநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார மைய பொது இயக்குநர் மார்க்ரேட் ஷான், ஜிகா வைரஸை கண்டறிவதிலும் அதை அழிப்பதிலும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்றார்.

அதே நேரத்தில் ஜிகா வைரஸ் காரணமாக பயணங்கள் மற்றும் வியாபாரங்களை தடை செய்ய தேவையில்லை என்றார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஓலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் காரணமாக, கர்ப்பினிகள் இங்கு வரவேண்டாம் என பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கர்ப்பினிகளை ஜிகா வைரஸ் வேகமாக தாக்குவதால் அவர்கள் இங்கு வரவேண்டாம் என பிரேசில் அமைச்சர் ஜாக்குஸ் வாக்னர் கூறியுள்ளார்.

ஜிகா வைரஸ் - தடுக்கும் வழிகள்:
பிளேவி வைரஸ் என்ற வைரஸ்  குடும்பத்தைச் சேர்ந்தது ஜிகா வைரஸ். 'ஏடிஸ் எஜிப்டி' கொசுகாலை மற்றும் மாலை வேளைகளில்தான் அதிகம் வெளியேவரும். எனவே, காலை 9 மணி வரையும், மதியம் 3 மணிக்குப் பிறகும் ஜன்னல்களைச் சாத்திவிடுவது நல்லது.
வீட்டைச் சுற்றி நீர்த் தேங்காமல், கொசு அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் ஓடுகள். டயர்கள், பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டுள்ள செடித்தொட்டிகள்  என எந்த இடத்திலும் கொசுக்களை அண்டவிடக் கூடாது.
இரவு தூங்கும்போது கை, கால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள். குழந்தைகளை, முதியவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கும் என்பதால், அவர்களுக்கு பிரத்யேகக் கவனம் கொடுப்பது நல்லது. கொசுவலை போட்டுக்கொண்டு படுப்பது நல்லது.
ஏற்கெனவே, சமீபத்தில் மழைக்காலத்தில் காய்ச்சல் வந்து மீண்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடித்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்வது நல்லது.
டெங்கு காய்ச்சலுக்குச் சாப்பிடும் நிலவேம்புக் கஷாயம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பதால், அவ்வப்போது அனைவருமே நில வேம்புக் கஷாயம் குடிப்பது நல்லது.
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நன்றாகச் சுத்தம்செய்து சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வெளி இடங்களில் தண்ணீர் அருந்தாமல்பாதுகாப்பான முறையில் வீட்டில் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரையே அருந்துங்கள்.
சமையல் அறையில் கொசுக்கள் வசிப்பதை அனுமதிக்காதீர்கள். தினமும் சமையலறையை நன்றாகச் சுத்தம்செய்யுங்கள்.
டீ, காபிக்குப் பதிலாக, பழச்சாறு அருந்துங்கள். ஜிகா வைரஸ் மட்டும் அல்ல வேறு எந்தக் காய்ச்சலும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், சாதாரண  காய்ச்சல் வந்தாலும்  நோய் எதிர்ப்புச் சக்தி இயல்பாகவே குறையும். அந்த சமயங்கள் ஜிகா வைரஸ் எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவில் விரைவில் வெயில் காலம் துவங்கவிருப்பதால், ஜிகா வைரஸ் வீரியமாக பரவும் வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், வந்த பின்னர் அவதிப்படுவதைவிட வரும் முன் காக்கும் எளிய வழிகளைப் பின்பற்றுவோம்.
இந்தியாவில் ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து 

இந்நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ''உலகிலேயே முதலாவதாக ஜிகா வைரஸ்-க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த நிறுவனம் நாமக இருக்கலாம். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அரசின் ஆதரவை கேட்டுள்ளோம். இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலும் உதவி செய்ய முன்வந்திருக்கிறது'' என்றார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ''பாரத் பயோடெக் 'ஜிகா' வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வு செய்ய உள்ளோம். இது 'மேக் இன் இந்தியா' தயாரிப்புக்கு ஒரு நல்ல உதாரணம்'' என்றார்.

இந்தியாவில் இதுவரை யாருக்கும் 'ஜிகா' வைரஸ் தாக்குதல் இல்லை. இருப்பினும், இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையான பதிவு.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms